பக்கங்கள்

திருக்குறள்

வியாழன், நவம்பர் 24, 2011

திபெத்திந்தியா!!!!!

திபெத்திந்தியா - இப்படியொரு நாடு இருக்குங்க!

விரிந்துபரந்து நீண்டு கிடக்கும் தமிழக கர்நாடக மாநிலங்களின் எல்லைப் பகுதி அது. ஆசனூரிலிருந்து கொள்ளேகால் செல்லும் வழியில் இருக்கிறது உடையார்பாளையா! இந்திய வரலாற்றில் குறிப்பிடும்படியானதொரு இடம், ஆனால் அவ்வளவாக இந்தியர்களுக்கு அடையாளம் தெரியாத இடம் அது.

தமிழகத்தின் கேர்மாளாம் வனச்சோதனைச் சாவடி தாண்டியதிலிருந்து மிக மோசமான சாலை கடும் சவாலைக் கொடுத்தது. குத்தும் கூரான கற்களை ஒரு வழியாய் சமாளித்து உடையார்பாளையாவை (கர்நாடகா மாநிலம்) எட்டும்போது அந்தப் பகுதியில் சாலை புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.




திபெத் அகதிகளுக்கென இந்திய அரசாங்கம் அளித்திருக்கும் (இராஜ) வாழ்க்கை குறித்த அளவெடுக்கும் கண்களோடு அந்த இடத்தை அடைந்த போது ஆச்சரியத்தில் மனம் தடுமாறியது. திபெத்திலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த திபெத்திய அகதிகளுக்கு, அந்தப் பகுதியில் 23 கிராமங்களில் எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்து மத்திய அரசாங்கம் பாதுகாத்து வருகிறது என்பதுதான் ஆச்சரியம்.

முதன்மையாய் இருக்கும் ஒரு உயர்ந்த கிராமத்தை நோக்கி எங்கள் வாகனம் மெதுவாய் ஊர்ந்து கொண்டிருக்கும்போது, இரண்டு சக்கர வாகனங்களில் எதிர்திசையிலிருந்து பறக்கும் திபெத்திய இளைஞர்களைப் பார்க்கும்போது இது இந்தியா தானா!? என்ற கேள்வி மூளைக்குள் குடைந்தெடுக்கிறது. ஈழத்து மக்களுக்காக இந்த தேசம் அமைத்துக் கொடுத்திருக்கும் முகாம்கள் குறித்த கோபம் கொதிக்கிறது. 






ஒருவழியாய் அந்த கிராமத்தின் மையத்திற்கு வர, எதோ அவர்களுக்கான முப்பது நாள் வழிபாடு விழா நடப்பதை அறிய முடிகிறது. எங்கு நோக்கினும் திபெத்தியக் கொடிகள், அவர்கள் தேர்தலுக்கான சுவரொட்டிகள், தகுதி நிறைந்த கல்விக்கூடங்கள், வசதி நிறைந்த மருத்துவமனை, பெரிய வழிபாட்டுக்கூடம், கூடி மகிழ சமுதாயக்கூடம், விளையாட அழகிய மைதானம் என எல்லாமே திபெத்தில் இருக்கும் சூழல் நம்மை ஆட்கொ’ல்’கிறது.

திபெத்திலிருந்து அகதிகளாக வந்த அவர்களுக்கு நல்ல சூழலில் மலைப்பிரதேசம் போன்று இடம் வழங்கி, அவர்களுக்கு நிலம் வழங்கி மிகக் கௌரவமான அளவில் குடியமர்த்திருக்கின்றது. வேதனை நிறைந்த வேடிக்கை என்னவெனில், திபெத்தியர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் இந்திய தேசத்தின் மதிப்புமிகு வாக்காளன், குடிமகனான தமிழக, கர்நாடக மக்கள் கூலிகளாக வேலைசெய்து பிழைக்கிறார்கள் என்பதுதான்.

காலம்காலமாக இந்திய மண்ணில் வாழ்ந்து வருபவனுக்குக்கூட சொந்த நிலமின்றி, அகதியாக இங்கே வந்தவர்களிடம் கூலிக்கு வேலைக்கு செல்வதின் முரண் எனக்குப் புரிபடவேயில்லை. ஒரு கண்ணில் வெண்ணை மறு கண்ணில் சுண்ணாம்பு என இருக்கும் இந்த தேசம் குறித்த வெகுண்ட மனதோடு அங்கே கொஞ்சம் சுற்றிப்பார்க்க ஆரம்பித்தோம்.

திபெத்தியப் பெண்கள் ஆங்காங்கே கடை விரித்திருக்கின்றனர். நம்மை மிக சிநேகமாக எதிர்கொள்கின்றனர். தங்கள் சமூக பண்டிகையை ஒட்டி கையில் ஒரு கையில் மாலையை ஏந்தி எந்நேரமும் பிரார்த்தனையில் இருக்கின்றனர்.



கன்னடம் பேசும் ஒரு பெண்மணி காய்கறிக்கடை வைத்திருக்கிறார். பேச்சுக்கொடுக்கும் போது, கீழே ஊர்ப்பக்கம் இருந்து காலையில் வந்து விற்றுவிட்டு மாலை திரும்புவதாகச் சொன்னார். கன்னடமும், திபெத்தியர்களுக்காக இந்தியும் மிக இயல்பாகப் பேசுகிறார்.

இதுவரை ஒரு முறைகூட வந்திராதா தலாய்லாமாவிற்காக, எப்போதாவது வந்தால் தங்குவதற்கென அற்புதமான ஒரு குடியிருப்பு கட்டி வைத்துள்ளனர். எப்போதாவது வருவாரா அல்லது எப்போதுமே அந்த குடியிருப்பு அப்படியேதான் கிடக்குமா எனும் சந்தேகத்தைத் தவிர்க்க முடியவில்லை.

துறவு நிலை மேற்கொண்ட சிறுவர்கள் மஞ்சள் அடர்சிவப்பு ஆடையில் ஆங்காங்கே புழங்கிக்கொண்டிருக்கின்றனர். அங்கிங்கென சுற்றிவிட்டு ஓரிடத்தில் அமர்கையில், அழகாய் தமிழ்ப் பேசும் திபெத்திய பெண்மணி கிடைத்தார். நீண்ட நாட்கள் புதுவையில் இருந்ததால் மிக இயல்பாக தமிழில் உரையாடுகிறார்.





மேலும் சிறிது நேரத்தைக் கடத்திவிட்டு, திபெத்திலிருந்து இந்தியாவிற்குள் திரும்ப ஆரம்பித்தோம். அன்று முதல் இன்றுவரை மனதைச் சமாதானப்படுத்திக்கொள்ள எந்தவொரு பொருத்தமான வார்த்தைகளும் கிடைக்கவில்லை.--- நன்றி கதிர் அண்ணா(கசியும் மௌனம்)...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக