பக்கங்கள்

திருக்குறள்

செவ்வாய், நவம்பர் 22, 2011

தலை சுற்றும் கணக்கு(கூடங்குளம்)

ஆந்திர மாநிலம் நாகார்ஜூனசாகர் மற்றும் கேரள மாநிலம் பூதான்கெட்டு பகுதிகளில் நிறுவப்பட உத்தேசிக்கப்பட்ட ஒரு பெரிய திட்டம், அம்மாநில மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பால் இடம்பெயர்ந்து தமிழகக் கரையோரமான கூடங்குளத்தில் நிலைகொண்டு, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது.ஆம், ரஷிய நாட்டின் உதவியோடு தமிழகத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணுமின் நிலையத்தின் பணிகள் இப்போது மக்கள் சக்தியால் சற்று முடங்கிக் கிடக்கின்றன.1992-ம் ஆண்டு நடைபெற்ற தென்மாநில முதல்வர்களின் மாநாட்டில் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்க ஒத்துக்கொண்டதுடன், அங்கு உற்பத்தியாகும் மின்சக்தியைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளவும் முடிவு செய்ததுதான் தமிழகம் செய்த முதல் தவறு.தத்தமது மாநிலங்களில் அணுமின் நிலையத்தை நிறுவ எதிர்ப்புத் தெரிவித்த கேரளம், ஆந்திரம், கர்நாடக அரசுகள், அணுமின் நிலையம் அமைப்பதற்காக தமிழகத்தைக் கைகாட்டிவிட்டு ஒதுங்கிக் கொண்டதில் இருந்தே அந்த மாநிலங்களின் ராஜதந்திரம் புரியும்.உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் மின்சக்தியில் சுமார் 4 சதவிகிதம் மட்டுமே அணுமின் நிலையத்தின் மூலம் பெறப்படுகிறது என்ற நிலையில் இதுபோன்ற அணுமின் நிலையங்கள் தேவைதானா என்ற குரல் உலகம் முழுவதுமே மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.கடற்கரையோரம் நிறுவப்படும் அணுமின் நிலைய உலைகளைக் குளிர்விக்கும், கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பு அகற்றும் ஆலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகளையும் கடலில் கொட்ட வேண்டிய நிலையில் கடல் வளம் பாதிக்கப்படாதா?கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத் தொடங்கும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் உவரி முதல் கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் வரையுள்ள கடலோரக் கிராமங்களிலுள்ள மீனவர்களின் நிலை என்ன?கடலில் கலக்கும் கதிர்வீச்சு கழிவுகளால் மீன் உள்ளிட்ட கடல் வளங்கள் பாதிக்கப்படும் நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரம் நிச்சயம் பாதிக்கும்.மேலும் இந்த அணுமின் நிலையத்துக்குத் தேவைப்படும் தண்ணீர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அணையிலிருந்து கொண்டு வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்குப் போதிய தண்ணீர் வசதி கிடைக்காத நிலையில் விவசாயமும் பாழாகும்.அணுஉலைக் கழிவுகளிலிருந்துதான், அணு ஆயுதம் தயாரிக்க உதவும் புளுட்டோனியம் பெறப்படுகிறது.கல்பாக்கம், தாராப்பூர் ஆகிய அணுமின் நிலையங்களிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 1,000 கிலோ புளுட்டோனியம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு ஸ்பூன் புளுட்டோனியம் 300 கோடி பேருக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் என்கிறது ஆய்வு.அப்படி என்றால் 1,000 கிலோ புளுட்டோனியம் மூலம் என்னவெல்லாம் நடக்கும்? கணக்குப் பார்த்தால் தலை சுற்றுகிறது.இப்படி பல்வகை பிரச்னைகளை ஏற்படுத்தும் அணுஉலைக் கழிவுகளை எங்கே கொண்டு போய்ச் சேர்ப்பது என்பது மிக முக்கியமான விஷயம்.கூடங்குளம் அணுமின் நிலையம் ஆண்டுக்கு 30 டன் யுரேனியத்தைப் பயன்படுத்தும் நிலையில் சுமார் 20 ஆண்டுகள் உலை இயங்கும் நிலையில் சுமார் 600 டன் கழிவு வெளியாகக் கூடும். இந்தக் கழிவை நாம் பாதுகாப்பாக பல ஆயிரம் ஆண்டுகள் வரை வைத்திருக்க வேண்டும். இது இயலுமா?இந்தக் கழிவுகளால் கடல் நீர் மாசடையும். மேலும் அணு உலையிலிருந்து வெளியாகும் நீராவி, புகை வடிவிலான கழிவுகள் மனிதனின் வியர்வை, சுவாசம் என ஒவ்வோர் அணுவிலும் புகுந்து அணுவின்றி எதுவும் அசையாது என்ற சொல்லுக்கு வலு சேர்ப்பதுபோல் உடலின் ஒவ்வொரு மூலக்கூற்றினையும் துவம்சம் செய்யாதா?இதையும் தாண்டிச் சிந்தித்தால், உலையில் வெடிப்பு ஏற்பட்டால், சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதன் பாதிப்பு இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அப்படி என்றால் அதன் பாதிப்பு கேரள மாநில எல்லை முதல் மதுரை வரை இருக்குமே. இந்த பரந்து விரிந்த பகுதிகளில் வாழும் மக்கள், கால்நடைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள், விவசாய நிலங்கள் அனைத்தையும் பாதுகாப்பது என்பது அரசுகளால் சாத்தியமாகக்கூடிய விஷயமா என்றால் நிச்சயம் இல்லை.விஞ்ஞானத்தில் வளர்ந்த ஜெர்மனி போன்ற நாடுகளே அணுமின் திட்டங்களை முடக்குவதற்கு உத்தேசித்துள்ள நிலையில் வளர முயன்று வரும் இந்தியாவுக்கு, நமக்கு இது தேவைதானா?-நன்றி தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக