பக்கங்கள்

திருக்குறள்

வெள்ளி, ஏப்ரல் 13, 2012

மின் பற்றாக்குறை என்பது உண்மைதானா?

 

இரா. முரளிதரன், அமைப்பாளர், தமிழர் உரிமை மீட்பு இயக்கம் - மயிலாடுதுறை.

மின்சாரம் இன்றி ஒரு அணுவும் அசையாது. இன்று ஒரு நாட்டின், மாநிலத்தின் வளர்ச்சியை தீர்மானிக்கின்ற முதன்மைக் காரணியாக மின்சாரம் திகழ்கிறது. கல்வி, அடிப்படைக் கட்டுமான வசதி மற்றும் இணக்கமான சூழல் போன்ற காரணங்களால் தமிழகம் தொழில்துறையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆனால் மின் தட்டுப்பாடு தமிழகத்தின் எதிர்காலத்தை அச்சுறுத்தி வருகிறது. எதிர்கால மின்சாரத் தேவைகளை கருத்தில்கொண்டு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படாத நிலையில், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு சில சக்திகள் இந்த மின்தட்டுப்பாட்டை உருவாக்க முயற்கின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்த மின்தட்டுப்பாட்டின் மூலம் மக்களின் மனதில் ஒரு உளவியல் வன்முறை நிகழ்த்தப்படுவதாக தோன்றுகிறது. இதன் மூலம் அணுசக்தியில் இருந்து மின்சாரம் வேண்டும் என்ற கருத்தை மக்கள் மனதில் உருவாக்க முயல்கின்றன இந்த சக்திகள்.

1. தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை முதன்மையாக தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கே பயன்படுத்த வேண்டும். 2. சலுகை விலையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தரப்படும் தடையில்லா மின்சாரத்தை படிப்படியாக குறைக்க வேண்டும். 3. காற்றாலை மற்றும் சூரியசக்தி போன்றவற்றை புதிய தொழில் தொடங்குபவர்களை படிப்படியாக பயன்படுத்த கட்டாயப்படுத்த வேண்டும் அல்லது உத்திரவாதத்தைப் பெற வேண்டும். 4. தேவைக்கு மிக மிக அதிகமாக மின்சாரத்தை வீணாக செலவழிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் வணிக வளாகங்களை முறைப்படுத்த வேண்டும்.

மேற்கூறியவை குறித்து உறுதியான நடவடிக்கை எடுப்பதன் மூலம் எதிர்கால மின்தேவைகளை பூர்த்திசெய்து கொள்ள முடியும்.

1. தமிழகத்தின் மின்தேவை எவ்வளவு?

19-07-2011 தேதியின்படி தமிழக மக்களின் மின்தேவை 10.859 மெகாவாட்

2. தற்போது தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவு எவ்வளவு?
மொத்தம் 15,800 மெகாவாட்

இதன் விவரங்கள்

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான

மின் நிலையங்களிலிருந்து - 5690 மெகாவாட்ஸ்

தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து 1,180 மெகாவாட்ஸ்

மத்திய தொகுப்பிலிருந்து 2,825 மெகாவாட்ஸ்

இவை தவிர்த்து கிடைப்பவை 305 மெகாவாட்ஸ்

இதர 214 மெகாவாட்ஸ்

இவை தவிர்த்து புதுப்பிக்கப்படக்கூடிய மற்றும் மரபுசாரா மின்சக்தியிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் விவரங்கள்

காற்றாலை மின்சாரம் (தனியார்) 4,889.7 மெகாவாட்

கலப்பு மின்சாரம் 559.5 மெகாவாட்

உயிர்ம மின்சாரம் 137.5 மெகாவாட்ஸ்

மொத்தம் : 15300.315 மெகாவாட்ஸ்

* நீர்மின்சாரம் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி வருடம் முழுவதும் சீராக இருக்காது. இருப்பினும் இது உயர்ந்தபட்ச உற்பத்தியே ஆகும். தொழில்நுட்ப மற்றும் வர்த்தகரீதியான பகிர்மான இழப்புகள் சுமார் 20 சதவிகிதம்.

3. தற்போது தமிழகம் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு எவ்வளவு?

வீட்டு உபயோகத்திற்கு 27.15 சதவிகிதம்

விவசாயத்திற்கு 20.93 சதவிகிதம்

தொழிற்சாலைகளுக்கு 34.92 சதவிகிதம்

வணிகத்திற்கு 10.43 சதவிகிதம்

மற்றவற்றிற்கு 6.67 சதவிகிதம்

4. தமிழகத்தில் தற்போது இயங்கிவரும் பன்னாட்டு நிறுவனங்கள் எத்தனை?

210க்கும் மேற்பட்ட உற்பத்தி, மென்பொருள் மற்றும் அயல்நாட்டு சேவை சார்ந்த பெரு நிறுவனங்கள் தமிழகத்தில் இயங்கிவருகின்றன.

5. தற்போது தமிழகத்தில் செயல்படும் மின்திட்டங்கள் எவை எவை?

நீர்மின்சாரம்

குந்தா வட்டம் 833.65 மெகாவாட்

கடம்பாரை வட்டம் 595.45 மெகாவாட்

ஈரோடு வட்டம் 423.50 மெகாவாட்

திருநெல்வேலி வட்டம் 338.30 மெகாவாட்

மொத்தம் 2190.90 மெகாவாட்

அனல் மின்சாரம்

தூத்துக்குடி 1050.00 மெகாவாட்

மேட்டூர் 840.00 மெகாவாட்

வடசென்னை 630.00 மெகாவாட்

எண்ணூர் 450.00 மெகாவாட்

மொத்தம் 2970.00 மெகாவாட்

எரிவாயு மின்சாரம்

திருமக்கோட்டை 107.88 மெகாவாட்

குத்தாலம் 101.00 மெகாவாட்

வல்லத்தூர் பகுதி 1 95.00 மெகாவாட்

வல்லத்தூர் பகுதி 2 92.20 மெகாவாட்

பேசின் பிரிட்ஜ் 120.00 மெகாவாட்

மொத்தம் 516.00 மெகாவாட்

ஒட்டுமொத்த அளவு 5677.00 மெகாவாட்

6. தற்போது நெய்வேலி அனல் மின்நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு எவ்வளவு? அதிலிருந்து தமிழகத்திற்கும் மத்திய தொகுப்பிற்கும் செல்லும் மின்சாரத்தின் அளவு எவ்வளவு?

நெய்வேலி அனல் மின்நிலையத்தின்

முதல் தொகுப்பின் 600 மெகாவாட்டில்

தமிழகத்திற்கு 80 சதவிகிதம்

இரண்டாம் தொகுப்பின் 1470 மெகாவாட்டில்

தமிழகத்திற்கு 30 சதவிகிதம்

வெளிமாநிலத்திற்கு 50 சதவிகிதம்

மூன்றாம் தொகுப்பின் (முதல் தொகுப்பின் விரிவு) 420 மெகாவாட்டில்

தமிழகத்திற்கு 40 சதவிகிதம்

வெளிமாநிலத்திற்கு 45 சதவிகிதம்

7. காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு எவ்வளவு?

தமிழ்நாட்டில் முதன்முறையாக தூத்துக்குடி மாவட்டம் முல்லைக்காட்டில் 1986இல் அமைக்கப்பட்ட காற்றாலை 1.165 மெகாவாட் உற்பத்தி செய்தது. தற்போது 2009-2010 ஆம் ஆண்டின் கணக்குப்படி தமிழகம் முழுவதும் உள்ள காற்றாலைகள் - 4,889.765 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. இது தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 3-இல் ஒரு பங்கு. மேற்கொண்டு இதிலிருந்து 6,000 மெகாவாட்டுகள் வரை உற்பத்தி செய்யலாம். நிலைமை இவ்வாறு இருக்க, மூன்றில் ஒரு பங்கு உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரம் மின்தொகுப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படாமல் வீணாகிறது. காற்றாலை மின்சாரத்தை எடுத்துக்கொள்வதற்கான போதிய மின்வடம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக மின்சார வாரியம் செய்து தரவில்லை. (மேலும் விவரத்திற்கு உலக காற்றாலைகள் அமைப்பின் துணைத் தலைவரான கஸ்தூரி ரங்கையன் 29-02-12 தேதியிட்ட ஜூனியர் விகடன்).

8. சூரிய சக்தி மின்திட்ட அதிகரிப்புக்கு உள்ள சாத்தியக்கூறுகள் பற்றிய விவரம்

சூரிய சக்தியில் ஆரம்பகட்ட நிறுவுகை செலவுகளைத் தவிர்த்து பராமரிப்பிற்கு ஆகும் செலவு ஒப்பீட்டுரீதியில் மிகவும் குறைவு. வருடத்திற்கு 300 நாட்கள் வெய்யில் அடிக்கின்ற இந்தியாவில் சூரியசக்தியைப் பயன்படுத்திக் கொள்வதற்கான மிகச்சிறந்த வாய்ப்பு இருக்கிறது. மேம்பட்ட சூரியசக்தி தொழில் நுட்பத்தின் மூலம் 20 சதவிகித சூரிய ஒளியை நேரடி மின்சாரமாக மாற்ற முடியும். கல்லூரிகள், பெரிய தொழிற்சாலைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் போன்றவை அவற்றின் கட்டுமான செலவில் 4.5 சதவிகிதம் சூரிய சக்தி - மின்னாற்றலுக்கு பயன்படுத்தினால்கூட அவர்களின் மின்தேவையில் 30 முதல் 40 சதவிகிதத்தை வாழ்நாள் முழுவதும் பூர்த்திசெய்து கொள்ளலாம். இவற்றிற்கு தேவை இதை நிறைவேற்ற அரசாங்கத்தின் ஈடுபாடு இருந்தால் மட்டுமே போதும்.

9. தமிழகத்தின் மின் பராமரிப்பில் உள்ள குளறுபடிகளால் ஏற்படும் மின் இழப்பு எவ்வளவு?

மொத்த மின் உற்பத்தியில் 20 சதவிகிதம் அளவுக்கு மின் பகிர்மானத்தின் இழப்பு ஏற்படுகிறது.

10. மின் சிக்கனத்திற்கான புதிய வழிகள்

சிஎஃப்எல் மற்றும் எல்ஈடி பல்புகளை பயன்படுத்துதல். தமிழகத்தில் உள்ள 1.4 கோடி வீட்டு உபயோக பயனீட்டாளர்களை மட்டும் இவ்வாறு மாற்றுவதன் மூலமே சுமார் 500 முதல் 600 மெகாவாட் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். புதிய கட்டிடங்களை பசுமைக் கட்டிட வரையறைக்கு உட்பட்டு கட்டுவதன் மூலம் 40 முதல் 50 சதவிகித மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கலாம். பெரு நிறுவனங்கள் தங்கள் தேவைகளில் ஒரு பகுதியை மரபுசாரா மின் உற்பத்தி திட்டங்களை நிறைவேற்றி அதன்மூலம் பெறுவதை கட்டாயப்படுத்த வேண்டும்.

11. மின்திருட்டு நடப்பது பற்றிய விவரம்

மின் திருட்டைத் தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு மாதங்களில் 40 மின் வழங்கல் வட்டங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மாதந்தோறும் ரூபாய் 88,00,000 அளவுக்கு மின் திருட்டு நடப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அவர்களே வழங்கும் கணக்கு. உண்மையில் இதற்கும் மேலாக மின் திருட்டு நடப்பதற்கான வாய்ப்பிருக்கிறது என்று கருதலாம்.

12. கூடங்குளம் அணு உலை இயங்கினால் அதிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரத்தின் அளவு எவ்வளவு?

கூடங்குளத்தில் உள்ள இரண்டு அணு உலைகள் இயங்கினால்கூட 450 மெகாவாட் வரைதான் தமிழ்நாட்டிற்கு மின்சாரம் கிடைக்கும் என்று மோகன் ஷர்மா என்ற ஆய்வாளர் கூறுகிறார். தமிழக மின்துறையின் திட்ட எதிர்பார்ப்பில் கல்பாக்கத்திலிருந்து 167 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆக தமிழ் மண்ணில் மின் பற்றாக்குறை என்பது பொய். மின் உற்பத்தி குறைவு என்பதும் பொய். ஒரு பொய்யான மின் தட்டுப்பாட்டை உருவாக்கி கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஆதரவாக வெகுமக்கள் கருத்தை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஆதாரங்கள் : ஜூனியர் விகடன், தினமலர், Position Paper on Power, தமிழ்நாடு மின்சார வாரிய வலைத்தளம் மற்றும் பல்வேறு வலைத்தளங்கள்.
எல்லைத் தமிழன் mathan.dxb@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக