பக்கங்கள்

திருக்குறள்

புதன், மார்ச் 28, 2012

கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமார் குற்றம்சாட்டு !!


கூடங்குளம்: தமிழக அரசு துரோகம் செய்துவிட்டதாக கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.


தமிழகத்தில் கடும் மின்வெட்டால் புழுங்கிக் கொண்டிருக்கின்ற தமிழக மக்கள் ஒவ்வொரு நிமிடமும் விவாதித்துக் கொண்டிருப்பது கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறந்தது சரியா? தவறா ? என்பது பற்றி தான்.

கூடங்குளம் அணு உலை குறித்து ஒரு பிளாஷ் பேக்...

1988ல் அணு மின் நிலையம் அமைப்பதற்கான இந்திய-ரஷ்ய ஒப்பந்தம் கையெழுத்தானது. 1998ல் கூடங்குளத்தில் அணு உலை அமைப்பது என முடிவானது. 2001ல் இதற்காக ரூ.13,121 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2002ல் அணு உலைக்கான காங்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. 2011ல் அணு உலைக்கான பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது.

கூடங்குளம் அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று விஞ்ஞானிகள் உறுதியளித்தனர். மத்திய, மாநில அரசுகளின் ஆய்வுக் குழுக்களும் இதையே தெரிவித்தன. இந்த நிலையில் தான் கடந்த 7 மாதங்களாக அணு உலைக்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

கூடங்குளத்தில் உள்ள சிறுவர்கள், பெரியவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண்கள், பெண்கள் என பலரும் அணுஉலை வேண்டவே வேண்டாம் என்று தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.

கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி இடிந்தகரையில் ஆரம்பித்த இந்த மக்களின் அறவழிப் போராட்டம் மேலும் மேலும் உக்கிரமாகிக் கொண்டே போக, ராதாபுரம் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

ரஷ்ய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அணு உலை மிகவும் பாதுகாப்பானது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியிருந்தார். இதனை போராட்டக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்துவதற்காக அப்துல் கலாம் இந்தூர் சென்றார்.

அப்போது கல்லூரி வளாகத்துக்கு அப்துல் கலாம் வந்தபோது, ஆசாதி பச்சோ அந்தோலன் என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த பலர் திடீரென அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டினர். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். எதிர்பாராத இந்த சம்பவத்தால் கல்லூரி நிர்வாகிகளும், போலீசாரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து கருப்புக் கொடி காட்டிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம் என்ற பதட்டத்தில் உள்ள இடிந்தகரையில் உள்ள போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரிடம் பேசினோம்.

போராட்டம் எந்த நிலையில் உள்ளது ?

கடந்த 16 நாட்களாக 7 பேர் உண்ணாவிர போராட்டத்தை மன உறுதியுடன் நடத்தி வருகின்றனர்.

போராட்டக் குழுவின் கோரிக்கை என்ன?

நாங்கள் அரசிடம் 5 கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்.

1. கைது செய்யப்பட்ட போராட்டக்குழுவினர் அனைவரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்.

2. போராட்டக்குழுவினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குளை வாபஸ் பெற வேண்டும்.

3. இந்த பகுதியில் மக்கள் நலன் கருதி நிலவியல் ஆராய்ச்சிகள் நடத்த வேண்டும்.

4. அதே போல நீரியல் ஆராய்ச்சியும் நடத்த வேண்டும்.

5. ரஷ்யா-இந்தியா போட்டுள்ள ஒப்பந்தத்தில் ஆபத்து ஏற்படும்போது, பொது மக்களுக்கு வழங்க உள்ள ஒப்பந்த நகலை வழங்க வேண்டும்.

கூடங்குளம் அணு உலை ஆரம்பிக்கும்போதே அதை தடுத்து இருக்கலாம். அதை விடுத்து பல கோடி ரூபாய் முதலீடு போட்டுவிட்டு, அணு உலை துவங்கும் நேரத்தில் தடுப்பது முறையா என காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும், மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றதே?

கடந்த 1988ம் ஆண்டு கூடங்குளம் அணுஉலை ஒப்பந்தம் போடப்பட்டது. 1989ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி நாகர்கோவில் வருவதாக இருந்தார். ஆனால் மே 1ம் தேதி நாகர்கோவிலில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தி சிலர் குண்டடிபட்டனர். இதனால் அவர் நாகர்கோவில் வரவில்லை. தனது பயணத்தையே ரத்து செய்தார். இதனால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

ஆனால் அடுத்து வந்த தேவே கவுடா அரசு தான் 2002ல் இந்த திட்டத்தை தூசு தட்டி எடுத்தது. அப்போது முதலே சிறிய அளவிலும், பெரிய அளவிலும் தொடர் போராட்டம் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. அப்போது இந்த மீடியாக்கள் இல்லை என்பதால் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. தற்போது உண்மையை வெளிக்கொண்டுவர பல மீடியாக்கள் இருப்பதால் மக்களிடம் விழுப்புணர்வு அதிகமானது. குறிப்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணு உலை வெடித்து பல லட்சம் பேர் பலியானார்கள். பல ஊர்கள் நாசமாகின. அப்பொழுதுதான் உலகமே விழிப்புணர்வு பெற்றது.

இந்த போராட்டத்தில் நீங்கள் அக்கரை கொள்வது ஏன்?:

என் தாத்தாவும் பாட்டியும் புற்றுநோயால் இறந்து போனார்கள். குமரி மாவட்டம் முழுவதும் புற்றுநோய் பரவி வருகிறது. இந்தப் பேரழிவு நமது சந்ததியினருக்கும் வந்து விடக்கூடாது. போபால் விஷவாயு கசிவு விஷயத்தில் ஆன்டர்சன் எப்படி பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டாரோ, அதேபோல இங்கும் நடக்குமானால், அணு உலையைச் சேர்ந்த ரஷியாக்காரர்கள் அவரவர் நாட்டுக்குப் போய் விடுவார்கள். நாம் தான் தெருவில் நிற்போம்.

கூடங்குளம் அணு உலையில் விபத்து நடந்தால் நாகர்கோவில் வரையுள்ள 15 லட்சம் மக்கள் இரண்டு மணி நேரத்தில் அப்புறப்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசால் இது முடியுமா ?

நானும், என் மனைவியும் வெளிநாட்டில் பணி புரிந்தவர்கள். எங்களுக்கு இப்போது பணம் தேவையில்லை. மக்கள் நலனே முக்கியம். அதற்காகவே எங்களது உயிரை பணயம் வைத்து போராடி வருகின்றோம்.

உங்கள் போராட்டத்தை காவல்துறை ஒடுக்க முயல்வதாக நினைக்கிறீர்களா?

ஆம். காவல்துறை அராஜகம் அதிக அளவில் தான் உள்ளது. குறிப்பாக எங்களை கைது செய்ய வேண்டும் என்று அது துடிக்கிறது. இடிந்தகரையில் இருப்பவர்களை வெளியே விடாமலும், வெளியே இருந்து உள்ளே வருபவர்களை தடுப்பதுமாக உள்ளனர். மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கூட தடுத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

சரி, நீங்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தபோது என்ன உறுதி கொடுத்தார். அதை அவர் நிறைவேற்றினாரா?

அவர் எங்களுக்கு எந்த உறுதிமொழியையும் தரவில்லை. எங்கள் தரப்பு கருத்தை கேட்டார். நாங்களை அதை விளக்கமாக சொன்னோம். அவ்வளவு தான்.

உங்கள் பகுதியில் உள்ள சில பஞ்சாயத்து தலைவர்களை தமிழக அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறித்து உங்கள் கருத்து?

அரசு இது போன்று ஏதாவது செய்து போராட்டக்காரர்களை பிரிக்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது. பன்னாட்டு முதலாளிகளுக்காக வேலையாள் போல வேலை செய்கின்றது. இந்த பகுதி வளர்ச்சிக்கு என 13 பஞ்சாயத்துக்களுக்கு ரூ. 500 கோடி ஒதுக்கி, அதை பிரித்துக் கொடுக்கும் கூட்டம் நடத்தியுள்ளது. இதில் கூடங்குளம், ஊத்தங்குளி, விஜயபாதி போன்ற பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. மேலும், மற்ற பஞ்சாயத்து தலைவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவிட்டு வந்துள்ளனர். இது போன்ற செய்கை மூலம் மக்களுக்கு லஞ்சம் கொடுத்து ஆபத்தான திட்டங்களை அரசே கொடுப்பது எவ்வளவு வேதனை என்பதை நினைத்துப் பாருங்கள்.

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என மத்திய அமைச்சர் நாராயணசாமி 100 சதவீதம் உறுதி அளித்துள்ளார். ஆனால் நீங்கள் தான் பிடிவாதம் பிடிப்பதாக கூறப்படுகின்றதே?

ஜனநாயக நாட்டில் தான் இது போன்ற திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றது. மக்கள் கேட்பது பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. உயிர் சம்பந்தப்பட்டது. டெல்லியில் உள்ளவர்களும், சென்னையில் உள்ளவர்களும் பாதுகாப்பு என்று சொன்னால் உடனே பாதுகாப்பு கிடைத்துவிடாது. அதற்காக பல பணிகளை முறையாக செய்ய வேண்டும்.

ஆனால் இந்த விவகாரத்தை மத்திய அமைச்சர் நாராயணசாமி திசை திருப்புகிறார். நாங்கள் எல்லாம் தீவிரவாதிகளோடு தொடர்பு வைத்துள்ளதாக குற்றம் சாட்டுகிறார். இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருப்பது நாங்கள் அல்ல. மத்திய அரசும், மாநில அரசும் தான்.

கூடங்குளம் அணுஉலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடு ஒரு சேர இருப்பதால் உங்கள் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்கவைக்க ஏதாவது முயற்சி செய்கிறீர்களா?

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேச வேண்டும் என்றால் பணம் கொடுத்தால் தான் பேசுவார்கள் என்று ஒரு காலத்தில் இருந்தது. நாடாளுமன்றத்தில் உள்ள பல உறுப்பினர்கள் கோடீஸ்வர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் பேராட்டக்காரர்களை தேடி வர வேண்டுமே தவிர போராட்டத்தில் பசியோடும், பட்டினியோடும் இருப்பவர்கள் எப்படி போய் அவர்களை சந்திக்க முடியும். ஏழை, எளிய மக்கள், தலித் மக்கள் போன்றவர்கள் வாழ்வாதாரத்திற்காக நடத்தும் போராட்டம் எல்லாம் அவர்களுக்கு தெரியாமல் போனது துரதிஷ்டம்.

கூடங்குளம் அணுஉலையை திறக்க வேணடும் என தமிழகத்தின் மிக முக்கிய கட்சியான திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே?

அவர் தமிழ் மக்களுக்கான தலைவர் அல்ல. தனது குடும்ப நலனை மட்டுமே முன்னிறுத்தி செயல்படும் தலைவர். அவரைப் பற்றி தற்போது பேசாமல் இருப்பது நல்லது.

தங்களுக்கு சொந்தமான பள்ளிக்கூடத்தை ஒரு மர்ம கும்பல் இடித்துள்ளது. அதன் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்களா ?

ஏழை எளிய மக்களுக்கு கல்வி கொடுக்கும் ஒரு கல்விக்கூடத்தை ஒரு தேச விரோத கும்பல் இடித்து நாசம் செய்துள்ளது. இது குறித்து காவல் துறையில் புகார் கொடுத்தோம். ஆனால் புகார் மீது விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இது வேதனையான செயல்.

தமிழக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது?

தமிழக அரசுக்கு நாங்கள் தேவைப்பட்டபோது எங்களுக்கு உதவி செய்தது. எங்களது உபயோகம் முடிந்துவிட்டாதல் எங்களை முடிக்க பார்க்கின்றனர். எங்களை பொறுத்தவரை தமிழக அரசு துரோகம் செய்துவிட்டது.

தமிழக காவல்துறையின் செய்லபாடு எப்படி உள்ளது ?

காவல்துறை ஆரம்பத்தில் எங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தது. தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்த பிறகு எங்களது போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறது. அடக்குமுறையை கையாள்கிறது.

பொதுமக்களுக்கு நீங்கள் விடுக்கும் கோரிக்கை ஏதாவது உள்ளதா?

மத்தியிலும், மாநிலத்திலும் பணக்காரர்கள் தான் ஆட்சி செய்கின்றனர். அவர்கள் மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்படுவதில்லை. உலக பணக்காரர்கள் லாபம் அடையத் தான் பணியாற்றுகினறனர்.

அதனால் மிகவும் ஆபத்தான அணுஉலை போன்ற திட்டங்களை எல்லாம் மக்கள் தலையில் கட்டுகின்றனர். மக்கள் பெருக்கம் உள்ள சென்னை போன்ற இடங்களில் சிறிய விபத்து என்றால் கூட அவர்களை காப்பாற்ற முடிவதில்லை. அப்படி இருக்கும் போது மிகப் பெரிய ஆபத்தை பல லட்சம் மக்கள் உயிரோடு விளையாடும் அணுஉலை போன்ற திட்டங்களில் ஏற்படும் ஆபத்தில் இருந்து அரசு மக்களை எப்படி காப்பாற்ற போகின்றது. மின்சாரம் தயாரிக்க நாட்டில் பல வழிகள் உள்ளது. அதை கண்டுபிடித்து செயல்படுத்த வேண்டும். வெள்ளைக்காரன் வழியில் சென்று அனைவரையும் அரசு அடிமைப்படுத்த வேண்டும் என நினைப்பது தவறானது.

எனவே, தமிழக இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். இல்லை எனில் நமது உரிமை எல்லாம் பறிபோன பிறகு சிந்தித்து பயன் இல்லை. எதிர்காலத்திற்கு தேவையான பாதுகாப்பை இப்போதே உறுதிபடுத்த வேண்டும். மிகவும் ஆபத்தான அணுஉலைகள் இப்போது தேவையில்லை என்பதை வலியுறுத்த வேண்டும் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக