பக்கங்கள்

திருக்குறள்

சனி, நவம்பர் 26, 2011

முல்லைப் பெரியாறும் - தமிழ்நாட்டின் மக்குத்தனங்களும்!

தற்போது கேரள அரசோடு தமிழகம் செய்து வரும் வாதங்களைக் கூட,
தமிழர்கள் நிலையைக் கடந்து "ஆந்திராய பார்வை", "முல்லைப் பெரியாறு
விதயத்தில் அசாமிய பார்வை" (அதாவது முல்லைப் பெரியாறு அணையின்
நீர் தேக்கும் அளவை 142 அடி என்று நிர்ணயித்தால் அசாமிற்கும் அருணாச்சலப்
பிரதேசம் போன்ற பகுதிகளுக்கும் சரவல் வருமா என்று ஆராயும்
சிறந்த மனப்பக்குவம்) என்று கூட நாம் நிலை எடுத்து
நமது செம்மையான பார்வையினை செய்து வருகிறோம்.

தமிழ்மக்களிடையே, தமிழர்களுக்குச் சரவல் என்றால், தமிழர்கள்
மேலேயே குற்றம் சொல்லிக் கொள்வதும், தமிழர்களுக்கு எதிர்ப்பானவர்கள்
மேல் பரிவு காட்டுவதும் ஒரு பரவலான உண்மை.

முல்லைப் பெரியாறு அணை குறித்த விதயத்தில் பல தரவுகள் மக்களுக்குத்
தெரியாதிருக்க நிறைய வாய்ப்புள்ள நிலையில், தென் ஆசிய செய்தி இதழில்,
பழ.நெடுமாறன் அவர்கள் அற்புதமான தகவல்களைக் கொடுத்துள்ளார்.
அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை. (பார்க்க thenseide.com)

அணை கட்டப் பட்டது 1896ல்.

999 வருட குத்தகை என்பது அந்த அணைக்கு மட்டுமல்ல.
அந்த அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான சுமார் 8ஆயிரத்து சொச்ச
ஏக்கர் நிலப்பரப்பில் அணை ஏற்படுத்திக் கொண்டு அதனை இரு மாநிலங்களும்
பயன் படுத்திக் கொள்வதற்காகவும், தமிழகத்தின் மேற்பார்வையில் அது
இருப்பதற்காகவும் தான் அந்த 8000+ ஏக்கர் நிலம் தமிழகத்திற்குக்
999 வருடக் குத்தகைக்குக் கொடுக்கப் பட்டுள்ளது.

இதற்கு தமிழகம் குத்தகைத் தொகையாக 1896ல் இருந்து 1970 வரை
ஏக்கருக்கு 5 உரூவாய் என்று கொடுத்து வந்திருக்கிறது. 999 வருட அணைக்

குத்தகை ஒப்பந்தம் என்பது ஒரு முட்டாள் தனம் என்று தற்போது சொல்லிவரும்
கேரளம், 1970 ஆம் வருடம் அந்த ஒப்பந்தத்தைத் திருத்தி, சில வசதிகளை
செய்து கொண்டது. அதன்படி, ஆண்டிற்கு 5 உரூவாய் என்றிருந்த குத்தகைத்
தொகையை 30 என மாற்றிக் கொண்டது. அதோடு இல்லாமல், அணையிலும்,
அதைச் சார்ந்த நீர்ப்பிடிப்பு மற்றும் குளம் குட்டை போன்ற நீர் நிலைகளிலும்
மீன் பிடிக்கும் உரிமையும் எழுதி வாங்கிக் கொண்டது.

இப்படி வசதிக்கேற்றவாறு ஒப்பந்தத்தை திருத்திக் கொண்ட கேரளம்,
ஒப்பந்தத்தையே மறுப்பதும் வெள்ளைக்காரன் ஒப்பந்தம் செல்லாது
என்று சொல்வதும் பொருத்தமாக இல்லை. மாறாக அதனை ஏற்றுக் கொண்டே
உள்ளது.

ஒப்பந்தமும் இருக்க வேண்டும். அதன்வழி வரும்படியும் வரவேண்டும்;
ஆனால் தண்ணீரும் தரக்கூடாது என்ற குறுகிய எண்ணமே இதற்குக் காரணம்.

1979ல் மலையாள மனோரமா ஏடு, அணைக்கு ஆபத்து என்ற பீதியைக்
கிளப்பிவிட அதனையே சாக்காக வைத்து அணையின் மொத்த அளவான
152 அடி நீர்த்தேக்கை 136 அடியாக குறைத்து விட்டது கேரளம். அந்த பீதியில்,
அச்சத்தில், பொருள் இல்லை என்று அப்பொழுதே நீர்வள ஆணையத்தலைவர்
சான்றிதழ் கொடுத்தாலும், கேரள மக்களின் அச்சம் போக்கும் பொருட்டு,
தமிழகம் அந்த அணையை மேலும் வலுப்படுத்த எல்லா முயற்சிகளையும் செய்த

பின் 152 அடி நீரைத் தேக்கலாம் என்று முடிவு செய்யப் பட்டது.

அதன்படி, தமிழகம் பல ஆண்டுகளாக கேரள அரசின் இடர்களைத் தாங்கி,
அணையை மேலும் வலுப்படுத்த வேண்டிய எல்லா பணிகளையும் முடித்து
நீர்த் தேக்கு உயரத்தை அதிகப் படுத்த சொன்னபோது கேரளா பல காரணங்களைச்
சொல்லி உயர் நீதிமன்றத்திற்குச் சென்றது. தமிழகமும் உயர் நீதிமன்றத்திற்குச்

சென்றது. பின்னர் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்குத் தள்ளப்பட்டு
அதன் தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் வந்தது. அதன்படி, கேரளா சாக்குப்போக்கு
சொல்வதாகவும், தமிழகம் நீர் உயரத்தை 142 அடியாக உயர்த்த உடனடி
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெளிவாகச் சொன்னதோடு,
வல்லுனர்கள் தந்த தகவலின் படி, அணைக்கு எந்த ஒரு பாதகமும் இல்லை
எனவும், அணையை மேலும் வலுப்படுத்த தமிழகம் மேற்கொண்ட பணிகளும்
சரியானவை என்றும் தீர்ப்பளித்து விட்டது.

தமிழகத்தை பிப்ரவரி-2006 ல் இருந்து மே வரை ஆண்ட மக்கு அரசும்,
அதற்குப் பின்னர் ஆண்டு கொண்டுள்ள மக்கு அரசும், உடனடியாக
அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக தற்போதைய அரசு
பேச்சுவார்த்தை என்று பேசிக் கொண்டுள்ளது. இதே தீர்ப்பை மற்ற மாநிலங்களுக்கு
சார்பாக நீதிமன்றம் கொடுத்திருந்தால் அவர்கள் என்ன செய்திருப்பார்கள்
என்பதனை எண்ணிப் பார்க்க வேண்டும்.

சரி இரண்டு பக்கங்களிலும் ஓசை அதிகமாக இருக்கிறதே, அச்சுதானந்தத்தின்
பேச்சு முரடாகவும் இருக்கிறதே என்ன என்று இன்னும் ஆழப்பார்த்தால்
அதிர்வளிக்கும் உண்மைகள் கிடைக்கின்றன.

மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 601 சதுர கி.மீ.
அதில் தமிழகப் பகுதி 113 ச.கி.மீ.
அய்ந்தில் ஒரு பகுதி நீர் தமிழகத்தில் உற்பத்தி ஆகிறது.

பெரியாற்றில் கிடைக்கும் நீரளவு 4868 மில்லியன் கனமீட்டர்.
கேரளாவின் பயன்பாடு 1844 மிகமீ.
வீணாகப் போகும் நீர் ஏறத்தாழ 3000 மிகமீ.

கேரளாவின் 2021 ஆம் ஆண்டைய நீர்த் தேவையே 2554 மி.க.மீ மட்டும்.
இன்னும் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் வேண்டுமானால் கேரளாவிற்கு
இந்த முழு நீரும் தேவைப் படலாம்!!

தமிழ்நாட்டுக்குத் தேவை எவ்வளவு தெரியுமா? 1000, 2000 மிகமீ?

இல்லை - வெறும் 82 மி.க,மீ மட்டுமே!

தற்போது 136 அடியாக இருக்கையில், இந்த
82 ஐயும் விட மிகக் குறைவான நீர் வந்து இரண்டரை இலக்க
ஏக்கர் விவசாயத்தைக் கடந்த 30 ஆண்டுகளாகப் பாதித்து விட்டது,

142 அடியாக உயர்த்தினால், அதாவது மேலும் 6 அடி தேக்கத்தை
உயர்த்தினால் தமிழகம் பயன்படப்போவது அதிக பக்கம் இந்த 82 மிகமீ
தண்ணீரினால் மட்டுமே.

20% நீர் உற்பத்தியாகும் தமிழகத்திற்கு மொத்த நீரில் 1.7% (82 மிகமீ)
தருவதைத்தான் கேரளம் இப்படி எதிர்க்கிறது; தமிழகம் இப்படித் தள்ளாடிக்
கொண்டிருக்கிறது.

கேரளா சொல்லும் "142 அடி தேக்கினால் மக்களைப் பாதிக்கும்"
என்பதனைத் தேடிப்பார்த்தால் அது மக்களைத்தான் பாதிக்கிறது.
யாரையென்றால், தமிழகம் குத்தகைக்கு எடுத்திருக்கிற நீர்ப்பிடிப்புப்
பகுதியான அந்த 8000 ஏக்கர் நிலப்பரப்பில் 2750 ஏக்கர் நிலப்பரப்பை
கேரள அரசும் அதன் மக்களும் ஆக்கிரமித்து விட்டனர். ஏரி, குளத்தை
ஆக்கிரமித்து முறையற்ற வகையில் வீடுகள் கட்டிக் கொள்கிறார்களே,
அதைப்போல முல்லைப் பெரியாறு அணைக்கட்டில் வீடுகள் கட்டி விட்டார்கள்
கேரள மக்கள். மிச்சமுள்ள 5250 ஏக்கர் பரப்பில்தான் தற்போது நீர்ப்பிடிப்பு
இருக்கிறது.

மூன்றில் ஒரு பகுதியை (34%) அவர்கள் ஆக்கிரமித்ததால், அணையில்
முழு அளவிற்குத் (152 அடி) தண்ணீர் தேக்கினால் இக்குடியிருப்புகள்
மூழ்கிவிடும். 142 அடி தேக்கினால் அந்த ஆக்கிரமிப்புகளில் சிறு பகுதிகள்
பாதிக்கப் படும். இந்த ஆக்கிரமிப்புகளைப் பாதுகாக்கத்தான் கேரளம்
பல பித்தலாட்டப் பொய்களைக் கூறியும், மலையாளியான படை அமைச்சர்
அந்தோணியின் உதவியாலும் கப்பற்படையைக் கொண்டு வந்தும் பாவலா
காண்பித்துக் கொண்டிருக்கிறது.

இந்த ஆக்கிரமிப்பிற்கும் சேர்த்து தமிழகம் குத்தகைப் பணத்தை மட்டும்
கொடுத்து வருகிறது.

1) மக்குத் தமிழகம், தனது குத்தகை இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம்
இருந்து காக்கத் தவறி விட்டது.

2) உச்ச நீதிமன்றம் வலுவான தீர்ப்பைத் தமிழகத்திற்குத் தந்தும் கூட
இரண்டு கட்சிகளும் மக்குத்தனமாக நடந்து கொண்டு விட்டன.

இப்பொழுது நடக்கும் பேச்சு வார்த்தைகளும், கலைஞர் அவர்களின்
முதிர்வான அணுகுமுறை என்று சொல்லப்படுபவையும் தேவையற்றன.
கலைஞர் எதற்கெடுத்தாலும் அண்டை மாநிலங்களோடு பகைத்துக்
கொள்ளக் கூடாது என்ற அணுகுமுறை சலிப்பையும் வெறுப்பையுமே தருகிறது.

இந்தா வைத்துக் கொள் என்று கையில் கொடுத்ததை வாங்காமல்
பேசலாம் வா, பேசலாம் வா என்று சொல்லிக் கொண்டிருந்தால்
என்ன பொருள்?

கேரளம் செய்வதில் துளி கூட ஞாயம் இலலை. தமிழகம் செய்வதிலும்
துளி கூட ஞாயம் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக