பக்கங்கள்

திருக்குறள்

செவ்வாய், நவம்பர் 22, 2011

வறுமை


ஒளிரும் இந்தியாவில் வளரும் வறுமை


உலகில் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் (1-3) இந்தியாவில் வாழ்கின்றனர். உலக வங்கி 456 மில்லியன் இந்தியர்கள் (மொத்த மக்கட்தொகையில் 42% பேர்) உலக வறுமைக் கோடான ஒரு நாளைக்கு 1.25 டாலர் (வாங்கும் திறன் சமநிலை) வருமானத்திற்குக் கீழே வாழ்கின்றனர் என மதிப்பிடுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இன்னும் இரு ஆண்டுகளில் 10 சதவீதத்தை எட்டும் என நமது மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தனியார் வங்கியான எஸ் வங்கியின் பத்து கிளைகளை திறந்து வைத்து உரையாற்றுகையில் கூறி பெருமிதமடைந்துள்ளார். மேலும், 1951 முதல் 1979 வரை 3.5 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 80களில் 5.2 சதவீதமாகவும், 8வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் 5.6 சதவீதமாகவும், 11வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் 7.5 சதவீதமாகவும் வளர்ந்துள்ளதாகவும், இது நடப்பு நிதியாண்டில் 9 சதவீதத்தை எட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இதே காலத்தில் தான் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நாடாகிய இந்தியா 230 மில்லியன் ஊட்டச்சத்துக் குறைவான மக்களைக் கொண்டுள்ளதெனவும், உலக பசி அட்டவணையில் 94வது இடத்தில் உள்ளதெனவும், 5 வயதிற்குக் குறைவான சிறார்களில் 43 சதவீதம் பேர் எடைக்குறைவோடு உள்ளனர் எனவும், இது உலகிலேயே அதிகமானதெனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது பொருளாதார வளர்ச்சியுடன் (?) கூடிய வறுமையின் வளர்ச்சியின் பிரதிபலிப்பேயாகும்.
வறுமைக் கோடு
நாம் அடிக்கடி பயன்படுத்தும் பல வார்த்தைகளின் உண்மையான பொருள் பலருக்குத் தெரிந்திருப்பதில்லை. அதே போன்றுதான் இந்த வறுமைக் கோட்டின் எல்லையுமாகும். 2005-06ஆம் நிதியாண்டில் நகர்ப்புறத்தில் மாத வருமானம் ரூ.560-க்கு குறைவாகவும், கிராமப் பகுதிகளில் ரூ.368க்கு குறைவாகவும் சம்பாதிக்கும் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் என வரையறுத்தனர். இவ்வறுமைக் கோடு நிர்ணயம் 1978ஆம் ஆண்டு நிலவிய விலைவாசி அடிப்படையில் கிராமங்களில் தினசரி 2400 கலோரி உணவும், நகரங்களில் 2100 கலோரி உணவும் உட்கொள்ள இதுபோதுமானதாக இருக்கும் என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
farmer ஒளிரும் இந்தியாவில் வளரும் வறுமை
ஆனால், இன்றைக்கு விற்கக்கூடிய விலைவாசியில் இதே அளவு வருமானத்தில் இந்த அளவு கலோரி உணவு உட்கொள்ள இயலுமா? 2008ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் வறுமைக்கோட்டை வரையறுக்க ஒரு கமிட்டியை நிர்ணயித்தது. அக்கமிட்டி 2009ல் வழங்கிய அறிக்கையில் கிராமப்புறங்களில் ரூ.700க்கு குறைவாகவும், நகர்ப்புறங்களில் ரூ.1000க்கு குறைவாகவும் வருமானம் பெறுபவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்வதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், இவ்வறிக்கையில் இக்கணக்கீட்டின்படி 50 சதவீதத்திற்கு மேற்பட்டோர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வதாகவும், அதே நேரத்தில் இக்கணக்கீட்டை தனிநபர் உணவு நுகர்வாகிய 12.25 கிலோ அடிப்படையிலும், கலோரி உணவு அடிப்படையிலும் கணக்கிட்டால் கிராமப்புற வறுமை என்பது 80 சதவீதத்திற்கு இருக்குமெனவும் குறிப்பிடுகிறது.
வறுமை நிலை
இந்தியாவில் 1951ல் இந்தியாவின் கிராமப்புற மக்கள்தொகையில் 47% வறுமைக் கோட்டிற்குக் கீழேயிருந்தது. 1960-61ல் 45% குறைந்தது, 1986-87ல் 34% குறைந்தது. 1989-90ல் 33%மானது. 1999-2000ல் அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி 26.17%மாக இருந்தது.
Villagers beside hut q ஒளிரும் இந்தியாவில் வளரும் வறுமை
1991ல் இந்தியா பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் தாராளமயமாக்கல் கொள்கையை ஏற்றுக்கொண்ட போது அடுத்த பத்தாண்டுகளில் நமது நாடு பூலோக சொர்க்கமாகப் போகிறதென்றும், ஏழ்மையே இல்லாத நிலை உருவாகி பாலாறும், தேனாறும் ஓடுமென்றும் இன்றைய பாரதப்பிரதமரும், அன்றைய மத்திய நிதியமைச்சருமாகிய டாக்டர்.மன்மோகன்சிங் மற்றும் மான்டேசிங் அலுவாலியா போன்ற பொருளாதார வல்லுநர்கள் கோஷங்களை எழுப்பினர். ஆனால் வறுமை மேலும் வளர்ந்துள்ளது என்பது பல்வேறு குழுக்களின் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி 2004-05ஆம் ஆண்டில் இந்தியாவில் 40.71 கோடிப்பேர் (37.2%) வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்வதாகக் குறிப்பிடுகிறது. மத்திய திட்டக்குழு மார்ச் 2001 புள்ளிவிவரப்படி 30.17 கோடிப்பேர் (27.5%) வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்வதாகவும், அமைப்பாக்கம் செய்யப்பெறாத தொழிலகங்களின் தேசியக்குழு தலைவர் அர்ஜுன் சென் குப்தா ஆய்வின்படி 2007ஆம் ஆண்டில் 77% இந்தியர்கள் (அதாவது 836 மில்லியன் மக்கள்) ஒரு நாளைக்கு ரூ.20-க்கும் கீழான வருமானத்தைப் பெற்று வறுமையில் வாழ்வதாகவும் குறிப்பிடுகிறார்.
சுரேஷ் டெண்டுல்கர் அறிக்கைப்படி கண்டறியப்பட்ட 40.71 கோடிப்பேருக்கும் அனைவருக்கும் உணவுத்திட்டத்தின்படி உணவு வழங்கிட மத்திய அரசு திட்டமிட்டால் இதில் பத்துக் கோடிப்பேருக்கு மட்டுமே இருப்பிடம் என்று ஒரு குடிசையாவது இருக்கிறது. மற்ற 30.17 கோடிப்பேர் தெருவோரங்களிலும், சாலைகளிலும், பொது இடங்களிலும் குடியிருந்து வருகின்றனர். தனது சொந்த உபயோகத்திற்கான இலகுரக விமானத்தை தனது வீட்டு மொட்டைமாடியில் இறக்கிடுமளவிற்கு விரிந்து பரந்த அளவில் இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானிக்கு வீடு இருகிறது. ஆனால், இந்தியாவில் ரேஷன் கார்டு வாங்கிட ஒரு முகவரியில்லாத அளவிற்கு வசதி படைத்தோர் 30.17 கோடிப்பேர் உள்ளனர் என்பதும், புதிய பொருளாதாரக் கொள்கைகள் தந்த அபரிமிதமான வளர்ச்சிப் போக்கேயாகும்.
வறுமை உயரக் காரணங்கள்
இந்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையின் காரணமாக இந்தியாவில் அடிப்படைக்கட்டமைப்பான விவசாயம் முழுவதுமாக அழிந்து கொண்டிருக்கிறது. இதில் வேலைவாய்ப்புப் பெற்ற பல்வேறு விவசாயக் கூலித் தொழிலாளர்களும் சிறு விவசாயிகளும் விவசாயத் தொழிலை நம்ப முடியாமல் புலம் பெயர்ந்து வருகின்றனர். 1947ல் இந்தியாவின் சராசரி வருமானமும், தென் கொரியாவின் சராசரி வருமானமும் சரிசமமாக இருந்தது. ஆனால் 2000ல் தென்கொரியா வளர்ந்த நாடாக உருவானது. இந்தியா ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகி வருகிறது. 1997-2007 வரையிலான காலகட்டத்தில் இந்திய விவசாயிகளின் தற்கொலைகள் 2,00,000 என அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
manmohan 200 ஒளிரும் இந்தியாவில் வளரும் வறுமை
அரசுக் கொள்கைகள் காரணமாக அரசின் முதலீடு விவசாயத்தில் பெருமளவில் குறைந்து வருகிறது. 2006 வரை அரசு விவசாயத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் .02%க்கு குறைவாகவும், கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3%க்கு குறைவாகவும் மட்டுமே முதலீடு செய்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையான கடன் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் கடன் பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கை பொருளாதார சீர்த்திருத்தங்களில் முதல் பத்தாண்டில் இரட்டிப்பாகியுள்ளது. இது 26% விவசாயக் குடும்பங்களிலிருந்து 48.6% ஆகியுள்ளது. ஆனால் அரசு மேலும் மேலும் தனது (தாராளவாத நடைமுறை காரணமாக) முதலீட்டை குறைத்துக் கொண்டேயிருந்தது. சிறு விவசாயிகளுக்கு வாழ்க்கை மென்மேலும் கடினமாக்கப்பட்டது.
இதேபோன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாவதில் அதிக கவனம் செலுத்திவரும் மத்திய, மாநில அரசுகள் இதுவரை 29,73,190 சதுர கீலோ மீட்டர் நிலப்பரப்பினை கையகப்படுத்திட ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 54.5 சதவீத நிலப்பரப்பு (16,20,388 ச.கி.மீ) விவசாய நிலமாகும். இதனால் சிறு விவசாயிகளும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும் தங்களுக்குத் தெரிந்த தொழிலை இழந்து எதுவும் தெரியாத கட்டுமானம் மற்றும் இதர தொழில்களுக்கு உதிரித் தொழிலாளிகளாக தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் இவ்வாறு கையகப்படுத்தப்படும் நிலங்களில் உருவாக்கப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் எந்தவிதமான தொழிற்சட்டங்களும் செல்லுப்படியாகக் கூடியதாய் இல்லையென்பதும் ஓர் ஆய்வுக்குரிய பொருளாகும்.
இந்தியாவில் 78% விவசாயிகள் இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தைக் கொண்டுள்ளனர். இவர்கள் மொத்த நிலப்பகுதியில் 33% நிலத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் இவர்கள் தங்களின் கடின உழைப்பின் காரணமாக மொத்த இந்திய உணவு உற்பத்தியில் 41 சதவீதத்தையும், மொத்த காய்கனி உற்பத்தியில் 51 சதவீதத்தையும் உற்பத்தி செய்து வருகின்றனர். இவர்களது நிலங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படுத்தப்படும்போதும், விலையேற்றம் மற்றும் இடுபொருட்களின் விலை உயர்வு காரணமாகவும், விவசாயத்தை விட்டு வெளியேறும்போது இந்தியாவின் உணவு உற்பத்தி மேலும் சரிந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்திடும்.
வறுமை ஒழிப்பு
வறுமை ஒழிப்புத் திட்டங்கள் பண்டித ஜவகர்லால் நேரு காலத்தில் ‘சமுதாய வளர்ச்சி் என்ற பெயரில் துவக்கப்பட்டது. இந்திரா காந்தி காலத்தில் வறுமையை ஒழிப்போம் என்ற கோஷத்துடன் தொடரப்பட்டது. இக்காலக்கட்டத்தில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்திட்டம், கிராமப்புற இளைஞர் வேலைவாய்ப்புத்திட்டம் ஆகிய தனிநபர் பயனளிப்புத் திட்டங்களால் வறுமை ஒழிப்பு நடைபெற்றது. ‘பொருளாதார மாமேதை’ டாக்டர்.மன்மோகன் சிங்கின் தாராள மயம், தனியார் மயம், உலக மயம் என்ற மும்மயக் கொள்கையால் தனிநபர் பயனளிப்புத் திட்டங்கள் ஒழிக்கப்பட்டது. தனிநபர்கள் தானாகவே போட்டி உலகில் நீச்சலடித்து முன்னேறிக் கொள்ள வேண்டும் என்ற கருத்து இன்று வலுப்பட்டு வருகிறது. இதனால்தான் 1980களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீதமாகயிருந்திட்ட கிராமப்புற வளர்ச்சிக்கான முதலீடு 2000 ஆண்டில் 6 சதவீதமாக படிப்படியாகக் குறைக்கப்பட்டது. ஆனால் அதே சமயத்தில் 2009 ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு இலட்சம் கோடி பல்வேறு தொழிலதிபர்களுக்கு மான்யமாக வழங்கப்பட்டுள்ளதும் நடந்திருக்கிறது.
2095434 3c9f7e44ec ஒளிரும் இந்தியாவில் வளரும் வறுமை
இந்தியாவில் கிராமப்புற வேலைவாய்ப்பிற்கு வரப்பிரசாதமாகவும், கிராமப்புற வேலைவாய்ப்பில் புதிய அத்தியாயம் படைக்குமெனவும் கருதப்பட்டு கொண்டுவரப்பட்ட மகாத்மாகாந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம், முழு அர்த்த அடர்த்தியுடன் செயல்படுத்தப்படுகிறதா என்பது கூட கேள்விக் குறியாகவே உள்ளது. தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டத்தின் முக்கிய குறிக்கோள் வேலைவாய்ப்பு வேண்டுமென பதிவு செய்திட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நூறு நாள் வேலைவாய்ப்பு அளிப்பதேயாகும்.
ஆனால் மே 2010ம் நாள் புள்ளிவிவரப்படி 2010-11ம் நிதியாண்டில் 10,71,61,154 குடும்பங்கள் இதுவரை வேலைவாய்ப்புக் கோரி பதிவு செய்துள்ளன. இதில் மே 16ந் தேதிவரை 17,52,736 குடும்பங்கள் வேலை தேவையெனக் கோரியுள்ளதெனவும், அவர்களில் 15,25,405 குடும்பங்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும், வேலைவாய்ப்பு கோரியவர்களில் 2,27,331 குடும்பங்களுக்கு வேலை வழங்கப்படவில்லை, அதோடு மட்டுமின்றி 688 குடும்பங்களுக்கு மட்டுமே இந்த நிதியாண்டில் நூறு நாள் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், கிராமப்புற வளர்ச்சித்துறையின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படியெனில் சட்டப்பூர்வமான உறுதியளிப்பை நிறைவு செய்வதிலும் குறிக்கோள்கள் முழுமையடைவதில்லை என்பது தெரிகிறது.
India+Group+15+017 ஒளிரும் இந்தியாவில் வளரும் வறுமை
உலகம் முழுவதும் 1.4 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர். இவர்களின் நாள் வருமானம் 1.25 டாலர் ஆகும். அபிவிருத்தியடையாத 48 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து மதிப்பை விட குறைவாக உள்ளது. அதேபோல உலக பணக்காரர்களில் 20% பேர் உலகின் மொத்த வளங்களின் 86% கைப்பற்றியுள்ளனர். மீதமுள்ள 80% மக்களுக்கு கிடைப்பது வெறும் 14% மட்டுமே. இந்த ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது. இந்தியாவின் ஆட்சியாளர்கள் 20% பேரில் இந்தியர்களின் எண்ணிக்கை உயர்த்துவதற்கு கவலை கொள்ளும் அளவிற்கு எஞ்சியுள்ள 80% பேரை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதில்லை என்பது புதிய பொருளாதாரக் கொள்கையை உயர்த்திப்பிடிக்க ஆரம்பித்த பின்பு வெளிப்படையாகத் தெரிய வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக