பக்கங்கள்

திருக்குறள்

சனி, நவம்பர் 26, 2011

முல்லைப்பெரியாறு ஒப்பந்தம்.

ஒப்பந்தம்அணை கட்டப்படும் பகுதி திருவாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்ததால் அதனுடன் இடம், லாபப்பங்கீடு போன்றவைகளுக்கான பேச்சு வார்த்தை நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு 1886 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதன்படி திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு (தற்போதைய கேரளா) சென்னை மாகாணம் (தற்போதைய தமிழ்நாடு) அணையின் 155 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேங்கும் பகுதியான 8000 ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் அணைகட்டுவதற்கும் பிற பணிகளுக்குமாக 100 ஏக்கர் சேர்த்து 8100 ஏக்கருக்கு குத்தகைப் பணம் செலுத்த வேண்டும் என்பது உட்பட 7 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு தமிழகம் குத்தகைத் தொகையாக 1896ல் இருந்து 1970 வரை ஏக்கருக்கு 5 ரூபாய் என்று கொடுத்து வந்தது. கேரளம், 1970 ஆம் வருடம் அந்த ஒப்பந்தத்தைத் திருத்தி, ஆண்டிற்கு 5 ரூபாய் என்றிருந்த குத்தகைத்தொகையை 30 என மாற்றி, அணையிலும் அதைச் சார்ந்த நீர்ப்பிடிப்பு மற்றும் குளம், குட்டை போன்ற நீர் நிலைகளிலும் மீன் பிடிக்கும் உரிமையும் தமிழகத்திடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்டது. இவ்வொப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்றும் குறிக்கப்பட்டது. இதன்படி இவ்வணையிலிருந்து 104 அடிக்கு மேலுள்ள நீர் குகை மூலம் வைகைப் படுகைக்கு திருப்பி விடப்பட்டு இப்பகுதி பாசன வசதி பெறுகிறது.
இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு 1887 செப்டம்பர் மாதத்தில் அணை கட்டும் பணி துவங்கப்பட்டது. இந்தப்பகுதி முழுவதும் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் பொறியாளரான மேஜர் ஜான் பென்னி குயிக் இதற்காக அதிக அளவில் இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு செய்தார். இதன்படி சென்னை மாகாணத்தின் கூடலூர் மலைப்பகுதியிலிருந்து தேக்கடி வரையும் அங்கிருந்து அணை கட்டும் பகுதி வரை கம்பிவடப் பாதைகளை அமைத்து அதற்கான பொருட்களைக் கொண்டு சென்றார். இந்த அணையின் கட்டுமானப்பணிகளுக்காக 80 ஆயிரம் டன் சுண்ணாம்புக்கல் பயன்படுத்தப்பட்டது.
இந்த பெரியாறு அணை 1893-ல் 60 அடி உயரத்திற்கும் அதன்பின்பு 1894-ல் 94 அடி உயரத்திற்கும் 1895 டிசம்பர் மாதத்தில் 155 அடியும் கட்டி முடிக்கப்பட்டு கைப்பிடிச் சுவரும் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையை சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் பிரபு திறந்து வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக