பக்கங்கள்

திருக்குறள்

ஞாயிறு, நவம்பர் 27, 2011

மாவீரர் நாள் செய்தி 27-11-2011 விடுதலைப்புலிகள்!!!

தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்துள்ள மாவீரர் நாள் செய்தி,

தமிழீழ மக்களின் இனப்பிரச்சனையையும் அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்கான நியாயத்தையும் புரிந்துகொண்டு அழிக்கப்படும் ஓர் இனத்தின் விடுதலைக்காகப் போராடிவரும் எமதியக்கத்தின் மீது போடப்பட்டுள்ள தடைச்சட்டங்களை நீக்கி எமது மக்கள் நியாயமானதொரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு உலகநாடுகள் ஆதரவளிக்க வேண்டும். இனப்படுகொலையைப் புரிந்துவரும் சிங்கள ஆட்சியாளர்களின் பொய்ப் பரப்புரைகளைச் செவிமடுக்காமல் தமிழீழத்துக்கான தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்குமாறு இந்தியா உட்பட உலகநாடுகள் அனைத்தையும் வேண்டிநிற்கின்றோம்.


27.11.2011 
எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே!


இன்று மாவீரர் நாள். எமது இனத்தின் விடுதலைக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிருக்குயிரான வீரமறவர்களை நினைவு கூர்ந்து மதிப்பளிக்கும் புனித நாள். இது உலகத்தமிழினம் விடுதலைவேட்கை கொண்டு எழுச்சி கொள்ளும் மகத்தான நாள். தமிழரெல்லாம் தமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.


எமது விடுதலைப் பயணத்தின் முக்கியமான கட்டத்தில் இன்று நாம் நிற்கின்றோம். போராட்டம் இன்னும் ஓயவில்லை. தமிழீழத்தாகம் தீரவில்லை. மிகவும் கொடுங்கோன்மையான இராணுவச் சர்வாதிகார ஆட்சி தமிழர் தாயகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ளது. ஆயுத பலத்தின் மூலம் தமிழீழ மக்களைச் சிங்களப் பேரினவாதம் அடக்கியாண்டு நிற்கின்றது.


போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்ட இலட்சியம் மாறப் போவதில்லை. இழப்புக்களை எண்ணிச் சோர்வடையாமல் இலட்சியப் போராட்டத்தைத் தொடரும் பணி எமதாகும். இன்று தமிழீழத்துக்கான போராட்டம் தாயகத்தில் மட்டுமன்றி உலகளவில்; தமிழர்கள் வாழ்கின்ற எல்லாக் களங்களிலும் முனைப்புப்பெற்று நிற்கின்றது.


நீண்டதும் கடினமானதுமான தமிழீழத்துக்கான விடுதலைப் போரில் நாம் சந்தித்த இன்னல்கள், இடையூறுகள் ஏராளம். ஆனாலும் நாம் மனம் துவண்டு விடவில்லை. சவால்கள் நிறைந்த காலகட்டமாக இன்றைய நாள் இருப்பினும் அதுவே எமது நம்பிக்கைக்கான காலகட்டத்தின் திருநாளாகவும் இருக்கிறது.
தமிழர் வரலாற்றின் வழிவந்த வீரமரபை அடியொற்றிக் களமாடி மடிந்த விடுதலை வீரமறவர்களை ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து மதிப்பளிக்கும் மாவீரர் நாளாகஇ எமதியக்கத்தின் முதல் மாவீரர் லெப்.சங்கர் வீரச்சாவடைந்த நாளான நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தெரிவு செய்யப்பட்டது.
தமிழர் தாயகம் எதிரியின் பிடியில் வந்த பின்பு மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்தும் எதிரிப் படைகளால் சிதைத்தழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மணலாறு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்த அனைத்துத் துயிலுமில்லங்களும் சிதைக்கப்பட்டதோடு அவற்றின் மேல் இராணுவத்தினருக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன. தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் ஆறாத ரணத்தையும் சினத்தையும் ஏற்படுத்திய இந்தக் காட்டுமிராண்டிச் செயலுக்கு நிகரானதொன்றை நாகரிக உலகின் பிறிதெந்தப் பாகத்திலும் காணமுடியாது.
ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அழித்தாலன்றித் தமிழீழத் தாகத்தை யாராலும் அழித்துவிட முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்டம் 2009 இல் முள்ளிவாய்க்காலைக் கடந்தும் தீராத தமிழீழத் தாகத்துடன் இன்னும் முனைப்புப்பெற்று நிற்கின்றது.
நவம்பர் 2011 இல் சிறிலங்கா அரசு நியமித்த “உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு” அண்மையில் தனது அறிக்கையை வெளியிட்டது. குற்றவாளிகளை இனங்காண்பதற்கும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த அறிக்கை வழிகோலும் எனக் கூறப்பட்டது. குற்றவாளிகளாகக் காண்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதி கூறினார். ஆனால் சிறிலங்கா அரசு நியமித்த ஆணைக்குழுவானது சிங்கள அரசின் தேவைக்கு உதவும் அறிக்கையையே வெளியிட்டது. உண்மையான குற்றவாளிகளான சிறிலங்கா அதிபர் ராஜபக்ச உட்பட அவருடைய சகோதரர்களையும் கொலைவெறியோடு தமிழ்மக்களைக் கொன்ற இராணுவத் தலைமையையும் அந்த ஆணைக்குழுவால் எப்படிக் குற்றவாளிகளாகக் காண முடியும்? இலங்கை அரசியல் வரலாற்றில் ஆணைக்குழுக்களும் அறிக்கைகளும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை மாத்திரமே.
ஐ.நா. மனித உரிமைச் சட்டங்கள், போர் நெறிமுறைகள் மற்றும் உலக இராசதந்திர ஒழுங்குகள் போன்றவற்றையெல்லாம் சிறிலங்கா அரசு கேள்விக்குறியாக்கியுள்ளதுடன், போர்க்குற்றம் புரிந்த தனது இராணுவ அதிகாரிகளை இராசதந்திரிகளாகவும் தூதரக அதிகாரிகளாகவும் வெளிநாடுகளிலுள்ள சிறிலங்காவின் தூதரகங்களில் துணிச்சலாக அமர்த்தியுள்ளது.
இராணுவத்தளம், கடற்படைத்தளம், விமானப்படைத்தளம் உட்படப் பொருளாதார மையங்களையும் சிறிலங்காவில் அமைக்க உலகின் சில வல்லாதிக்க சக்திகள் போட்டியில் ஈடுபடுகின்றன. இதன்காரணமாகச் சிறிலங்கா அரசு செய்த போர்க்குற்றங்களை இந்நாடுகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த விழைகின்றன.சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட “சிறிலங்காவின் கொலைக்களம்” என்ற ஆவண ஒளிப்படத் தொகுப்பு உலக மனச்சாட்சியின் பார்வையை எம் மக்களின் பக்கம் திருப்பியிருப்பது நல்லதொரு அறிகுறியாகவே உள்ளது. அனைத்துலக ஊடகங்களால் கவனிக்கப்படாதிருந்த எமது மக்களின் அவலங்களை வெளிக்கொணர்ந்த சனல் 4 தொலைக்காட்சிக்கும், மனித உரிமை அமைப்புக்களுக்கும் ஆர்வலர்களுக்கும் எமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதோடு தமிழர்களுக்கான ஓர் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை அனைத்துலகச் சமுகத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறும் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
தமிழீழம் எமது கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு மரியாதை கிடைத்திருந்தது. முப்பத்து மூன்று ஆண்டுகளாகச் சிங்கள மொழித்திணிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. சிங்களக் குடியேற்றம் முற்றுமுழுதாகத் தடுக்கப்பட்டிருந்தது. தமிழீழத்தின் மீதான சிங்களப்படை வெறியர்களின் அடக்குமுறை, பொதுமக்களுக்கு எதிரான வன்கொடுமைகள், தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் என்பன தடுக்கப்பட்டிருந்தன.
ஆனால் தந்தை செல்வாவின் காலத்தில் தமிழர்களுக்கு இருந்த அறப்போராட்ட உரிமைகூட இன்று மறுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்க்கட்சிகள் உண்ணாநிலைப் போராட்டமோ – சட்டமறுப்போ – மறியல் போராட்டமோ – கதவடைப்போ – ஒத்துழையாமையோ – ஏன் ஒரு பொதுக்கூட்டம்கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. உலகச் சட்டங்கள் வழங்கியுள்ள அறவழியிலான போராட்ட உரிமை – கருத்துத் தெரிவிக்கும் உரிமை அனைத்தும் எமது தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன.
சிங்கள ஆட்சியாளர்கள், தமிழீழ மக்களின் கோரிக்கையை மட்டுமல்ல தமிழீழ மக்களின் உரிமை தொடர்பான உலகநாடுகளின் வேண்டுகோள்களையும் கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. தமிழரின் தாயகப் பிரதேசமான வடக்குக்கிழக்கில் பூர்வீக அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. மூன்று இலட்சம் சிங்களப் படைகளாலும் அவர்களின் இராணுவக் காவலரண்களாலும் இன்றுவரை குடியேறிக்கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான சிங்களக் குடியேறிகளாலும் தமிழீழம் ஆக்கிரமிக்கப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னான இந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழீழ மக்களின் அரசியல் தீர்வுக்கான எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளாமல் அவர்களை இன்னமும் ஒரு அரசியல் வெறுமைக்குள் வைத்திருக்கவே சிறிலங்கா அரசாங்கம் முனைகிறது.
ஏற்கனவே இருந்த உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் எமது மக்கள் மீண்டும் குடியேற அனுமதிக்கப்படாத நிலையில் மேலும்பல தமிழர் வாழ்விடங்கள் இராணுவப் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுத் தமிழ்மக்கள் தமது வாழ்விடங்களுக்குச் செல்லமுடியாமல் தடுக்கப்படுகின்றனர். தமிழர் வாழ்விடங்களில் திட்டமிடப்பட்ட முறையில் கலாச்சாரச் சீரழிவு சிங்கள அரசால் பரப்பப்படுகிறது. கிறீஸ் மனிதன் போன்ற அசாதாரண சம்பவங்களை உருவாக்கித் தமிழ்மக்கள் மீது உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தியும் போரற்ற சூழ்நிலையிலுங்கூட மக்;கள் வாழ்விடங்களில் படையினரின் பிரசன்னத்தை அதிகரித்தும் எமது மக்களின் நாளாந்த வாழ்வியலைக் குழப்பி அவர்களைப் பதட்டநிலைக்குள் வைத்து அரசியல் செய்வதே இந்தச் சிங்கள ஆட்சியாளர்களின் நோக்கமாகும்.
தமிழீழ மக்களின் இனப்பிரச்சனையையும் அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்கான நியாயத்தையும் புரிந்துகொண்டு அழிக்கப்படும் ஓர் இனத்தின் விடுதலைக்காகப் போராடிவரும் எமதியக்கத்தின் மீது போடப்பட்டுள்ள தடைச்சட்டங்களை நீக்கி எமது மக்கள் நியாயமானதொரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு உலகநாடுகள் ஆதரவளிக்க வேண்டும். இனப்படுகொலையைப் புரிந்துவரும் சிங்கள ஆட்சியாளர்களின் பொய்ப் பரப்புரைகளைச் செவிமடுக்காமல் தமிழீழத்துக்கான தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்குமாறு இந்தியா உட்பட உலகநாடுகள் அனைத்தையும் வேண்டிநிற்கின்றோம்.
எமது விடுதலைக்கான போராட்டம் இன்று தமிழகம் தொட்டுத் தமிழர் வாழும் நாடுகள் அனைத்திலும் எழுச்சி பெற்றுள்ளது. இன உணர்வும் மொழிப்பற்றும் மேலோங்கியுள்ளன. தமிழர் என்ற பெருமிதம் தமிழர் நெஞ்சில் ஊற்றெடுத்துள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் அளவுக்குத் தமிழுணர்வும் தமிழீழ மக்கள் மீதான ஆதரவும் தமிழ்நாட்டிலே வலுப்பெற்றுள்ளன.
தாயகத் தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் ஒன்றிணைவதைத் தடுப்பதற்குச் சிங்களப்பேரினவாத அரசு கங்கணம் கட்டி நிற்கின்றது. பலம் பொருந்திய சக்தியாக உலகத்தமிழர் உருவாவதைத் தடுக்க உலக நாடுகளின் ஆதரவையும் வேண்டி நிற்கின்றது. புலம்பெயர் தமிழர்களின் பலத்தைக் குறைப்பதற்காகவும் மனிதநேயப் பணிகளை முடக்குவதற்காகவும் சதித்திட்டங்களும் சூழ்ச்சிகளும் அரங்கேற்றப்படுகின்றன.
புலம்பெயர் தேசங்களில் அறிவாளிகளாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் வளர்ந்துவரும் தமிழ் இளையோர் தம்மீது தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் வைத்துள்ள அபரிமிதமான நம்பிக்கையை உணர்ந்து தமிழீழத்தின் விடியலுக்காகத் தொடர்ந்தும் அயராது உழைக்கவேண்டும். எமது தாயகத்தில் சிங்கள இராணுவ நெருக்குவாரத்துக்குள்ளும் சிறிலங்கா அரசின் சிறைகளுக்குள்ளும் வாடும் தமது வயதையொத்த இளையவர்களின் எதிர்காலத்தைச் சிறப்பாகக் கட்டமைக்கும் பொறுப்பும் கடமையும் தமக்கு உள்ளது என்பதைப் புரிந்துகொண்டு தாயக விடுதலைக்கான தமது முழுமையான பங்களிப்பை ஆர்வமுடன் செய்ய விரைந்து முன்வரவேண்டுமென அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்;.
எமக்கு முன்னால் எழக்கூடிய எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து தமிழரின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடுவோம். இழப்புக்களைக் கண்டு அஞ்சாமல் தளராத உறுதியுடன் தொடர்ந்து போராடும் மக்களே இறுதியில் வெற்றிபெறுவாரென்ற உண்மையை நெஞ்சில் நிறுத்தி நாம் செயலுறுதியுடன் போராடுவோம். காலம் இட்ட கட்டளைப்படி தமிழ்மக்களின் இருப்பைத் தக்கவைக்கும் தீர்வான தமிழீழத்தனியரசு கிடைக்கும் வரை நாம் எல்லா வழிகளிலும் தொடர்ந்து போராடுவோம்.

எமது மாவீரர்களின் வீரம் செறிந்த போராட்ட வாழ்வையும் எமது விடுதலைக்காக அவர்கள் புரிந்த மகத்தான ஈகங்களையும் நினைவுகூரும் இன்றைய நாளில் எத்தகைய துன்பங்களும் சவால்களும் எதிர்வந்தாலும்; தமிழீழத் தனியரசை வென்றெடுக்கும் வரை தளராது போராடுவோhம் என்று நாம் உறுதி கூறுகின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்”


தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக