பக்கங்கள்

திருக்குறள்

செவ்வாய், நவம்பர் 29, 2011

இந்தியனுக்கு அந்நியன் தரப்போகும் அல்வா துண்டுகள்!! 1


இந்தியனுக்கு அந்நியன் தரப்போகும் அல்வா துண்டுகள் !


பா.ஜ.க போன்ற மதவாத கட்சி வேண்டாம். எங்களுக்கு காந்திஜி சொன்ன மிதவாதமாக இருக்கும் காங்கிரஸே போதுமானது என, பிடிவாதமாக இரண்டாவது முறையாகவும் காங்கிரஸை அரியணையில் அமர வைத்த
இந்தியர்களின் தலையில் இப்போது விழுந்து கொண்டிருப்பது அடியல்ல இடி!
பொருளாதார புலி மன்மோகன் சிங்கின் சமீப பரிசு சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் 51 சதவிகித முதலீடு. அதாவது சில்லறை வணிகத்தில் (multi brand retail) அன்னிய முதலீட்டை 51 சதவீதமும், ஒரு பொருளின் சில்லறை வணிகத்தில் (single brand retail) அன்னிய முதலீட்டை 100 சதவீதமும் இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளது
சமீபத்தில் ஹர்விந்தர் சிங் எனும் வாலிபர் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் இந்தியாவின் விவசாய அமைச்சருமான சரத்பவாரை ஒரு அறை தான் கொடுத்தார். ஆனால் மன்மோகன் சிங் 120 கோடி இந்தியர்களின் வயிற்றில் ஒரே அடியாக அடித்துள்ளார்.
மன்மோகன் சிங் பல விதங்களிலும் நன்மைகள் தான் செய்து கொண்டிருக்கிறார். எவருக்கும் புரிந்தபாடில்லை என்றுதான் சொல்லத் தோன்றகிறது..
“எங்கம்மா தெருவோர காய்கறி கடை வச்சு தான் என்னை படிக்க வச்சாங்க” இனி எந்த நடுத்தர வர்க்க மாணவனும் இப்படிச் சொல்ல முடியாது. காரணம்; இனிமேல் தெருவோர கடைகள் இருந்தால் தானே. மொத்தமாக ஊருக்கு ஒரு வால்மார்ட், கே மார்ட், டெஸ்கோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களை உள்ளே கொண்டு வந்து விட்டாலே, எல்லோரும் பிழைக்க வழி பிறந்து விடாதா.. என்ன..?
ஏன் வேகாத வெயிலிலும், மழையிலும் துன்பப்பட வேண்டும்?. இனி நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள். எப்படி..?
வேலை தேடுபவர்களுக்கும், வைத்துள்ள பொருட்களை விற்க விவசாயிகளுக்கும் ஆத்மார்த்தமாக உதவி செய்ய இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இருக்கிறார்கள். நாம் எதற்காகவும் அலைய வேண்டிய அவசியமிருக்காது. கருவேப்பிலையை கூட குளு குளு வசதி கடையில் போய் வாங்கி வரலாம்.
காரணம் நம் பொருளாதார மேதைகள், இந்த நிறுவனங்கள் தாங்கள் கொள்முதல் செய்யும் பொருட்களில் 30 சதவிகிதத்தை இந்தியாவில் தான் வாங்க வேண்டும் என்று சொல்லி நம் அனைவர் வயிற்றிலும் பால் வார்த்து இருக்கிறார்கள். எப்படியான பெருந்தன்மை..? பன்னாட்டு நிறுவனங்கள உள்ளே வந்து விட்டால் நாட்டின் அந்நிய செலவாணி நிரம்பி வழியும்.
என்னவொன்றன்;  நாளுக்கு நாள் உள்ளூரில் பஞ்சம் பிழைக்க முடியாமல் நடுத்தர வர்க்கமும் அவதி பட, களவாணிகளும் பெருகிக் கொண்டே தான் இருப்பார்கள். இதைத்தான் நமது பொருளாதார மேதைகள் இப்போது செய்துள்ளார்கள்.
இந்த சில்லறை வியாபாரத்தை நம்பி நேரிடையாக மறைமுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் ஏறக்குறைய 20 கோடி பேர்கள். இதன் மூலம் 25 லட்சம் கோடி பணம் புழங்குகின்றது. இவர்களில் அன்றாடங்காய்ச்சி முதல் அகாயசூரர்கள் வரைக்கும் உண்டு. தெருமுனையில் வண்டியில் வந்து விற்பவர் முதல் அண்ணாச்சி நடத்தும் மொத்த கொள்முதல் வரைக்கும் உண்டு.
இதில் தான் இப்போது காங்கிரஸ் அரசாங்கம் கை வைத்துள்ளது. கைக்கு ஓட்டுப் போட்டவர்கள் கண்ணீர் விட்டு கதற முடியாது. 2014 வரைக்கும் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.
இந்தியாவில் ஜனதா அரசாங்கம் இருந்த போது விரட்டியத்த பெப்ஸி கோக் நிறுவனங்களை தாரை தப்பட்டை முழங்க வரவேற்றவர்களும் நம் தலைவர்களே. ஆனால் இவர்கள் தான் இப்போது ஆளுக்கொரு பக்கமாய் நின்றுகொண்டு முதலைக் கண்ணீர் விடுகிறார்கள்.
இப்போதல்ல எப்போதுமே இந்தியாவில் ஒன்றல்ல? ஓராயிரம் பூதங்கள் உண்டு. ஆனால் மன்மோகன் பதவிக்கு வந்ததும் பன்னாட்டு பூதங்கள் அத்தனைக்கும் வலிமையான பலம் கிடைத்துள்ளது.
இந்தியாவில் இருபது வருடங்களுக்கு முன்னால் பெயரளவில் பெப்ஸி,கோக் குளிர்பானங்கள் இருந்தது. ஆனால் இன்றோ இதுவொரு கௌரவம் சார்ந்த முக்கியத்துவப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது. தொடக்கத்தில் மூன்று ரூபாய்க்கு கடையில் கிடைத்தது. அவ்வாறு விற்றால் கடைக்காரருக்கு 80 பைசா கிடைக்கும். ஆனால் இன்று அதன் விலை 12 ரூபாய்.
3000 அடிக்கு மேலாக ஆழ்குழாய் கிணறுகள் மூலம் உறிஞ்சப்பட்ட நம்முடைய நிலத்தடி நீரை எடுத்து ஜாலக்கு வித்தை சேர்த்து, நமக்கே இன்று  12 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். நமக்குப் பிடித்தமான நடிகர்களும், விளையாட்டு வீரர்களும், பல இலட்சங்கள்   கைமாறிய பின், தங்கள் கைகளில் அவற்றினை  ஏந்தி, கண் சிமிட்டுகின்றார்கள். சொக்கிப் போகின்றோம் நாம். விளம்பரங்கள் செய்யும் மாயவித்தைகளால் மதிமயங்கி நாகரிக மனிதராக நாமும் வேடம் கட்டிக் கொள்கின்றோம்.
எல்லா வியாபாரிகளும் லாபத்தை நோக்கி தானே ஓடுவார்கள்?
இப்போது தமிழ்நாட்டில் தயாராகும் ஒரு சிமெண்ட் மூட்டை (50 கிலோ) யின் விலை ஏறக்குறைய 300 ரூபாய்க்கு விற்பனையாகின்றது. ஆனால் இதன் லாபத்தோடு கூடிய அடிப்படை விலையென்பது இதில் பாதிக்கு பாதி. கடந்த முறை திமுக அரசாங்கம் விலை குறைப்பை வலியுறுத்திய போதும் எவரும் குறைக்கத் தயாராய் இல்லை என்பது தான் இதில் மிகப் பெரிய ஆச்சரியம்.
இதே சிமெண்ட் விலை பக்கத்து மாநிலத்தில் வேறொரு விலை. அங்கிருந்து இங்கே கொண்டு வர முடியாத அளவுக்கு சிண்டிகேட் வைத்து தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இறக்குமதி சிமெண்ட் என்பது இன்னமும் மலிவானது. யாருக்கு பாதிப்பு. கட்டிங் போவது அரசியல்வாதிகளுக்கு. விலை உயர்வால் கதறியழுவது திருவாளர் பொதுஜனமே.
இது சிமெண்ட் துறையில் மட்டுமல்ல. அனைத்து துறைகளிலுமே இது போன்று இந்திய தொழிலதிபர்கள் அவரவர்களுக்கு வசதிப்படி சிண்டிகேட் அமைத்து செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் அமைக்கப் போகும் சிண்டிகேட் என்பது இவர்களின் டவுசர் கழன்று போய்விடும் அளவுக்கு இருப்பது தானே முறையாகும். அது தான் இனிமேல் நடக்கப் போகின்றது. இந்திய தொழில் அதிபர்களுக்கே சவாலாக இருந்தால் சாதாரண பொதுஜனத்தின் பாடு?
பன்னாட்டு நிறுவனங்கள் அதிலும் சற்று வித்யாசனமானவர்கள். லாபத்தை போலவே லாபத்துக்கு இடைஞ்சலாக இருப்பவர்களையம் ஒழித்துக் கட்டுவது. இன்று தமிழ்நாட்டில் குடிசைத் தொழிலாக இருந்த காளிமார்க், டொரினோ, போன்ற உள்நாட்டு குளிர்பான தயாரிப்புகள் ஏறக்குறைய இறுதி மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு பெட்டிக்கடையிலும் பெப்ஸியும், கோக்குடன் இவர்கள் கொடுக்கும் குளிர்சாதன பெட்டி தானே நம்மை வரவேற்றுக் கொண்டிருக்கிறது. விலையை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றியதோடு மற்றொரு காரியத்தையும் தவறாமல் செய்து கொண்டிருந்தார்கள். உள்ளூர் தயாரிப்பான குளிர்பான பாட்டில்களையும் கைப்பற்றி உடைத்து நொறுக்கிக் கொண்டே வர இன்று பாட்டில் இல்லாத உள்ளூர் நிறுவனங்கள் விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இத்தனை நாளும் மறைமுகமாக பலவகையிலும் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். இனி முன் வாசல் வழியாகவே உள்ளே வரலாம் என்று மன்மோகன் சிங்கிள் மேன் ஆர்மியாக செயல்படுத்தி சாதித்திருக்கிறார்.
உலகத்தோடு ஒத்து வாழ் என்ற முதுமொழியை கடைபிடிப்பதில் மன் மோகன் சிங்கிற்கு முதல் தகுதியுண்டு. காரணம் இந்திய பிரச்சனைகளை தீர்ப்பதற்கே வருடத்தில் பாதி நாட்கள் உலகம் சுற்றும் வாலிபனாக இருந்து கொண்டிருக்கிறார். இவர் மூளையில் உதித்த ஒவ்வொரு கொள்கைகளும் எந்த இந்தியனும் மறக்க கூடாத ஒன்றாகும்.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இனி அரசாங்கத்தை சார்ந்து இருக்க வேண்டியதில்லை. 15 நாளைக்கு ஒரு முறை தங்கள் விலையை தாங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம். இதன் விளைவாக காங்கிரஸ் முதன் முறையாக பதவிக்கு வந்தது முதல் இன்று வரைக்கும் பெட்ரோல் விலை நூறு சதவிகிதம் உயர்ந்துள்ளது.- நன்றி தமிழ் மீடியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக