பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், ஜூலை 16, 2012

ஜனாதிபதியை தெரிவு செய்வது எப்படி?

தங்களுடைய எம்.பி(லோக்சபா,ராஜ்யசபா) எம்.எல்.ஏ(சட்டமன்ற உறுப்பினர்)க்களை கொண்டே ஜனாதிபதியை தெரிவு செய்யும். அதாவது ஜனாதிபதி தெரிவு இவர்களின் வாக்கு எண்ணிக்கையில் அமைந்துள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளுக்கு தனித்தனி மதிப்பீடு உள்ளது.
ஒரு உதாரணத்திற்கு தமிழ்நாட்டின் தற்போதைய மக்கள் தொகை 6 கோடி, இதை தமிழ்நாட்டின் மொத்த சட்டமன்ற தொகுதியால் வகுக்க வேண்டும். வகுத்த விடையை 1000(ஆயிரம்)த்தால் வகுத்தால் கிடைக்கும் மதிப்பே ஒரு எம்.எல்.ஏவின் மதிப்பாகும் அல்லது தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் ஆயிரத்தில் ஒரு பங்காகும்.
எ.கா. 6,00,0000 / 234 = 25641.025 / 1000 = 25.641.
இதுபோல் எம்.பி.க்களின் வாக்குகளுக்கும் தனிமதிப்பு உள்ளது. அதாவது ஏற்கனவே வகுத்து வந்த மதிப்பை மொத்த தொகுதிகளால் பெருக்கி அதில் கிடைக்கும் விடையை மாநிலத்தின் மொத்த எம்.பிக்களால்(மாநிலங்களவை+மக்களவை) வகுக்க வேண்டும்.
எ.கா. 25.641 * 234 = 6000 / 21(mp) = 285.7142.
இதுவே ஒரு எம்.பியின் மதிப்பாகும். இதுபோன்று ஒவ்வொரு மாநிலத்திற்கு எம்.எல்.ஏ, எம்.பிக்களின் வாக்குகள் கணக்கெடுக்கப்படும்.
நம்நாட்டில் எம்.பி.க்கள், மற்றும் எம்.எல்.ஏ.க்களின் மொத்த வாக்கு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882. இதில் யார் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவர். எம்.பி.க்கள் டெல்லி நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் நாளில் வாக்களிக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் மாநில தலைமை செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வேண்டும்.
எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கும் போது 2 முறை வாக்களிக்கலாம். இதில் ஒருவருக்கு முதல் வாக்கும், மற்றொருவருக்கு 2வது வாக்கும் போட வேண்டும். வாக்குச் சீட்டு முறையில் இது நடைபெறும். அதிக வாக்குகள் பெறுபவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். முதல் சுற்றில் 50 சதவீதத்துக்கு மேல் ஒரு வேட்பாளர் வாக்கு பெறாவிட்டால் 2வது சுற்று வாக்குகள் எண்ணப்படும். முடிவில் அதிக வாக்குகள் பெறுபவர் ஜனாதிபதி ஆவார்.

செவ்வாய், ஜூலை 03, 2012

மாண்புமிகு வரப்போகும் ஜனாதிபதியின் ” யோக்கியதாம்சங்கள் “…..





அடுத்ததாக வரக்கூடிய ஜனாதிபதியை -
தேர்ந்தெடுக்கும் உரிமை தான் நமக்கு கிடையாது !
atleast அவரைப் பற்றி தெரிந்து கொள்ளும்
உரிமையாவது உண்டல்லவா ?
அதை யாரும் பறித்துக்கொள்ள முடியாதே -
இப்போதைக்கு !
மாண்புமிகு அடுத்த ஜனாதிபதியைப் பற்றிய
சில விவரங்கள் – நல்லதும் கெட்டதும் !
வயது 77. படிப்பு  MA,BL.
பரம்பரைத் தொழில் -வேறென்ன ? அரசியல் தான் !
முழுநேர அரசியல்வாதி  -
அதாவது பிழைப்பே அரசியல் தான் !
ஆமாம் – தந்தையும் வங்காளத்தில் காங்கிரஸ் தலைவர் !
வயது 34 ஆகும்போது முதல் தடவையாக,
ராஜ்யசபா உறுப்பினர் ஆனார்.
1973ல் முதல் தடவையாக மத்திய அமைச்சர் ஆனார்.
1982-84ல் முதல் தடவையாக நிதி அமைச்சர்.
அப்போதே இவர் நிதியமைச்சராக இருந்தபோது,
இப்போதைய பிரதமர் ம.மோ.சிங் இவருக்கு  கீழே –
ரிசர்வ் வங்கியின் கவர்னராக பணியில் இருந்தார் !
( இவர் ஏன் பிரதமரை மதிப்பதில்லை
என்பது இப்போது  சுலபமாகப் புரியுமே !)
இந்திரா காந்தி அகால மரணம் அடைந்தபோது,
பிரதமர் பதவியை இவர் கைப்பற்ற முயற்சி செய்தார் -
விளைவு, ராஜீவ் காந்தியால் கட்சியை விட்டு
வெளியேற்றப்பட்டார்.சமாஜ்வாதி காங்கிரசைத் துவக்கினார்.
இவரை புத்திசாலி என்பதை விட -
சாமர்த்தியசாலி என்று கூறலாம்.
இவரது நிலைத்த முன்னேற்றத்திற்கு காரணமே இவரது
ஒரு வித்தியாசமான, வேறுபட்ட  குணம் தான்.
தனக்கு போட்டியாக இருப்பவரகளை மிரட்டி பணிய வைக்க
முயற்சிப்பார். அவர் பணியவில்லை என்றால் -
சற்றும் தயங்காமல் -
இவர் அவருக்கு பணிந்து போய் விடுவார் !
எனவே, ராஜீவ் காந்தியிடம் சரணாகதியாகி
மீண்டும் முதலில் கட்சியிலும், பிறகு
மந்திரி சபையிலும் இடம் பிடித்தார் !
மீண்டும் ஏறுமுகம்.
திட்டக்குழு துணைத்தலைவர், வெளியுறவுத்துறை
அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், கடைசியாக
நிதி அமைச்சர் பதவிகள் !
அடக்கமாக இருப்பது போல் இருந்தாலும், என்றைக்கு
இருந்தாலும் இவர் பார்வை பிரதமர் பதவி மீது தான்.
இவருக்கு கீழ் அதிகாரியாகப்  பணி புரிந்த மன்மோகன் சிங் -
இவரை விட உயரமான இடத்தில் –
பிரதமராக இருப்பது இவருக்கு தீராத எரிச்சல்.
என்றைக்கு இருந்தாலும், ராகுல் காந்தி பிரதமர் ஆவதில்
இவரால் இடைஞ்சல் ஏற்படக்கூடும் என்பதால் இவரை
வழியிலிருந்து  அகற்ற, வேண்டா வெறுப்பாக
சோனியா அம்மையார் இவர் பெயரை குடியரசுத்தலவர்
பதவிக்கு பரிந்துரைத்திருக்கிறார் !
இது வரை அவர் பற்றிய வெளிப்படையான
அறிமுகம் பார்த்தீர்கள்.
இனி சொல்லப்போவது அதிகம் வெளியில் தெரியாத
பெருமைகள் -
இந்திரா அம்மையார் எமர்ஜென்சியை கொண்டுவந்தபோது
இவர் அவருக்கு மிகவும் உறுதுணையாக உள்துறை
அமைச்சகத்தில் பணி புரிந்தார். அடக்குமுறையில்
சஞ்ஜய் காந்தியுடன் கைகோத்தார். இவர் மீது பல
புகார்கள் கூறப்பட்டன.
முக்கியமான புகார்களில் ஒன்று அப்போது
இந்திராவை காந்தியை சந்தோஷப்படுத்த,
ஜெய்பூர் மகாராணி காயத்ரி தேவியை
திகார் சிறையில் வைத்து வதைத்தது !
எமர்ஜென்சி அக்கிரமங்கள் பற்றி எழுப்பப்பட்ட சுமார்
46,000 புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான
நீதிபதி ஷா கமிஷனின் இறுதி அறிக்கையில், பதவியை
துஷ்பிரயோகம் செய்ததாக இவர் மீது கடுமையாக குற்றம்
சாட்டப்பட்டு இருந்தது.
ஆனால் விசாரணை அறிக்கை செயல்படுவதற்குள்
மீண்டும் இந்திரா காந்தி அதிகாரத்திற்கு வந்து விட்டதால்
அறிக்கை குப்பைக்கூடைக்கு போய் விட்டது.
ஷா கமிஷனில் இவருக்கு எதிராக சாட்சி கூறிய அதிகாரிகள்
பழிவாங்கப்பட்டனர் - தூக்கி எறியப்பட்டனர்.
2009ல் ஈழத்தில் ராஜபக்சே அரசு லட்சக்கணக்கில்
தமிழர்களை திட்டமிட்டு, கொத்து கொத்தாக 
அழித்துக்கொண்டிருந்தபோது -
இவர் இங்கே வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்து
சகல விதத்திலும் ராஜபக்சே அரசுக்கு ஆதரவு கொடுத்தார் !
இவர் நிதியமைச்சராக இருந்தபோது தான் -
உள்நாட்டில் விலைவாசி வானளவு உயர்ந்தது !
டாலர் கையிருப்பு  படுபாதாளம் சென்றது !
ரூபாயின் மதிப்பு இதுவரை வரலாற்றில் இல்லாத
அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது.
பெட்ரோல் விலை 11 முறை உயர்ந்தது.
தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்தது.
பொருளாதாரம் படுவீழ்ச்சி அடைந்தது.
பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டும்
கோடிக்கணக்கில் சலுகைகள் தரப்பட்டன.
அவர்களுக்கான வரிகள் தளர்த்தப்பட்டன.
சர்வதேச தரமதிப்பு பட்டியலில் இந்தியாவின்
மதிப்பு குறைக்கப்பட்டது.
இன்னும் எத்தனை பொருளாதார மேதைகள்
வந்தாலும் இதை சீர்படுத்த எத்தனையோ
ஆண்டுகள் ஆகும்.
கருப்புப் பணத்தை கண்டெடுக்க உருப்படியாக
எதுவும் செய்யப்படவில்லை.
வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்திய
பணத்தை கொண்டு வர தீவிர முயற்சி எதுவும்
மேற்கொள்ளப்படவில்லை.
அர்த்தமில்லாத சாக்குபோக்குகள் சொல்லியே
காலத்தைக் கழித்தார்!
ஜெர்மனியிலிருந்தும், ஸ்விஸ் நாட்டிலிருந்தும் கிடைத்த
பெயர்களை, கோர்ட்டில் கூட வெளியிட மறுத்தார்.
நிதியமைச்சராக படுமோசமாகப் பணியாற்றிய ஒருவரை
வீட்டுக்குத் துரத்துவதற்கு பதிலாக, இந்த நாட்டு அரசியல்
பிரமோஷன் கொடுத்து ஜனாதிபதி ஆக்குகிறது !
பல மத்திய அமைச்சர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்
பலத்த விளம்பரம் பெற்றாலும்,
இவர் மீதான சில குற்றச்சாட்டுகள் மட்டும் எப்படியோ
அமுக்கப்பட்டு – விளம்பரம் பெறாமல் பார்த்துக்
கொள்ளப்பட்டன.
அப்படியும் – குடியரசுத் தலவர் பதவிக்கு இவர் பெயர்
பரிந்துரை செய்யப்பட்டவுடன், டீம்  அண்ணா குழுவினர் -
இவர் மீதான, நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும்
சில குற்றச்சாட்டுகளை நினைவுறுத்தி,  
அவற்றின் மீது உடனடியாக, சுதந்திரமான விசாரணை
நடத்தப்பட வேண்டும் என்று வற்புறுத்தினர்.
அதில் ஒன்று -
ஆப்பிரிக்காவின் “காணா” நாட்டிற்கு உதவி செய்வதற்காக
“ஹராரே” திட்டத்தின் கீழ் அரிசி அனுப்ப வேண்டிய
விவகாரத்தில், இந்திய அரசு உணவுப் பொருள் கார்பொரேஷன்
மூலமாக அரிசி அனுப்புவதற்கு  பதிலாக, தனியார்
முதலாளிகளுக்கு அனுமதி கொடுத்த வகையில்
சுமார் 2,500 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும்,
இதில் இந்திய வெளியுறவுத் துறைக்கு (இவர் தான் அப்போது
அமைச்சர் ) பெரிய அளவில் தொடர்பு இருப்பதாகவும்
“காணா” அரசு புகார் கூறி இருந்தது. இது பற்றி
விசாரணை நடத்தக் கோரி காணா அரசு விடுத்த கோரிக்கை -
இதுவரை கண்டு கொள்ளப்படவே இல்லை !
மற்றொன்று  -நேவீ வார் ரூம் லீக் என்று கூறப்பட்ட -
“ஸ்கார்பென்” நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கும் விஷயத்தில்,
இவர் ராணுவ அமைச்சராக இருந்தபோது நிகழ்ந்த
500 கோடி ரூபாய் ஊழல். இது ஜேம்ஸ்பாண்ட் கதைகளை
எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடும் மர்மக்கதை !
2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய கடற்படைக்காக
ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க, பிரான்ஸ் நாட்டு
நிறுவனம் “தேல்ஸ்” உடன் செய்து கொள்ளப்பட்ட
ஒப்பந்தத்திற்கு இவர் ராணுவ அமைச்சர் என்கிற முறையில்
அனுமதி அளித்திருக்கிறார். இந்த நிறுவனம் லஞ்சம்
கொடுத்து ஆர்டர் பெறுவதில் உலகப் புகழ்பெற்ற நிறுவனம் !
ஏற்கெனவே மலேசியா, தைவான், தென் ஆப்பிரிக்கா ஆகிய
நாடுகளில் லஞ்சம் கொடுத்த விவரங்கள் வெளியாகி
இருக்கின்றன.
தென் ஆப்பிரிக்க குடியரசின் துணைத்தலவர் ஜாக்கப் ஹூமா,
இந்த நீர்மூழ்கி கப்பல் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கியது
நிரூபணமாகி 15 வருட சிறைத்தண்டனை பெற்றிருக்கிறார்.
இந்தியாவிற்கு நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதில்
500 கோடி ரூபாய் லஞ்சமாக கைமாறி இருக்கிறது என்று
முன்பு “அவுட்லுக்” பத்திரிகை ஆதாரங்களுடன் தகவல்
வெளியிட்டிருந்தது. அது வெளியிட்டிருந்த ஒரு மின் அஞ்சல்
நீர்மூழ்கிக் கப்பல் நிறுவனத்தின் CEO -
இந்திய தொழிலதிபர் அபிஷேக் வர்மாவுக்கு அனுப்பியது.
அதில் ஸ்கார்பென் ஒப்பந்த விலையில் 4 % தொகையை
தருவதாக நாங்கள் உறுதி செய்கிறோம் என்று
குறிப்பிட்டிருக்கிறது.  6 நீர்மூழ்கிக் கப்பல்களின்
மொத்த விலை சுமார் 19,000 கோடி. இந்திய கடற்படை
நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் ஒப்பந்தம் தங்கள்
நிறுவனத்திற்கே கிடைக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்ட
முடிவை எடுப்பவர்களுக்காகவும், அதனை ஏற்பாடு
செய்து கொடுப்பவர்களுக்காகவும் இந்த கமிஷன்
தொழிலதிபர் அபிஷேக் வர்மாவிற்கு அளிக்கப்படும் என்று
மின் அஞ்சல் கூறுகிறது.
இது தொடர்பாக, 2007ஆம் ஆண்டு வழக்கறிஞர்
பிரஷாந்த் பூஷன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு
பொதுநல வழக்கு தொடர்ந்திருக்கிறார். அது இன்னும்
நிலுவையில் கிடக்கிறது.( 5 ஆண்டுகள் தானே ஆகின்றன -
அதற்குள்ளாக விசாரணைக்கு வந்து விடுமா என்ன ?
அதுவும் சம்பந்தப்பட்டவர்  யார் ? அவரது பின்னணி
என்ன ? இவற்றை எல்லாம் யோசிக்க வேண்டாமா ?)
இவர் ஜனாதிபதியாகி விட்டால் -
அரசியல் சட்ட விதிகளின்படி, ஜனாதிபதி பதவியில்
இருக்கும் வரை இவர் மீதான குற்றச்சாட்டுகள் மீது
எந்தவித  மேல் நடவடிக்கையும் எடுக்க முடியாது.
இப்போதே வயது 77. ஐந்து வருடங்கள் பதவி முடிந்து
மீண்டும் இவர் சாதாரண குடிமகனாக வெளி வரும்போது,
இவர் வயது  82 ஆக இருக்கும்.  
அதற்குப் பின்னரா நடவடிக்கை  ?
முதிர்ந்த ஜனநாயக நாடுகளில், பதவியில் உள்ளவர்கள்
மீது ஊழல் புகார் வந்தால் -  சுதந்திரமான
முறையில் விசாரணை நடைபெறுவதற்காக,
விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை அவர்கள்
தங்கள் பதவியை விட்டு விலகி நிற்பார்கள்.
நம் நாட்டில் யார் மீதாவது ஊழல் புகார்கள் இருந்தால் -
அதிலிருந்து அவர்கள் தப்பிக்க இந்திய அரசியலில்
ஒரு புது வழி உண்டாக்கப்பட்டு இருக்கிறது.
ஒன்று அவர்களை கவர்னர்  ஆவது – அல்லது
ஜனாதிபதி ஆவது !
இனி இவர் ஜனாதிபதி ஆவதை யாரும் தடுக்க முடியாது.
இவர் ஜனாதிபதி ஆகி விட்ட பிறகு நான் இதையெல்லாம்
எழுதினால் – நாட்டின் முதல் குடிமகனை அவமதிப்பது
போல் ஆகி விடும் அல்லவா ?  அதற்காகத்தான்
அவசரமாக இப்போதே, அவர் சாதாரண குடிமகனாக
இருக்கும்போதே  எழுதுகிறேன்.
என்ன இருந்தாலும்  பதவிக்கு மதிப்பு
கொடுக்க வேண்டும் அல்லவா  ???  !!!நன்றி காவிரி மைந்தன்