பக்கங்கள்

திருக்குறள்

செவ்வாய், மார்ச் 13, 2012

மக்கள் விரோத நீதிமன்றங்கள்.


 








Madras-High-Court

 The American people must be made the masters and not the servants of even the highest court in the land.
Theodore Roosevelt
 அமெரிக்க மக்கள் இந்நாட்டின் உச்ச பட்ச நீதிமன்றத்திற்குக் கூட எஜமானர்களே தவிர, சேவகர்கள் அல்ல. இதுதான் தியோடர் ரூஸ்வெல்ட் 1912ல் சொல்லியது.
 ஆனால் இன்றைய நீதிமன்றங்கள் மக்களுக்காக செயல்படுகின்றனவா என்றால் இல்லவே இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. மக்கள் ஆட்சி என்று பெயருக்கு வைத்துக் கொண்டு, பெரும்பாலும், மக்கள் விரோத தீர்ப்புகளையே நீதிமன்றங்கள் வழங்குகின்றன.
 இன்று பரபரப்பாக தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருக்கும் ஒரு தீர்ப்பை குறித்துதான் இந்தப் பதிவு.
 தமிழக அரசு பள்ளிக் கட்டணத்தை சீரமைக்க நியமித்துள்ள கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இந்தத் தீர்ப்பை குறித்து ஆராயும் முன், இவ்வழக்கு பற்றிய பின்புலத்தை பார்ப்போம்.

12

அரசு அதிகாரிகள் மாமூல் வாங்குவதில் ஒரு முறை உண்டு. போக்குவரத்து ஆணையராக ஒருவர் நியமிக்கப் படுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.   அவர் வந்தவுடன், ஓசூர் போக்குவரத்து செக்போஸ்டில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளரை மாற்றி, போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ஒரு டம்மி போஸ்டில் போடுவார்.   ஓசூல் செக்போஸ்டில் ஒரு நாள் வசூல் 4 முதல் 7 லட்சம் வரை.   உடனே மாற்றப் பட்ட அந்த அலுவலர், அடித்துப் பிடித்துக் கொண்டு போக்குவரத்து ஆணையரை சந்தித்து தன்னை மாற்றாமல் இருப்பதற்கு ஒரு பெரிய தொகையை வழங்குவார். வழங்கியதும் அந்த மாறுதல் ஆணை ரத்து செய்யப் படும்.
 இது போலத்தான் தமிழக அரசு கொண்டு வந்த பள்ளிக் கட்டண ஒழுங்கு முறை சட்டம் 2009.   சட்டம் கொண்டு வந்து அச்சட்டத்தின் படி, கோவிந்தராஜன் கமிட்டி தனது பரிந்துரைகளை அளித்திருந்தாலும், இன்று வரை அது அமல்படுத்தப் படவில்லை என்பது தான் இதில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம்.
 இந்தக் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்தாமல் இருப்பதற்கு, ஒரு பெரிய தொகையை ஆளும் வர்க்கத்தை சேர்ந்த கவித்துவமான அதிகார மையம் பெற்றிருப்பதாகவும், அதை வசூல் செய்து தந்தது உளவுத் துறையின் உயர் அதிகாரி என்றும் தகவல்கள் கூறுகின்றன.
 எதற்காக இந்த சட்டத்தை கருணாநிதி அரசு கொண்டு வந்ததோ தெரியவில்லை, ஆனால் இச்சட்டத்தின் படி அமைக்கப் பட்ட நீதியரசர் கோவிந்தராஜன், தனது பணியை செவ்வனே செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 நீதியரசர் கோவிந்தராசன் கமிட்டி ஒரு விரிவான கேள்வி தொகுப்பை தயார் செய்து தமிழகத்தில் உள்ள 10934 பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளது. இவற்றுள் 10233 பள்ளிகள் பதில் அனுப்பியுள்ளன. அந்தக் கேள்விகள் என்னவென்றால், ஒரு பள்ளியில் எத்தனை மாணவர்கள், எத்தனை வகுப்புகள், ஆசிரியர்கள் எத்தனை, அதில் பட்டதாரி ஆசிரியர்கள் எத்தனை, பள்ளியில் உள்ள வசதிகள் என்னென்ன, ஆசிரியர்களுக்கு வழங்கப் படும் ஊதியம் எவ்வளவு என்று பல்வேறு கேள்விகள் அடங்கிய கேள்வித் தொகுப்பு அது.
 இந்தத் தொகுப்புக்கு பதில் அளிக்கையில் பள்ளிகளுக்கு ஏராளமாக தயக்கம் இருந்திருக்கிறது. இதில் உண்மையான தகவல்களை அளித்தால், வருமான வரித் துறையிடம் சிக்கலில் சிக்கிக் கொள்ள வேண்டுமோ என்று பல பள்ளிகள் பொய்யான தகவல்களை அளித்திருக்கின்றன.
 அதாவது, ஆசிரியருக்கு மாதம் 10,000 ஊதியம் வழங்கினால், அதை 5000 என்று குறைத்து தகவல் தருவது. இந்த பள்ளிகள் அனுப்பிய தகவல்களை வைத்தே நீதியரசர் கோவிந்தராஜன் உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆண்டுக்கு 11,000, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 9000, நடுநிலைப் பள்ளிகளுக்கு 8000 மற்றும் ஆரம்பப் பள்ளிகளுக்கு 5000 என்றும் கட்டணத்தை நிர்ணயம் செய்தார்.
 ஆனால் இந்தப் பள்ளிகள் எவ்வளவு கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றன என்பது அனைவருக்குமே தெரியும். திருநெல்வேலி கடையநல்லூரில் ஒரு பள்ளி ஆண்டுக்கு 1.25 லட்சம் கட்டணமாக வசூலிப்பதாக தகவல்கள் கூறுகின்றன
 தமிழக அரசு கொண்டு வந்த பள்ளிக் கட்டண ஒழுங்கு முறை சட்டத்தின் படி அமைக்கப் பட்ட கோவிந்தராஜன் கமிட்டியை எதிர்த்து மெட்ரிகுலேஷன் மாபியா சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது.
 அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதியும், நீதியரசர் கே.கே.சசீதரனும் 9 ஏப்ரல் 2010 அன்று ஒரு தீர்ப்பை வழங்கினர். அத்தீர்ப்பில்
 “… it can be said that the scheme of the present Act is in consonance with the law laid down by the Apex Court, and it by and large strikes a balance between the autonomy of the institutions and measures to be taken to prevent commercialization of education. There are sufficient guidelines in the statute for either approving or fixing the fees. The procedure prescribed provides for appropriate opportunity to the managements. The Committee is headed by a retired High Court Judge. The minority educational institutions have also to maintain non-exploitative terms as held in P.A.Inamdar’s case. The impugned Act, therefore, cannot be said to be in any way in violation of Articles 19(1)(g) and 26 or 30 of the Constitution of India.
 இந்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மெட்ரிகுலேஷன் மாபியா உச்ச நீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றம், அந்த அப்பீலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலே தள்ளுபடி செய்தது.
 இதையடுத்து நீதியரசர் கோவிந்தராஜன் தனது பரிந்துரையை வழங்கினார்.   அரசும் அந்தப் பரிந்துரைகளின் படியே கட்டணம் வசூலிக்க பட வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது.
 இந்தச் சூழலில் தான் மெட்ரிகுலேஷன் மாபியா மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுகிறது.
 இப்போது இவர்கள் தாக்கல் செய்த வழக்கு, கோவிந்தராஜன் கமிட்டி நடைமுறைகளை சரிவர பின்பற்ற வில்லை என்பதுதான்.   இதனால், இந்தப் பரிந்துரைகளுக்கு இடைக்காலத் தடை வழங்க வேண்டும் என்று கோரினர்.
 இந்த மனு நீதியரசர் தனபாலன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு உத்தரவிட்டார் நீதிபதி, இடைக்காலத் தடை வழங்கக் கோரும் மனு வாசுகி என்ற மற்றொரு நீதியரசர் முன்பு விசாரணைக்கு வந்தது.
 மெட்ரிகுலேஷன் மாபியா சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர்.சந்திரன், அரவிந்த் தத்தார், முத்துக்குமாரசாமி, சிலம்பண்ணா, வி.டி.கோபாலன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.   இந்த வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை பீஸ் வாங்குபவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது.
 இந்த மனு விசாரணைக்கு நடந்து கொண்டிருந்த போது, பாதிக்கப் படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் சார்பாக தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பிரின்ஸ் என்பவருக்காக ஒரு வழக்கறிஞர் ஆஜராகி வாதாடுகிறார்.
 அந்த வழக்கறிஞரைப் பார்த்து நீதியரசர் வாசுகி உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. ?, உங்கள் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று என்ன கட்டாயம் ? கோவிந்தராஜன் கமிட்டி அமைப்பதற்கு முன்பு எப்படி பீஸ் கட்டினீர்கள் என்று சராமாரியான சட்ட நுணுக்கம் பொருந்திய கேள்விகளைக் கேட்டார்.

01tvko_Chattambi_Sw_172825f
கொல்லத்தில் வித்யாதீர சட்டாம்பி சுவாமிகளின் 157வது ஜெயந்தி தொடர்பான மாநாட்டை துவக்கி வைத்துப் பேசும் நீதியரசர் வாசுகி
பிரின்ஸின் வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம் உறுதி செய்த ஒரு சட்டம் தொடர்பான வழக்கை இந்த நீதிமன்றம் விசாரிக்கவே முடியாது, மேலும், பாதிக்கப் பட்ட பள்ளிகள் தனித்தனியாகத் தான் வழக்கு தொடுக்க முடியுமே தவிர, சங்கம் அமைத்து பொத்தாம் பொதுவாக வழக்கு தொடுக்க முடியாது, மேலும் ஒரு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எடுத்த முடிவுகள் தொடர்பான வழக்கை டிவிஷன் பென்ச் தான் விசாரிக்க வேண்டும், ஒரு நீதிபதி விசாரிக்க முடியாது, பாதிக்கப் பட்ட பெற்றோர்கள் சார்பாக தான் வந்திருப்பதால், பாதிக்கப் பட்டவர்களின் வாதத்தை இந்த நீதிமன்றம் இடைக்கால ஆணை பிறப்பிக்கும் முன்பு கேட்டே ஆக வேண்டும் என்று கூறினார்.
 அன்று விசாரணை ஒத்தி வைக்கப் பட்டு மறுநாள் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓய்வு பெற்ற நீதிபதி எடுத்த முடிவுகள் தொடர்பாக டிவிஷன் பென்ச் தான் விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற சுற்றறிக்கை ஒன்று இருக்கிறதாமே, என்று நீதியரசர் வாசுகி கேட்டார்.
 அப்போது மெட்ரிகுலேஷன் மாபியா சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் டிவிஷன் பென்ச்சுக்கு வழக்கை மாற்றுவது குறித்து ஆட்சேபணை இல்லை ஆனால், மாற்றுவதற்கு முன்பு இடைக்காலத் தடை கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரினர்.
 வழக்கின் தீர்ப்பை நீதியரசர் வாசுகி ஒத்தி வைத்தார்.   நேற்று இவ்வழக்கில் தீர்ப்பை வழங்கிய நீதியரசர் வாசுகி, இந்த வழக்கையும், பிரின்ஸ் என்பவர் தன்னை மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற மனுவையும் டிவிஷன் பென்ச்சுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
 அதே நேரத்தில் நீதியரசர் கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகளுக்கு இடைக்காலத் தடை விதித்தார்.
 பிள்ளையையும் கிள்ளி விட்டு விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவது போல, அரசு வழக்கறிஞர், தனது வாதங்களை வலுவான முறையில் எடுத்து வைக்கவேயில்லை.   இந்த நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் இல்லை என்ற வாதத்தை அவர் வைக்கவேயில்லை.   மழுப்பலாக, பள்ளிகள் கமிட்டிக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது போன்ற சொத்தையான வாதங்களையே வைத்தார்.
 கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகள் பூர்வாங்கமானவை, இறுதியானவை அல்ல. அந்தப் பரிந்துரைகள் பள்ளிகளுக்கு உரிய வாய்ப்பு வழங்காமல், இயற்கை நீதிக்கு முரணாக எடுக்கப் பட்ட முடிவு. கோவிந்தராஜன் கமிட்டியில் மொத்தம் 6 உறுப்பினர்கள் தான், அந்த கமிட்டியில் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் இல்லை, அதனால் கமிட்டியால் பள்ளிகள் அளித்த கட்டண விபரங்களை ஒரு மாதத்திற்குள் சரிபார்த்திருக்க முடியாது, கமிட்டியின் பரிந்துரைகளில், பள்ளிகள் பரிந்துரைத்த கட்டணத்தை ஏன் ஏற்கவில்லை என்பதற்கான விளக்கம் இல்லை.
 அதனால் கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகளுக்கும், அந்தக் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கும் தடை விதிக்கப் படுகிறது என்று நீதியரசர் வாசுகி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
 இப்போது சவுக்கு எழுப்பும் கேள்விகள் …
 உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய டிவிஷன் பென்ச்சும், உச்சநீதிமன்றமும், கோவிந்தராஜன் கமிட்டி நியமிக்கப் பட்டது சரி என்று தீர்ப்பளித்த பிறகு, கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகளின் மீதான குறைகள் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டுமா ? உயர்நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளதா ?
 ஒரு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வழங்கிய பரிந்துரைகளின் மீதான வழக்கை ஒரு நீதிபதி விசாரிக்கலாமா ? அல்லது டிவிஷன் பென்ச் தான் விசாரிக்க வேண்டுமா ?
விசாரிக்க அதிகாரம் இல்லாததால் டிவிஷன் பென்ச்சுக்கு வழக்கை மாற்றும் ஒற்றை நீதிபதிக்கு, இடைக்கால தடை விதிக்க மட்டும் அதிகாரம் உள்ளதா ?
கோவிந்தராஜன் கமிட்டியில் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் இல்லாத காரணத்தால் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி, பள்ளிக் கல்வி இயக்குநர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் இயக்குநர், ஆரம்பக் கல்வி இயக்குநர், பொதுப் பணித் துறையின் இணை தலைமை பொறியாளர் மற்றும் பள்ளிக் கல்வியின் கூடுதல் அரசுச் செயலர் அடங்கிய ஒரு குழு அளித்த பரிந்துரைகள் செல்லாததாகி விடுமா ?
 இந்தக் கமிட்டியின் பரிந்துரைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப் பட்டதால், மெட்ரிக்குலேஷன் மாபியா அடிக்கப் போகும் கொள்ளைக்கு பலியாகும் பெற்றோர்களுக்கு என்ன நிவாரணம் ?
 கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகள் இயற்கை நீதிக்கு முரணானவை என்றால் பெற்றோர்களின் போராட்டங்களை கணக்கில் கொள்ளாமல் வழங்கப் பட்டுள்ள இந்த நீதிமன்றத்தின் தடை உத்தரவு இயற்கை நீதிக்கு உகந்ததா ?
 கோவிந்தராஜன் கமிட்டியின் வழிமுறைகளில் தவறு இருந்தால், பாதிக்கப் பட்ட பள்ளி நிர்வாகங்கள் அந்தக் கமிட்டியைத் தானே அணுக வேண்டும்.   அதற்கு பள்ளிக் கட்டண சீரமைப்புச் சட்டத்தில் இடம் இருக்கும் போது, உயர் நீதிமன்றம் எப்படி இதை விசாரிக்க முடியும் ?
 இந்த நீதிமன்றங்கள் மக்களுக்கானவையா, அல்லது பணம் படைத்த மாபியாக்களுக்கானவையா ?
 பாதிக்கப் பட்ட பெற்றோர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், இடைக்காலத் தடை விதிக்கும் முன்பு தனது வாதத்தை கேட்க வேண்டும் என்று எடுத்துரைத்ததை புறந் தள்ளி விட்டு, அந்த மனுவை டிவிஷன் பென்ச்சுக்கு மாற்றி விட்டு, கமிட்டி பரிந்துரைகளுக்கு இடைக்காலத் தடை வழங்கும் அளவுக்கு அவசரம் என்ன ?
 லாப நோக்கோடு கல்வி வியாபாரமாவதை தடுக்க அரசுக்கு உரிமை உண்டு என்று பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இருக்கையில், Procedural violation என்பதை காரணம் காட்டி, கல்விக் கட்டண சீரமைப்புக்கு தடை விதிக்கும் அளவுக்கு அவசரம் என்ன ?
 கல்விக் கட்டணம் குறைவாக இருந்தால், கூடுதல் கட்டணத்தை எப்போது வேண்டுமானாலும் பள்ளிகள் வசூல் செய்து கொள்ள வழிவகைகள் இருக்கியிலும், செலுத்தப் பட்ட கூடுதல் கட்டணங்களை பள்ளிகளிடமிருந்து திரும்பப் பெற பெற்றோர்களுக்கு எந்த வழியும் இல்லாத நிலையில், மெட்ரிகுலேஷன் மாபியாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்க வேண்டிய தேவை என்ன ?
 இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்காது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தான் பதிலாக வரும்.
 ஆனால் அதையும் சந்திக்க சவுக்கு தயாராகவே இருக்கிறது.   அரசோ, சட்டமோ, நீதிமன்றங்களோ…. அனைத்தையும் விட சவுக்குக்கு, மக்களே பிரதானம்.
 மக்களுக்கு விரோதமாக தீர்ப்புகளை வழங்கும் இந்த நீதிமன்றங்கள் மக்கள் விரோத நீதிமன்றங்களே.---நன்றி சவுக்கு

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக