பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், நவம்பர் 07, 2016

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 1

(தமிழ்மொழி வெறுப்பு) 11/11/2012 
ம..வெங்கடேசன்     
ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழரா? ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ் மொழிக்காக அரும்பாடுபட்டவர் என்றெல்லாம் இன்று ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய்த் தோற்றத்தைத் தமிழகத்திலே உருவாக்கி வந்தனர். இன்னும் உருவாக்கி வருகின்றனர். ஆனால் ‘தமிழர் தலைவர்’ என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரை சொல்கின்றார்களே – அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா? 

”கண்ணப்பர் தெலுங்கர், நான், கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர்” (பெரியார் ஈ.வே. ரா. சிந்தனைகள் – முதல் தொகுதி) என்றும், 

”நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன்” (குடியரசு 22.08.1926) என்றும் 

தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். ‘நான் கன்னடியன்’ என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக் கொண்டவரைத்தான் ‘தமிழர்’ என்றும், ‘தமிழர் தலைவர்’ என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ‘நான் கன்னடியன்’ என்று சொல்லிக்கொண்ட ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழ்ப் புலவர்களை விமர்சித்த விமர்சனங்கள் கொஞ்சநஞ்சமல்ல. தமிழ் புலவர்களைப் பற்றிய விமர்சனம்: ‘

தமிழும் தமிழுரும்’ என்ற நூலில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்: 

”இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் இரண்டு மூன்று புலவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் 1. தொல்காப்பியன், 2. திருவள்ளுவன், 3. கம்பன். இம்மூவரில், 1. தொல்காப்பியன் ஆரியக்கூலி, ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்துவிட்ட மாபெரும் துரோகி. 2. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச்சென்றான். 3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் – தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுப்படுத்தி கூலிவாங்கி பிழைக்கும் மாபெரும் தமிழ்த் துரோகியே ஆவான். முழுப்பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன். தன்னைப் பார்ப்பானாகவே கருதிக்கொண்டு பார்ப்பான் கூட சொல்லப்பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான். இம்மூவர்களும் ஜாதியையும், ஜாதித் தொழிலையும் ஏற்றுக்கொண்டவர்கள் ஆவார்கள்”.

 இதுதான் முக்கியத் தமிழ்ப் புலவர்களைப் பற்றிய பார்வை

 ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு. தொல்காப்பியரும், கம்பனும் துரோகிகள்! சரியான பட்டம்! தமிழுக்காக தமிழ் இலக்கியத்தை படைத்த இவர்கள் தமிழ்த் துரோகி என்றால் அதே தமிழைப் பழித்த ஈ.வே. ராமசாமி நாயக்கரும் துரோகிதானே! ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழை எவ்வாறெல்லாம் விமர்சித்தார் தெரியுமா? தமிழ் காட்டுமிராண்டி மொழி: ”தமிழும் தமிழரும்” என்ற நூலிலே, ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:- 
”தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகிறேன்.” ”தமிழ்ப் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100 க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்வான்களாக… தமிழ்ப் புலவர்களாக வெகுகாலம் இருக்க நேர்ந்துவிட்டதனால் அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்.
” (அதாவது தமிழ் படித்ததால்தான் பகுத்தறிவு இல்லாமல் போய்விட்டார்களாம். உலகம் அறியாதவர்களாகி விட்டார்களாம். நூலாசிரியர்.) ”தமிழை ஒதுக்கிவிடுவதால் உனக்கு (தமிழருக்கு) நட்டம் என்ன? வேறுமொழியை ஏற்றுக் கொள்வதால் உனக்கு பாதகம் என்ன?” ”புலவர்களுக்கு (தமிழ் படித்துத் தமிழால் பிழைப்பவர்களுக்கு) வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லையே என்கிற காரணம் ஒன்றே ஒன்று அல்லாமல் தமிழர்கள் நல்வாழ்விற்கு தமிழ் எதற்கு ஆக வேண்டியிருக்கிறது?” ”யாருக்குப் பிறந்தாலும் மானம் தேவை. அது உன்னிடம் இருக்கிறதா, என்னிடம் இருக்கிறதா என்பதுதான் இப்பொழுது சிந்திக்க வேண்டிய தேவை. அதையும்விடத் தமிழ்மொழியிலும், தமிழ் சமுதாயத்திலும் இருக்கிறதா, இருப்பதற்குத் தமிழ் உதவியதா என்பதுதான் முக்கியமான, முதலாவதான கேள்வி?” ”இந்தியை நாட்டுமொழியாகவும், அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக்கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன்.” (தமிழ்ப்பற்றால் இந்தியை எதிர்க்கவில்லை என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரே சாட்சியம் கொடுத்துள்ளார் – நூலாசிரியர்.) 

”தமிழ் காட்டுமிராண்டிக் காலத்துமொழி” (பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி) ”
தமிழ் ஒரு நியூசென்சு, தமிழ்ப் புலவர்கள் (யாவரும்) குமுக எதிரிகள்” (நூல்: தந்தை பெரியார், கவிஞர் கருணானந்தம்) ”
தாய்ப் பாலை (தமிழை) எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு அது எதற்குப் பயன்படுகிறது?” ”இன்றைய முற்போக்குக்கு முதல் எதிரி தாய்ப் பால் குடித்த மக்கள்தானே.” (பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி) 

இதுதான் தமிழைப் பற்றிய ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய கணிப்பு. 
இன்று தமிழுக்காக போராடுகின்ற தமிழறிஞர்கள் முதலில் எதிர்க்க வேண்டியவர் ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். (இதிலே இன்னொரு விஷயம் தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்று சொன்ன பாரதிதாசன் தமிழைப் பழித்த ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சீடராகவே இருந்தது, பாரதிதாசனின் தமிழ்ப் பற்றுமேல் சிறிது ஐயம் கொள்ளவைக்கிறது.) தமிழைப் பற்றி இவ்வளவு தரக்குறைவுடன் கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஆங்கில மொழியைப் பற்றி பெருமையாக கூறிய கருத்துக்களைப் பற்றி பார்ப்போம். -
 தொடரும் சில குறிப்புகள்: 01. ஈ.வே. ராமசாமி நாயக்கர் கன்னடர்… 
பெரியார் ஈ.வே.ரா நாட்டாலும் பழக்க வழக்கங்களாலும் தமிழராயினும், மொழியால் கன்னடர்தான். ஆம் அவரது வீட்டு மொழி கன்னடம். தாம் கன்னடர் என்பதை அவரே தமது பேச்சிலும், எழுத்திலும் பன்முறை மிகவும் பெருமிதத்தோடு சொல்லிக்கொண்டார். 
டாக்டர் ம.பொ. சிவஞானம் நூல்: தமிழகத்தில் பிறமொழியினர் 02. கம்பன் தமிழர் நாகரிகத்தின் விரோதியா? சிலர் இலக்கிய ஆராய்ச்சி முறைக்கு மாறாகக் குறுக்கு வழியிலே புகுந்து கம்பனைப் பற்றி ஏதேதோ எழுதுகின்றனர். பேசுகின்றனர். அரசியல் கொள்கை, இன வெறுப்பு, பண்பாட்டு வெறுப்பு இவைகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு கம்பன் மீது காய்ந்து விழுகின்றனர். ‘கம்பன் தமிழர் நாகரிகத்தின் விரோதி: தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரி. தமிழ் மொழியின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை. நாட்டுப்பற்றில்லாதவன். மொழிப்பற்றில்லாதவன். கலாசாரப் பற்றில்லாதவன்’ என்றெல்லாம் ஒரு சிலர் ஓங்கிப் பேசுகின்றனர். இது உண்மைக்கு மாறான பேச்சென்பதே கம்பனை நடுநிலையிலிருந்து கற்றவர்களின் கருத்து. தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் நூல்: கம்பன் கண்ட தமிழகம். 03. கம்பன் காவியத்தைக் கொளுத்தலாமா? கம்பன் மீது இன்று சிலர் காய்ந்து விழுகின்றனர். தமிழின் சிறப்பைத் தரணியிலே விளக்கி நிற்கும் இக்காவியத்தை கொளுத்த வேண்டும் என்றுகூடச் சிலர் கூறுகின்றனர். கம்பன் காவியத்தைக் கையினால் தொடக்கூடாது என்றும் பேசுகின்றனர். சிறந்த காவியங்கள் – உயர்ந்த இலக்கியங்கள் – எந்தக் காலத்திலும் மக்கள் உள்ளத்திலிருந்து ஓடிப் போய்விடமாட்டா. அவைகளை அழிக்க முயன்றவர்கள் யாராயினும் வெற்றி காணமாட்டார்கள். இந்த உண்மையை நாம் தமிழ் இலக்கிய வரலாற்றிலே காணலாம். 
தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் நூல்: கம்பன் கண்ட தமிழகம். 
-தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக