பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், ஏப்ரல் 23, 2012

கச்சத்தீவு !!



கச்சத்தீவு எங்குள்ளது?
பாக்- ஜலசந்தியில் (Palk Straight) மீன் வளம் வளம் மிகுதியாக உள்ள கடல்பரப்பு தீவின் பரப்பளவு 285 ஏக்கர் 1.15 சதுர கிலோ மீட்டராகும் (285 ஏக்கர்). இந்திய கடற்கரை எல்லையிலிருந்து பன்னிரண்டரை மைல் தூரத்திலும், இலங்கை கடற்கரை எல்லையிலிருந்து பத்தரை மைல் தூரத்திலும் உள்ளது.

1974 வரை இந்திய வசமும் பின்னர் இலங்கை வசமும் உள்ள இந்த தீவில் மனிதர்கள் யாரும் தற்போது வசிக்கவில்லை. புகழ்பெற்ற அந்தோணியார் கோவில் மட்டுமே இங்கு உள்ளது. இலங்கைக்கு அருகில் இருப்பதால் அது இலங்கைக்கு சொந்தமாகி விடாது. கச்சத்தீவு இந்தியாவின் பூர்வீக சொத்து.

கச்சத்தீவு இந்தியாவின் பூர்வீக சொத்து என்பதற்கு என்ன ஆதாரம்?
கி.பி.1605ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட்டிருந்தன.

தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622-1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆங்கிலேயரின் காலனி ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு (1795இல் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரணமுற்றதால்) இல்லாத நிலையில், அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் கிழக்கிந்திய கம்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர். அவர் 1803 முதல் 1812 வரை நிர்வாகம் செய்தார்.

கச்சத்தீவு இராமநாதபுரம் ஜமீனுக்கு உரியது என்பதை விக்டோரியா மகாராணி தனது பிரகடணத்தில் கூறியிருந்ததை இலங்கை அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரீஸ் என்பவர் (1936-40ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறையில் இருந்தவர்) கூறி பதிவு செய்துள்ளார்.

1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929 மற்றும் 1933-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899-ல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை அது குறிக்கிறது.

ஆதாரம் இருந்து விட்டு போகட்டும் ஆனால் இலங்கை பக்கத்தில் தானே இத்தீவு உள்ளது ?
இங்கு இரு சர்வேதேச வழக்கு விவரம் உங்கள் மேலான பார்வைக்கு தெரிவிக்க விரும்புகிறேன்
1) இங்லீஷ் கால்வாய் -இல் மிங்குயர்-என்ரோ என்ற தீவு உள்ளது, அது பிரிட்டிஸ் கடற்கரைக்கு அதிக தூரத்திலும், பிரென்ச் கடற்கரைக்கு பக்கத்திலும் உள்ளது.அதனால் பிரென்ச் அரசாங்கம் தீவு எங்கள் வசம் தான் இருக்க வெண்டும் என சர்வதேச நீதிமன்றத்தில் மோதியது. ஆனால் ப்ரிட்டன், தீவு எங்கள் பூர்வீக சொத்து என்பதற்கான 1953-ம் வருட ஆவணங்களை நீதிமன்றத்தி ல் சமர்பித்தது. முடிவில் அத்தீவு ப்ரிட்டன் வசம் கிடைத்தது.
2) கிளீப்போர்டன் என்ற தீவு மெக்சிகன் கடற்கரைக்கரைக்கு அருகில் உள்ளது. ஆனால் அது பிரான்ஸின் பூர்வீக சொத்து.மெக்சிகனும் சர்வதேச நீதிமன்றத்தில் மோதியது. வெற்றி பிரான்ஸுக்குத்தான்.

கச்சத்தீவு Strategic importance என்ன? அதனால் இந்திய மீனவர்களுக்கு என்ன ஆதாயம்?
ராமேஸ்வரத்திற்குக் கிழக்கே கடலில் ஒன்பது கிலோ மீட்டர் வரை பாறைகள் தான் அதிகமாக உள்ளது. அதன் பிறகு 18 கிலோ மீட்டர் தொலைவுக்கு இலங்கையின் கடல் எல்லை வந்து விடுகிறது. எனவே, அந்த பகுதியில் மீன் பிடிக்க முடியாத சூழல் உள்ளது . குறி்ப்பாக கச்சத்தீவை ஒட்டி உள்ள கடல் பகுதிகளில் "Tiger Prawn" (டைகர் ப்ரான்) எனப்படும் அரிய வகை இறால் அதிக அளவு கிடைக்கிறது. இதற்கு சர்வதேச சந்தையில் அதிக கிராக்கி உள்ளது. இதைக் கைப்பற்ற இலங்கை மீனவர்கள் மும்முரமாக உள்ளனர். மேலும், இந்தப் பகுதியை தமிழக மீனவர்கள் மூலம் இந்தியா சொந்தம் கொண்டாடி மீண்டும் வந்து விடக்கூடாது என்ற அச்சமும் இலங்கையிடம் உள்ளது.

திமுக @1974 தாரை வார்த்து விட்டது என்று குற்றம் சட்டப்படுகிறதே?
"கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்'' என்று ஆதாரங்களுடன் பிரதமர் இந்திரா காந்திக்கு தமிழக முதல்- அமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதினார். அந்த கடித சாரம் உங்கள் கனிவான பார்வைக்கு:

"கச்சத்தீவு பிரச்சினை குறித்து வெளிநாட்டு இலாகா காரியதரிசி கேவல்சிங் என்னுடன் பேச்சு நடத்தியதை தொடர்ந்து எனது இலாகா அதிகாரிகள் கச்சத்தீவு பற்றிய ஆதாரங்களை சேகரித்தார்கள். கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக ஒருபோதும் இருந்ததில்லை என்று நிரூபிப்பதற்கு தேவையான ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
நெதர்லாந்து நாட்டு மன்னருக்கும், கேன்டி அரசருக்கும் இடையே 14-2-1776 அன்று ஏற்பட்ட ஒப்பந்தம், டச்சு நாட்டிடம் இருந்த கடற்கரை பகுதிகள் இங்கிலாந்து அரசுக்கு மாற்றம் செய்யப்பட்ட ஒப்பந்தம், 17-3-1762 அன்று ஜான் சுரூடர் என்பவர் எழுதிய நினைவுக் குறிப்புகள், டச்சு, போர்த்துகீசிய மன்னர் காலத்து வரை படங்கள் ஆகிய எல்லா குறிப்புகளும் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை காட்டவில்லை.
1954-ம் ஆண்டு வெளியான இலங்கையின் வரைபடத்திலும் ("மேப்'') கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக குறிக்கப்படவில்லை.நீண்ட நெடுங்காலமாக தமிழ்நாட்டு கடற்கரை பகுதியில் முத்துக் குளித்தல், சங்கு எடுப்பு ஆகிய உரிமைகள் ராமநாதபுரம் ராஜா உள்பட தென் இந்திய மன்னர்களுக்கே உரித்தானது என்பதை வரலாற்று ஆதாரங்கள் காட்டுகின்றன.
கச்சத்தீவு செல்லும் பாதையிலும் கச்சத்தீவின் மேற்கு பகுதி கரை ஓரத்திலும் சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு இருந்தது என்பதை காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அங்கு சங்கு எடுத்ததற்காக அவர் எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்கு கப்பம் கட்டியது இல்லை.இப்போது கிடைத்து இருக்கும் இந்த ஆதாரங்களைக் கொண்டு கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த அகில உலக கோர்ட்டிலும் எடுத்துக்கூறி நிரூபிக்க முடியும் என்று சென்னை சட்டக்கல்லூரியின் ஆராய்ச்சி பிரிவு கருத்து தெரிவித்து இருக்கிறது. எனவே, இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு வரும் பொழுது, இந்த ஆதாரங்களை எடுத்துக்காட்டி, "கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமல்ல'' என்று நிரூபிக்க முடியும் என்று எண்ணுகிறேன்.''

இந்தக் கடிதத்துக்கு பதில் ஏதும் வரவில்லை.ஆனால் கச்சத்தீவு தானம் குறித்து, இந்திரா காந்தியும் திருமதி பண்டாரநாயகவும் இந்த கால கட்டத்தில் , ஜூன் 28ம் 1974 மற்றும் 1976ம் ஆண்டில் இந்திய அரசு தனக்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் கொடுத்தது. இந்த ஒப்பந்தங்களில் மீனவர்கள் தீவுப்பகுதியில் மீன் பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும், வழிபாடு நடத்த தீவுக்கு சென்று வருவதற்கும் இலங்கை அரசிடம் அனுமதி பெறவேண்டியதில்லை என்பது விதியாகும்.

கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை, மிக அவரசரமாக 1974 ஜுன் 29-ந்தேதி சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூட்டினார். கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் வருமாறு:-1. பொன்னப்ப நாடார் (ப.காங்கிரஸ்)2. ஏ.ஆர்.மாரிமுத்து (இ.காங்கிரஸ்)3. திருப்பூர் மொய்தீன் (முஸ்லிம் லீக்)4. அரங்கநாயகம் (அ.தி.மு.க.)5. வெங்கடசாமி ,ஜி.சாமிநாதன் (சுதந்திரா)6. ஈ.எஸ்.தியாகராசன் (தமிழரசு கழகம்)7. ஏ.ஆர்.பெருமாள் (பார்வர்டு பிளாக்)8. மணலி கந்தசாமி (தமிழ்நாடு கம்ïனிஸ்டு)9. ம.பொ.சிவஞானம் (தமிழரசு)10. அப்துல் வகாப் (முஸ்லிம் லீக்)11. ஆறுமுகசாமி (இ.காங்கிரஸ்)12. சக்தி மோகன் (பா.பிளாக்)13. ஏ.ஆர்.தாமோதரன் (ஐக்கிய கட்சி)

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது: "இந்தியாவுக்குச் சொந்தமானது என்று நாம் கருதுவதும், தமிழ்நாட்டுக்கு நெருக்கமான உரிமை கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவை இந்தக் கூட்டம் விவாதித்தது. தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசு உரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தை திருத்தி அமைத்து தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது.''

எல்லா கட்சித் தலைவர்களும் தீர்மானத்தில் கையெழுத்துப் போட்டு ஒப்புதல் தெரிவித்து இருக்கிறார்கள். அ.தி.மு.க. பிரதிநிதி, தீர்மானத்தில் கையெழுத்து போட மறுத்துவிட்டு போய்விட்டார். காரணம் ?? கச்சத்தீவு பிரச்சினையில் தமிழ்நாடு அரசு ராஜினாமா செய்யவேண்டும் என்று தீர்மானம் போடும்படி சொன்னார். அது ஏற்றுக்கொள்ளப்படாததால், வெளியேறினார்.

சரி , ஒப்பந்தமாவது சரியாக காப்பற்றபடுகிறதா?
கச்சத்தீவு குறித்த கடல் எல்லை ஆதிக்க ஒப்பந்தத்தின் ஐந்தாவது விதியில், இந்தியாவில் இருந்து கச்சத்தீவுக்குத் மக்கள் தொடர்ந்து தங்கு தடையின்றிச் சென்று வரலாம் என்றும் கச்சத்தீவுக்குச் செல்ல பாஸ்போர்ட்டோ இலங்கையின் விசாவோ தேவையில்லை என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆறாவது விதியில், தமிழக மீனவர்கள் கச்சத்தீவை ஒட்டியுள்ள கடலில் மீன் பிடிக்கும் பாரம்பரிய உரிமையைத் தொடர்ந்து அனுபவித்து வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதிகளுக்கு உடன்பட்டுத் தான் கச்சத் தீவை இலங்கை தனது கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியாக ஏற்றுக் கொண்டது.

கச்சத்தீவு கடல் எல்லை ஒப்பந்தம் கையெழுத்தான சமயம் அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஸ்வரண் சிங், கச்சத்தீவை ஒட்டியுள்ள கடலில் மீன் பிடிக்கும் பாரம்பரிய உரிமையைத் தமிழக மீனவர்கள் தொடர்ந்து அனுபவித்து வருவதற்கு ஒப்பந்தம் உறுதி செய்கிறது என்று மக்களவையில் கூறியுள்ளார்.

1983 வரை தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவு மீன் பிடிப்பில் பாதிப்பு இல்லை . இதற்கு பின்னர் இலங்கை தமிழர் இன கலவரம் மற்றும் போராளி குழுக்கள் எழுச்சி காரணமாக கச்சத்தீவை ஒட்டியுள்ள கடல் பகுதியில் மீன் பிடிக்கப் பாரம்பரிய உரிமையுடன் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், படகுகளை சேதப்படுத்துவதும், பிடித்த மீன்களை தூக்கி எறிவதையும், மீன்பிடி வலைகளையும் அறுத்து எரிவதும், உச்சகட்டமாக மீனவர்களை படுகொலை செய்வதும் என தொடர்ந்து அராஜகங்கள் அரங்கேறி வருவது தான் வேதனையான உண்மை !!

திரு முகம்மது செரீப் , முன்னால் எம்.பி. (பெரியகுளம்) அவர்களால் நாடாளுமன்றத்தில் 1-4-1968 ஆம் ஆண்டு, கச்ச்த் தீவு ராமனாதபுர ராஜாவுக்கு சொந்தமானது தான் என போதுமான ரெக்கார்டுகள் சமர்ப்பிக்கப்பட்டன. அப்போதே இந்திய அரசு விரைந்து செயல்பட்டு , சர்வதேச நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தால் நமது பூர்வீகச்சொத்தான கச்சத் தீவு நம் வசம் இருந்து இருக்கும். ஆயிரக்கனக்கான உயிர் பலியும் தவிர்க்கப்பட்டிருக்கும்

சரி எப்படி தான் மீட்பது ?
சர்வதேச நீதிமன்றம் நாடுவதே சரியான தீர்வாக அமைய முடியும். நமக்கு பல ஆதரங்கள் இருக்கின்றன . எப்படி இந்த வழக்குகள் அந்த அந்த நாடுகள் வெற்றி கண்டனவோ அதனை போலவே நம்மாலும் வெற்றி கொள்ள முடியும் ....

கச்சத்தீவு நமது உரிமை மட்டுமில்லை, ஒரு தார்மிக கடமையும் கூட இதனை பெறுவதும் தான் ஆயிரகணக்கில் இறந்த இந்திய, நம் தமிழ் பேசும் மீனவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி !நன்றி ச.வெ.ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக