பக்கங்கள்

திருக்குறள்

செவ்வாய், ஜனவரி 23, 2018

இந்துத்துவ அரட்டல்

Gunaseelan Samuel
இந்துத்துவ அரட்டல்-1
திராவிடம் மெல்லக் கொல்லும் நஞ்சு என்பதைக் காலம் கடந்தாவது அறிந்துகொண்டோம். ஆனால், திராவிடத்துடன் கைகோத்துக்கொண்டு இயங்கும் ‘இந்தி’யம் தமிழரினத்தைப் பூண்டோடு ஒழுத்துக்கட்டுவது எனும் நோக்கில் வெறிகொண்டு திரிகிறது. செயலலிதாவின் இறப்பிற்குப்பின் அதன் வெறி உச்சிக்கு ஏறிவிட்டது.
பிராமணியம்+பணியா வணிகம்+கொற்றுப்புரைகள் (கார்ப்பொரேட்டுகள்) எனும் கலவையின் மொத்த வடிவமே ‘இந்தி’யம் அல்லது ‘பாரதீயம்’. உலகளாவிய இல்லுமினாட்டிகளின் கொற்றுப்புரைகளுடன் அந்தப் ‘பாரதீயம்’ கூட்டுச் சேர்ந்துள்ளது. ஏழை எளிய நாடுகளின் இயற்கை வளங்களைச் சூறையாடுகிற அந்தக் கொற்றுப்புரைகளின் பொருளியல் வேட்டைக்குத் துணைபோவது என்பதே ‘பாரதீயத்’தின் பணி. இந்தப் ‘பாரதீயத்’தின் மறுபெயர்தான் இந்துத்துவம்.
இல்லாத பொல்லாத ‘இந்து’ எனும் அடையாளத்தையும் மதத்தையும் தோற்றுவித்தவர்கள் ஐரோப்பியர்கள். அவர்கள் ஏவிவிட்ட பேய்தான் ஆரியம். அதனால், பிராமணியம் புத்துயிர் பெற்றது. அதற்கு நன்றிக்கடன் செலுத்துவதற்கென்றே ‘இந்துத்துவம்’ எனும் கொள்கை பிறப்பெடுத்தது. இதனால், இந்துத்துவம் எனும் பேய்க்கள்ளி எவ்வாறு முளைத்தது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
முன்னோடிகள்
‘இந்து’ எனும் சொல்லை ஒரு மதத்தைக் குறிக்கும் சொல்லாக முதன்முதலில் ஆண்டது 'செபாசுட்டியாவோ மான்ரிக்' (Friar Sebastiao Manrique) எனும் கிறித்துவப் பாதிரியேயாவார். 1649ஆம் ஆண்டில் அவர் அதைச் செய்தார். இசுலாமியர் அல்லாத மக்களைத் தனித்துப் பிரித்துக் காட்டுவதற்காகவே இசுலாமியரல்லாத எல்லாரும் ‘இந்து’ சதமயயத்தவர் என்னும் மதக் அடையாளத்தை முதன்முதலில் புகுத்தியவர் அவ் வெளிநாட்டுப் பாதிரியேயாவார். (http://en.wikipedia.org/wiki/Hindu)
சிந்து ஆற்றுக்கு அப்பாலிருக்கும் நிலப்பரப்பை ‘இந்து’ எனும் பாரசீக மொழிச் சொல்லால் குறிப்பிட்டனர். பாரசீக மொழியில் சகரம் ‘ஹ’கரமாக ஆகும் என்பதால், ‘சிந்து’ என்பது ‘இந்து’ (Hindu) என்றானது. முதலாம் டேரியசு பாரசீகத்தை ஆண்ட கி. மு. 6ஆம் நூற்றாண்டில்தான் ‘சிந்து’ எனும் புவியியல் பெயரைப் பாரசீகர்கள் ‘இந்து’ என்று ஒலிக்கத் தொடங்கினர். அரபு மொழியில் அதுவே ‘இந்து’ என்றானது. (http://en.wikipedia.org/wiki/Hindu) இந்து’ என்பது அப்போது ஓர் இடப்பெயராக மட்டுமேயிருந்தது.
'கீழையுலக ஆய்வாளர்கள்' (the Asiatic Soiety) என்று கூறிக்கொண்ட ஐரோப்பியர்கள் 18ஆம் நாற்றாண்டில் தோற்றுவித்த 'ஆசியக் கழகம்' (the Asiatic Soiety) என்னும் ஆய்வுக்கழகம், இந்தியத் துணைக்கண் டத்தில் வாழும் பல்வேறு தேசிய இனங்களின் அடையாளங்களை யெல்லாம் புறக்கணித்துவிட்டு, அதில் வாழ்ந்துவரும் மக்களை மத அடிப்படையில் ‘இந்து’ என்றும் ‘இசுலாமியர்’ என்றும் செயற்கையாகப் பிரித்தனர். பின்னர், அதே ஐரோப்பியர்கள் புத்தர்களும் அருகர்களும் (சைனர்களும்) சீக்கியர்களும் தனித்தனிச் சமயத்தவராவரென அடையாளப்படுத்தி, அவர்களெல்லாம் ‘இந்து’ எனும் வகைப்பாட்டுக்குள் அடங்குவரென இட்டுக்கட்டிக் கூறினர்.
‘இந்து’ என்னும் அடையாளத்திற்குள் தமிழர்கள் வரவே மாட்டார்கள். ஏனெனில், தமிழர்களின் வழிபாடு, அடிப்படையில் குலதெய்வ வழிபாடாகும். மூதாதையர் வழிபாடே குலதெய்வ வழிபாடு. தமிழரில் மேட்டுக்குடியினரும் ஆண்டைகளும் அறிஞர்களும் தோற்றுவித்த ஆசீவகம், சிவனியம், விண்ணவம் (வைணவம்), பார்ப்பாரியம் முதலானவையும் முருக வழிபாடும் தமிழர்களிடம் தொன்றுதொட்டு வழிவழிவந்த குலதெய்வ வழிபாட்டைப் புறக்கணித்துவிட்டு அவர்களின்மேல் வலிந்து போர்த்தப்பட்டவை. ஏதோ ஒரு வகையில், தமிழ் அறிவர்கள் முன்மொழிந்த வான்மெய்யியல் பாடங்களை அடியொற்றி வந்த சமயங்கள் அவையாகும்.
‘இந்து’ என்னும் பெயரும் அடையாளமும் அரசியலும் வடக்கிலிருந்து வந்தவை; தமிழரின் குலதெய்வ வழிபாட்டு முறைக்குப் புறம்பானவை யென்பது இதனால் விளங்கும்
இந்துத்துவ அரட்டல்-2
வடக்கே தோன்றிய ‘இந்து’வெனும் ஒவ்வா அடையாளத்தைப் பழைய மதராசு மாகாணத்திற்குக் கொண்டுவந்தவர்கள் வடுகப் பிராமணர்களும் பணம்படைத்த சூத்திரர்களும் வடுக வணிகச் சாதியினருமேயாவர்.
1833ஆம் ஆண்டில் மதராசு மாகாணத்தில் 'சியார்ச் நார்ட்டன்' (George Norton) எனும் ஆங்கிலேயரின் தூண்டுதலால் கோமலேசுவரபுரம் சி. சீனிவாசப் பிள்ளை என்னும் செல்வந்தர், "இந்து இலக்கியக் கழகம்" (Hindu Literary Association) எனும் அமைப்பைத் தோற்றுவித்து அதன் வழியாக ‘இந்து’வெனும் அடையாளத்தை அரசியலாக்க முயன்றார். 1840ஆம் ஆண்டில் இந்து இலக்கியக் கழகம் செயலற்றுப்போனது. கிறித்துவச் சமயப் பரப்பலை எதிர்ப்பதற்கென்றே Native Interpreter என்னும் ஆங்கில ஏட்டை சீ. நாராயணசாமி நாயுடு அதே ஆண்டில் தொடங்கினார். கோமுட்டிச் செட்டியும் பெருவணிகருமான 'காசுலு லட்சுமணராசு செட்டி' (Gazulu Lakshminarasu Chetty 1806-68) 1844ஆம் ஆண்டில் அந்த ஏட்டை விலைக்கு வாங்கி Cresent என அதன் பெயரை மாற்றி, 'எட்வர்ட் ஆர்லீ' (Edward Harley) எனும் ஓய்வுபெற்ற ஆங்கிலக் கடற்படை அதிகாரியை ஆசிரியராகக் கொண்டு கிறித்துவச் சமயப் பரப்பலிலிருந்து ‘இந்து’ மதத்தைக் காக்க முனைந்தார்.
சம்புவராயர் ஆட்சியை ஒழித்துத் தமிழ் மண்ணை விசயநகர வடுகப் பேரரசின்கீழ் அடிமைப்படுத்தியப் பின்னர், முதலாம் புக்கனின் இரண்டாவது மகனான 'குமார கம்பணன்' 1283ஆம் ஆண்டில் காஞ்சியிலிருந்து ஆளத் தொடங்கினான்; பின்னர், மதுரைச் சுல்தான்களின் ஆட்சியை ஒழிக்கப்போவதாகப் பொய்யுரைத்து, அம் மதுரைமீது படையயெடுத்தான்; பாண்டியநாட்டைக் கவர்ந்தான்.
அப் பாண்டியநாட்டை முசுலிம்களிடமிருந்து மீட்டுப் பாண்டியரிடமே திருப்பி ஒப்படைக்காமல், விசயநகர வடுகர்ப் பேரரசைத் தமிழகத்தில் மேலும் விரிவுப்படுத்தினான். குமார கம்பணனின் பட்டத்தரசியயான 'கங்காதேவி', 1333ஆம் ஆண்டில் "மதுரா விலாசம் அல்லது வீரகம்பணன் சரித்தம்" எனும் நூலைச் சமற்கிருதத்தில் இயற்றினாள். அந்த நூலில் ‘இந்து’ எனும் சொல் இல்லை; ‘தருமம்’ என்னும் சொல்தான் அதில் ஆளப்பட்டுள்ளது. மதுரை சுல்தான்களின் கொடுங்கோலாட்சியை ஒழித்த குமார கம்பணன், ‘தருமத்தின்’ ஆட்சியை மீட்டதாக மட்டுமே அந் நூல் சொல்கிறது. அந்தத் ‘தருமம்’, சனாதனத் தருமத்தையே குறிக்கும்.
சாதிக் கொடுமைகளிலிருந்து மீள ஏங்கிய ‘கீழ்ச்சாதித்’ தமிழர்கள் சிலர் தம் குலதெய்வ வழிபாட்டை உதறியெறிந்துவிட்டுக் கிறித்துவத்திற்கோ இசுலாத்திற்கோ மாறியதால், 19ஆம் நூற்றாண்டில் சாதிக்கட்டுக்கு ஆளாக்கப்பட்டனர். அவ்வாறு மதம் மாறியயோரிடம் சொத்து ஏதேனும் இருந்தால், அவை வலிய பறிக்கப்பட்டன. தத்தம் பெண்டு பிள்ளைகளையயும்கூட அவர்கள் இழக்க நேரிட்டது. இது போன்ற அவலத்தை ஒழிக்க எண்ணிய ஆங்கிலேய அரசு, கிறித்துவ விடையூழியர்கள் தந்த பெரும் அழுத்தங்களால், 1845 சனவரி மாதத்தில் 'லெக்சு லோசி' சட்டவரைவை (Lex Loci Draft Bill) முன்மொழிந்தது.
'லெக்சு லோசி' சட்டவரைவை எதிர்த்துக் காசுலு லட்சுமணராசு செட்டி கொதித்தெழுந்தார். ஆங்கிலேயராட்சி அவ் வரைவுச் சட்டத்தை வைத்து நால்வரண (சனாதன) தருமத்தையும் சாதிக் கட்டுமானத்தையும் குலைக்கப் பார்ப்பதாகச் சொல்லி 1845 ஏப்ரல் மாதம் 'மேல்சாதியர்' 200 பேரைக் கூட்டிச் சென்னையில் ஒரு கூட்டம் போட்டார். அவர் நடத்திய அக் கூட்டம்தான் ‘இந்து’ எனும் மத அடிப்படையில் பழைய மதராசு மாகாணத்தில் போடப்பட்ட முதல் அரசியல் கூட்டமாம். 1840ஆம் ஆண்டில் செத்துப்போன இந்து இலக்கியக் கழகத்தை 1846ஆம் ஆண்டில் அதே காசுலு லட்சுமணராசு செட்டி உயிர்ப்பிக்க முயன்றார்.
‘இந்து’ மத அரசியலை மதராசு மாகாணத்திற்குக் கொணர்ந்தவர்கள் வடுகர்களும் பிராமணர்களும் என்பது இதனால் தெள்ளென விளங்கும்.
1851ஆம் ஆண்டில் 'பிரிட்டிசு இந்தியக் கழகம்' (British Indian Association) என்னும் முதல் அரசியல் அமைப்பு வங்கத்தில் தோற்றுவிக்கப்பட்டது. அதன் கிளையை மதராசு மாகாணத்தில் நிறுவிய பெருமக்கள், அதோடு முரண்பட்டனர். அதிலிருந்து விலகிய காசுலு லட்சுமணராசு செட்டியும் கோமலேசுவரபுரம் சீனிவாசப் பிள்ளையும் சேர்ந்து 'மதராசு உள்நாட்டவர் கழகம்' (Madras Native Association) எனும் அமைப்பை 1852ஆம் ஆண்டில் தோற்றுவித்தனர். நால்வரண (சனாதன) தருமத்தையும் சாதி முறையையும் எதிர்த்து எந்தவொரு சீர்திருத்தத்தையும் கொண்டுவரக் கூடாது எனும் கடும் நிலைப்பாடு காசுலு லட்சுமணராசு செட்டியின் நிலைப்பாடாயிருந்தது. சாதிக் கொடுமைகளையும் மூடநம்பிக்கைகளையும் வறுமையையும் போக்குவதற்கு ஆங்கிலேயராட்சிக்கு உறுதுணையாயிருக்க வேண்டுமென்பது சீனிவாசப் பிள்ளையின் நேரெதிர் நிலைப்பாடாயிருந்தது. இதனால், காசுலு லட்சுமணராசு செட்டிக்கும் சீனிவாசப் பிள்ளைக்கும் இடையில் முரண்பாடு முற்றியது. சீனிவாசப் பிள்ளை மதராசு உள்நாட்டவர் கழகத்திலிருந்து விலகி, 'இந்து முற்போக்கு வளர்ச்சிக் கழகம்' (Hindu Progressive Improvement Society) என்னும் சீர்திருந்த அமைப்பைத் 1852ஆம் ஆண்டில் தோற்றுவித்தார். சீனிவாசப் பிள்ளை இறந்தபின் வெங்கடராயலு நாயுடு எனும் வடுகர் அந்த அமைப்பைக் கைப்பற்றிக் கொண்டார்.
மேற்போந்த அமைப்புகளிலெல்லாம் தெலுங்கர்களே பெரும்பான்மையராயிருந்தனர்.
விசயநகரத்து நாயக்கர்கள் கட்டிக்காத்த நால்வரண (சனாதன) நெறி, ஆங்கிலேயரின் ஆட்சியின்கீழ்க் குலைந்து வருவதைக் கண்டு அரண்டு மிரண்டு அதனைக் கட்டிக்காக்க வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பிய மதராசு மகாசன சபைதான்1885ஆம் ஆண்டில் தோன்றிய 'இந்தியப் பேராயக் கட்சி'யின் முன்னோடியாகும். 'இந்து' ஏட்டைத் தொடங்கிய 'எம். வீரராகவாச்சாரியார்' (1857-1906), 'கணபதி தீட்சிதர் சுப்பிரமணி ஐயர்' (1855-1916), 'பனம்பாக்கம் அனந்தாச்சார்லு' (1843-1908) ஆகியோரால் 1884ஆம் ஆண்டில் மதராசு மகாசன சபை தோற்றுவிக்கப்பட்டது.
‘இந்து’ கொள்கையைத் தமிழ் மண்ணில் இறக்குமதி செய்வதில் தெலுங்கு வடுகர்களைவிட மராத்தி வடுகர்கள்தாம் கூடுதல் முனைப்பு காட்டினர். கிழக்கிந்திய குழும ஆட்சியை நிலைப்படுத்தி வலுவாக்குவதில் தேசாந்திர (தேசாசுத்த) பிராமணர்கள் என்னும் மராத்தி பிராமணர்களின் பங்கு மிகப் பெரிய பங்காகும். ஆங்கிலேயராட்சியில் இவர்கள்தாம் உள்நாட்டு அதிகார வகுப்பாயிருந்தனர். மதராசு மாகாணத்திலிருந்த இப் பிராமணர்களும் வடுகர்களும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு நல்ல பிள்ளைகளாய் அடங்கியொடுங்கி ஊழியம் செய்வதில் கண்ணும் கருத்துமாயிருந்து ஆட்சித்துறைகளை யெல்லாம் வளைத்துப் போட்டுக்கொண்டனர்.
இந்தச் சூழலில்தான், ஆங்கிலேயர் ஆட்சிக்குச் சார்பாயிருந்த மிதவியர்களால் இந்துவியத்தின் முன்னோடி அமைப்புகள் வங்கத்தில் தோன்றின.-ஆய்வறிஞர் ஐயா குணா 
https://www.facebook.com/gunaseelan.samuel.7?ref=br_rs  
https://www.facebook.com/gunaseelan.samuel.7/posts/1494825227301583

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக