பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், ஜூலை 15, 2013

கவிதை என்றால் என்ன ?

அகநாழிகை பொன்வாசுதேவன் .

வாசிப்பின் ஆரம்ப நிலையில் இருந்த காலம் அது. என் வாசிப்புத் தேர்வுகளை செழுமைப் படுத்தியதிலும், என் எழுத்தினை பண்படுத்தியதிலும் நான் வாசித்த புத்தகங்களே பேருதவியாக இருந்தன. புத்தகங்கள் படிக்க சலிப்பதேயில்லை எப்போதும்.. அன்றும் இன்றும் என்றும் அப்படித்தான்.

கவிதை என்றால் என்னவென்ற குழப்பங்கள் நிறைய இருந்த காலம் அது. கவிதையென்று நினைத்து எழுதுகின்ற ஒன்று எப்போது கவிதையாக உருக்கொள்கிறது? அதில் கவித்துவம் என்கிற விஷயம் இருக்கிறதா? எழுதுகிற எல்லாமே கவிதைகள்தானா? என்ற கேள்விகள் எனக்குள் எழுப்பி என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. எனக்கு முழுமையான திருப்தியைத் தருகிற ஒன்றையே நான் பத்திரிகைகளுக்கும், பிரசுரத்திற்கும் அனுப்புகிற மனத்திடத்தை நான் கொண்டிருந்தேன். இப்போதும் எனக்கு முழுமையாகத் தோன்றாத ஒன்றை கவிதையென்ற பெயரில் எழுதித்தள்ள நான் விரும்புவதில்லை.

எந்த ஒரு கலைப்படைப்பும் உணர்வுகளைக் கடத்துதல்தான். மழை பெய்கிறது, நெருப்பு சுடுகிறது என்று எழுதினால் அதே உணர்வும், வலியும் வாசிக்கிறவர்களும் உணரத்தக்கதாக ஒரு கவிதை இருக்க வேண்டும். கவிதை என்றால் என்ன என்பதில் எனக்கு மிகச்சரியான ஒரு தெளிவைத் தந்ததாக நான் நினைக்கிற ஒரு பத்தியை இங்கு பகிர்ந்திருக்கிறேன். கவிதை சார்ந்த ஒரு கோட்பாட்டை எனக்குள்ளாக ஏற்படுத்தி வரிகள் இவை. எனது கவிதைகளை ஒழுங்கு செய்து மீண்டும் மீண்டும் திருத்தி எழுதி, வார்த்தைச் செறிவோடும், மௌனம் வேண்டிய இடத்தில் வார்த்தைகளற்றும் எழுத முற்படுவதற்கான ஊட்டத்தைத் தந்ததில் இப்படியான வாசிப்புகளுக்கு முக்கியத்துவம் உண்டு. அதுவே என்னால் எந்த விஷயத்தையும் கவிதையாகப் பார்க்கவும் பேசவும் முடிகிறது. பெரும்பாலும் படிமக் கவிதைகளையே எழுதுகிற எனக்கு அதை உணர்வுபூர்வமாக உள்வாங்கி வெளிப்படுத்தி, அதை வாசிக்கிறவர்களையும் உணரச் செய்கிற வித்தையை நான் இப்படியான வாசிப்புகளின் வழியாகத்தான் கற்றேன்.

‘காலச்சுவடு‘ இதழை ஆரம்பித்து எட்டு இதழ்கள் வரை வெளிக்கொண்டு வந்த சுந்தர ராமசாமி அதைத் தொடர்ந்து கொண்டு வர முடியாமல் சிலகாலம் நிறுத்தினார். பிறகு 1991 ல் காலச்சுவடு ஆண்டு மலர் என்ற பெயரில் சிறப்பிதழைக் கொண்டு வந்தார். மிக முக்கியமான தொகுப்பு அது. ஆகச்சிறந்த படைப்புகளுடனும், தேர்ந்த படைப்பாளிகளின் படைப்புகளோடும் வெளியானது அந்த சிறப்பிதழ்.

அந்த இதழில் கவிஞர் மு.அப்பாஸ் எழுதிய ‘வரைபடம் மீறி‘ கவிதைத் தொகுப்புக்கு கவிஞர் ராஜ சுந்தரராஜன் ஒரு விமர்சனக் கட்டுரை எழுதியிருந்தார். அதில், கவிதை என்றால் என்ன, எப்படி வாசித்தறிய வேண்டும், ஒரு கவிதையில் என்னவெல்லாம் இருக்க வேண்டியது அவசியம் என்பது பற்றிய ஒரு சிறு பத்தி எழுதியிருந்தார். இதுதான் கவிதை குறித்த எனது மங்கலான சித்திரத்தை ஓரளவு தெளிவாக்கிய ஒன்று. திரும்பத்திரும்ப இதை பலமுறை வாசித்தேன். கவிதை பற்றி ஏதோ புரிந்தது போல இருந்தது. பல வருடங்களுக்குப் பிறகும் இந்த கட்டுரையை வாசித்திருக்கிறேன். கவிதை குறித்த ஒரு கோட்பாடாகவே இதைக் கூறலாம் என்று நம்புகிறேன். அப்படி நான் வாசித்ததை உங்களோடும் பகிர்ந்து கொள்ள விருப்பம். அதனால், அப்புத்தகத்தை தேடியெடுத்து இப்போது தட்டச்சிட்டு உங்களுக்குப் பகிர்கிறேன். இப்போது தட்டச்சிடும்போதும் வாசிக்கையில் என்றைக்கும் பொருந்துகிற கவிதைக்கான கோட்பாடாகவே இது தோன்றுகிறது. வாசிப்பின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கும், கவிதையென்பதை என்னவென்று அறிந்து கொள்ளும் ஆர்வமிருப்பவர்களுக்கும் முக்கியமானதொரு பதிவு இது.



கவிஞர் மு.அப்பாஸ் எழுதிய ‘வரைபடம் மீறி‘ கவிதைத் தொகுப்புக்கு 
கவிஞர் ராஜ சுந்தரராஜன் ஒரு விமர்சனக் கட்டுரையின் ஒரு பகுதி 

(காலச்சுவடு - ஆண்டு மலர் - 1991 -ல் வெளியானது.)


கலை, அதன் வடிவம் எதுவாக இருந்தாலும் சரி. உணர்வின்பாற்பட்ட ஒன்று. கவிதையும் ஒரு கலை வடிவம் என்கிறதால் உணர்வின்-பாற்பட்டே இருந்தாக வேண்டும். ஆனால் கவிதையின் துலக்குவாயாக அமைவது மொழி. மொழியோவென்றால் அறிவின்பாற்பட்ட ஒன்று. ஆக, அறிவின்பாற்பட்ட ஒரு கருவியைக் கொண்டு உணர்வின்பாற்பட்ட ஒரு கலை வடிவம் எவ்வாறு உருவெடுக்கிறது?

ஓவியம் ஒரு பார்வையாளனுடைய அல்லது இசை ஒரு கேள்வியாளனுடைய உணர்வை நேரடியாகச் சென்று தொடுவது போல கவிதைக்கும் வாசகனுடைய உணர்வுக்கும் ஒரு நேரடித் தொடர்பு இல்லவேயில்லை. இடையில் அறிவு குறுக்கிடுகிறது. கவிதை, இதனால் ஊடோடி உணர்வை எட்ட வேண்டிய சிக்கலுக்குள் செல்கிறது.

அறிவு குறுக்கிடுகிற காரணத்தால், அதன் அடிப்படைத் தேவையான சொல்நிலை அர்த்தம் (Verbal Level Meaning) நிறைவேறுமாறு, முதலில் கவிதை தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அடுத்து, தன் அணிநலன்களும் தர்க்க விசித்திரங்களும் உணர்வோடு உறவாட, கவிதை தன்னைக் கவிதையாக நிலைநாட்டிக் கொள்கிறது. அதன்பிறகு, மீண்டும் அறிவைத் துணைக்கழைத்து, தன் உள்நிலை அர்த்தங்களை - அப்படி ஏதாவது உண்டுமானால் - வெளிப்படுத்தி, தன் மகத்துவத்தை நிறுவுகிறது.

ஆகவே, 1. சொல்நிலை அர்த்தம்  2. உணர்வுக் கூறுகள் 3. உள்நிலை அர்த்தங்கள் என்று இம்மூன்றும் இருக்க வேண்டியது கவிதையின் அவசியமாகும். இதுகளில் உள்நிலை அர்த்தங்கள் இல்லாவிட்டாலும் குற்றமில்லை. முன்னிரண்டு கூறுகளும் தவறாமல் இருந்தாக வேண்டும்.

இதையெல்லாம் கவனம் கொள்ளாமல் கவிதை பண்ண முற்படுகிற பலரும் தோற்றுத்தான் போகிறார்கள். புலம்பல், கொக்கரிப்பு முதலிய மெய்ப்பாட்டுக் கழிவுகளாகவும் வாரிக் கொட்டிய தத்துவக் கக்கல்களாகவும் நேர்ந்து விடுகிறது அவர்களுடைய எழுத்து வெளிப்பாடுகள்.



ராஜ சுந்தரராஜன்