பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், மார்ச் 19, 2012

கூடங்குளம் மக்களை ஒடுக்க களத்தில் இறங்கியது செயா அரசு!

கூடங்குளம் மக்களை ஒடுக்க களத்தில் இறங்கியது செயா அரசு! நடப்பது என்ன?


நேற்று வரை சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தமிழர்களின் வாக்குகளைப் பொறுக்குவதற்காக நயவஞ்சக நாடகமாடிய தமிழக முதல்வரும் அ.தி.மு.க. தலைவியுமான செயலலிதா தனது பார்ப்பன பாசிச முகத்தை இன்றே காட்டத் துவங்கி விட்டார்.
இரசிய நாட்டின் உதவியுடன் இந்திய அரசால் தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள, தமிழக மக்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் ஒரேடியாக உலை வைக்கக் கூடிய கொலைகார கூடங்குளம் அணுஉலைகளை திறக்க தமிழக அரசின் அமைச்சரவை இன்று(19.03.2012) முடிவெடுத்துள்ளது. கூடங்குளத்தில் அ.தி.மு.க. கொடிக் கம்பங்களும் சின்னங்களும் மக்களால் அழிக்கப்பட்டன. இதனையொட்டி, கூடங்குளத்தில் 10 மாவட்ட டி.எஸ்.பி.க்கள், காவல்துறையினர் என பல்லாயிரக்கணக்கிலான காவல்துறையினர் காலை முதல் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
இடிந்தகரை செல்லும் அத்தனை சாலைகளையும் காவல்துறையினர் முடக்கி வைத்துள்ளனர். இப்பகுதிகளில் அவசர அவசரமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக்குழுவில் அங்கம் வகிக்கும் வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன், இராஜாங்கம் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து தனது கைது நடவடிக்கைகளை காவல்துறையினர் தொடங்கினர். மாலை 6 மணியளவில் பாதிரியார் சுசீலன் தலைமையிலான குட்டப்புழி கிராம மக்களை கைது செய்து 3 பேருந்துகளில் இழுத்து சென்றது காவல்துறை.
மேலும் இப்பதிவு எழுதப்படும் இரவு 10 மணிவரை, இடிந்தகரையில் போராடும் மக்கள் மற்றும் ஊர் தலைவர்கள் உள்ளிட்ட 510 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதாக கண்ணோட்டம் செய்திக் குழுவிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன. கைது செய்யப்பட்ட முக்கியத் தலைவர்கள் நெல்லை எஸ்.பி. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளனர். வழக்கறிஞர்களும் உணர்வாளர்களும் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் இன்று இரவுக்குள் முக்கியத் தலைவர்கள் உள்ளிட்ட பெரும்பான்மையானவர்களைக் கைது செய்ய காவல்துறை மும்முரமாக இயங்குவதாக செய்திகள் வருகின்றன.
இந்நிலையில், மக்கள் விரோத இக்கைது நடவடிக்கைகளைக் கண்டித்து, போராட்டக் குழுத் தலைவர் முனைவர் சுப.உதயக்குமார் தலைமையில் இடிந்தகரையில் சாகும் வரையிலான உண்ணாப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, கூடங்குளம், இடிந்தகரை பகுதிகளிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகப்பெரும் எழுச்சியுடன் குழந்தைகளும், பெண்களுமாக இடிந்தகரையில் தொடர்ந்து திரண்டு வருகின்றனர்.

காவல்துறையினர் வாகனங்கள் எதையும் அனுமதிக்காத நிலையில், கடல் வழியே மீனவர்கள் இடிந்தகரைக்குச் படகுகள் மூலம் வந்து கொண்டுள்ளனர். அவர்களைத் தடுக்க இந்தியக் கடலோரக் காவல் படையும், ரோந்துக்கு கடலோர காவல்படை ஹெலிகாப்டரும் களமிறக்கப்பட்டுள்ளது. சிங்கள இனவெறிக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுகின்ற தமிழர்களை பாதுகாக்க வக்கில்லாத கடலோரக் காவல்படை, இன்று தமிழ்நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக இரத்தவெறியுடன் அலைகிறது.
மேலும், பல்லாயிரக்கணக்கில் திரண்டு வரும் மக்களை பார்த்து காவல்துறையினரும் அச்சமடைந்துள்ளனர். பதட்டமான சூழலைத் தொடர்ந்து நாளை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் முழு அடைப்புக்கு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
பரமக்குடியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும், தேனியில் முல்லைப் பெரியாறு அணை காக்க எழுச்சியுடன் திரண்ட மக்கள் மீதும் கொடூரத் தாக்குதலைகளை நடத்திய தென் மண்டல காவல்துறை ஐ.ஜி. ராஜேஸ்தாஸ், கேரளாவில் தமிழர்கள் மீது மலையாளிகள் தாக்குதல்கள் நடத்தியதைக் கண்டித்து தமிழகத்தில் போராடிய உணர்வாளர்களை கொடும்பிரிவுகளில் கைது செய்ய உத்தரிவிட்ட தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யும் மலையாளியுமான ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கூடங்குளம் மக்கள் மீது எவ்வகையில் தாக்குதல் நடத்தி, மக்களின் இரத்தத்ததை இந்திய அரசுக்கும் பார்ப்பன பாசிஸ்டு செயாவுக்கும் பரிசளிப்பது என்பது குறித்து, நெல்லையில் கூடி கொலைவெறி ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கேரளாவில் இருந்தும் கூடுதல் காவல்துறையினர் அழைக்கப்படுவதாக தகவல்.

அமைதி வழியில் போராடும் மக்கள் மீது தமிழக அரசு தொடுத்துள்ள அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. காங்கிரசுப் பொறுக்கிகளுடன் கூட்டுச் சேரந்து அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஓட்டுப் பொறுக்கி பிழைப்பு நடத்துவதற்கு பார்ப்பன செயா இப்படி செய்வதாகவும் சிலர் சொல்கிறார்கள். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அமைப்பாளர்கள் வழக்கறிஞர் சுரேஷ், பாலமுருகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், மக்கள் மீதான தமிழக அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள் சாலியன் வாலபாக் படுகொலைகளை நினைவுபடுத்துவதாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மக்கள் வீதிகளில் திரண்டால் டாங்கிகளை கைகளால் புரட்டுவார்கள், ஹெலிகாப்டர்களை கல்லெறிந்து வீழ்த்துவார்கள் என்றார் கியூபப் புரட்சியாளர் பிடல் காஸ்டத்ரோ. கூடங்குளத்தில் இது தான் நடக்கும். மக்கள் போராட்டங்கள் தோற்றதாக இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக