பக்கங்கள்

திருக்குறள்

செவ்வாய், ஜனவரி 23, 2018

இந்துத்துவ அரட்டல்-6,7

இந்துத்துவ அரட்டல்-6
அரட்டல் (Terrorist) கொள்கை
பதினெட்டாம் நூற்றாண்டில் பிராமண நடுத்தர வகுப்பிடம் ‘இந்து’ எனும் ஓர்மையும் ‘இந்திய’ ஓர்மையும் தலையெடுத்தது. முதலில் வங்கத்திலும் அடுத்துப் பஞ்சாபிலும் அது தீவிர அரட்டல் வன்முறை வடிவத்தை எடுத்தமையால், அதன் காற்றைப் பிடுங்குவதற்கென்றே 1885ஆம் ஆண்டில் "இந்தியத் தேசியப் பேராயத்தை" (Indian National Congress) ஆலன்ஆக்டேவியன் இயூம் (Allan Octavian Hume 1829-1912) தோற்றுவித்தார்; பீறிட்டு எழுந்துவந்த இந்து-இந்தி(ய)த் தேசிய ஓர்மையையும், வங்கத்து இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் தோன்றிய கமுக்கமான கரவு கழகங்களையும் அம் மிதவிய அமைப்பைக்கொண்டு குடுவைக்குள் அடக்கப் பார்த்தார். ஆனால், அம் மிதவிய அமைப்பிற்குள்ளேதான் 'பால கங்காதர திலகர்' (1886-1920) எனும் சித்பாவன பிராமணர் மகாராட்டிரத்தில் தலையெடுத்தார். ஆங்கிலேய அரசுடன் ஒத்துழைத்து நன்மை பெற விழைந்த இன்னொரு சித்பாவன பிராமணரும் பேராயக் கட்சித் தலைவருமான 'கோபால கிருட்டின கோக்கலே'வை (1866-1915) எதிர்த்து அவர் களமாடினார்.
அரட்டல் வன்முறையைக்கொண்டுதான் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து ஆங்கிலேயர் ஆட்சியை அகற்ற முடியுமெனும் எண்ணம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் துளிர்த்தது. அந்தக் காலத்தில் வங்காளத்தில் 'அக்ரா' (Akra) எனும் உடற்பயிற்சிக் களரிகள் பரவலாக விளங்கின. அக் களரிகளில் பயிற்சி பெற்றுவந்த இளைஞர்களையெல்லாம் திரட்டிக் கிழக்கு வங்கத்திலிருந்த டாக்கா நகரத்தை மையமாகக்கொண்டு 'டாக்கா அனுசீலன் சமிதி'யும் கொல்கொத்தா நகரை நடுவமாகக்கொண்டு 'யுகாந்தர் குழு'வும் தோற்றுவிக்கப்பட்டன. இவ்விரு அரட்டல் வன்முறை (பயங்கரவாத) அமைப்புகளும் 1902ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன.
வெடிகுண்டு தாக்குதல்களையும், அரசியல் படுகொலைகளையும் அரங்கேற்றுவது முதலான அரட்டல் (பயங்கரவாத) அரசியல் வழிநின்ற தீவிர இந்து தேசிய இயக்கமான அனுசீலன் இயக்கத்திற்கு அரவிந்த கோசும் அவரது தம்பியான பரீந்திரநாத் கோசும் (1880 -1959) தலைமை தாங்கினர். அரவிந்தரின் அனுசீலன் இயக்கம், காளி (சத்தி) வழிபாட்டை அடியொற்றியது. பக்கிம் சந்திர சாட்டர்ச்சியின் (1838-94) எழுத்துகளும் விவேகானந்தரின் (1863-1902) எழுத்துகளும் அந்த அரட்டல் இயக்கத்தின் மெய்யியல் அடிதளமாயின. 1881ஆம் ஆண்டில் பக்கிம் சந்திர சாட்டர்ச்சி இயற்றிய “வந்தே மாதரம்” எனும் பாடலில் “இந்தியத் தாயை”த் ‘துர்கை’ என்றும் ‘இலக்குமி’ என்றும் குறிப்பிடுவதைக்கொண்டு காளி வழிபாட்டைத் தழுவியே வங்கத்து அரட்டல் வன்முறை வளர்ந்ததைப் புரிந்துகொள்ளலாம்.
வங்கத்தில் தோன்றிய அனுசீலன் சமிதியும் யுகாந்தர் குழுவும் மீமிகக் கமுக்கமாக இயங்கிவந்த கரவுக் கழகங்களாகும் (Secret Societies). இக் கரவுக் கழகங்களைச் சேர்ந்த பெரும்பாலோர் இங்கிலாந்து முதலான ஐரோப்பிய நாடுகள் உயர்கல்வி பெற்ற வங்காளப் பிராமணர்களாயிருந்தனர். இவர்கள் ஐரோப்பாவில் விளங்கிய ‘அரசுக் குலைப்பு’ (Anarchist) கொள்கையாலும், இத்தாலியத் தேசியராகிய 'மாசினி'யின் கொள்கையாலும் 'கக்குசோ ஒக்கக்கூரா' (Kakuzo Okakura) எனும் சப்பானியரின் 'அனைத்தாசிய' (Pan-Asianism) கொள்கையாலும் ஈர்க்கப்பட்டனர்.
1902ஆம் ஆண்டில் வங்கத்து அனுசீலன் சமிதியின்கீழ் மூன்று அமைப்புகள் இயங்கிவந்தன. 'சத்தீசு சந்திர பாசு', 'சரளாதேவி' ஆகியோரின்கீழ் இயங்கிவந்த இரு அமைப்புகள் போக, 'சதீந்திரநாத் பானர்ச்சி', 'அரவிந்த கோசு' ஆகியோரின் தலைமையில் மூன்றாவது அமைப்பு இருந்தது. 1905ஆம் ஆண்டில் பழைய வங்காளத்தை மேற்கு வங்கம் என்றும் கிழக்கு வங்கம் என்றும் ஆங்கிலேயர் அரசு இரண்டாகப் பிரித்தது. வங்காளப் பத்ரலோகுகளிடம் அது மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், உடற்பயிற்சிக் களரிகளை ஏற்படுத்திய இந்து கரவுக் கழகங்கள், வங்க இளைஞர்களுக்குச் சிலம்பம், கத்தி முதலான கருவிகளை ஆளச் சொல்லிக்கொடுத்தன. கிழக்கு வங்காள அனுசீலன் சமிதியின் டாக்கா கிளை, 'புலின் பிகாரி தாசு'வின் (1877–1949) தலைமையின்கீழ் நல்லதோர் அரட்டல் வன்முறை இயக்கமாக வளர்ந்தது.
மாணிக்கதலா சதி வழக்குக்குப்பின் அனுசீலன் சமிதியின் தலைவராகிய 'பாகா சடின்' (Bhaga Jatin 1879-1915) வங்கம், பீகார், ஒடியா, உத்தர பைதிரம் ஆகிய இடங்களில் அதன் கிளைகளைத் தோற்றுவித்தார். கங்கை கழிமுகத்திலிருக்கும் சுந்தரவனத்தில் இந்து அரட்டலர்கள் ஒளிந்து வாழ்ந்தனர். இவர்களில் சிலர், அயல்நாடுகளிலிருந்து கமுக்கமாக இயங்கிவந்தனர். கொல்கொத்தாவின் வில்லியம் கோட்டையைப் பாசறையாகக் கொண்டிருந்த 'யாட்' படைப்பிரிவுடன் (Jat Regiment) பாகா சடின் கமுக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். நரேந்திரநாத் எனும் அரட்டலரின் தலைமையில் அனுசீலன் சமிதி கொள்ளை, கொலை நடத்தித் தம் இயக்கத்திற்குப் பணம் திரட்டினார். பிரேன் தத்த குப்தா எனும் சடினின் கூட்டாளி, 'சம்சுல் ஆலம்' என்னும் வங்கக் காவல்துறை அதிகாரியைக் கொல்ல திட்டமிட்டதால், அவர்களின்மேல் 'ஔரா-சிவப்பூர் சதி வழக்கு' தொடுக்கப்பட்டது.
1907ஆம் ஆண்டுதொட்டுப் 'பரிந்திர குமார் கோசு' (Barindra Kumar Ghose 1880-1959) தலைமையிலமைந்த யுகாந்தர் குழு, உருசியப் புரட்சிக் குழுக்களின் பாங்கில் செயல்படத் தொடங்கியது. பிரிட்டிசாரின் ஆளுகைக்குட்பட்ட வங்கத்தில் இது போன்ற கரவுக் குழுக்கள் கமுக்கமாக இயங்கிவந்தன. இந்தக் குழுக்களெல்லாம் பெரும்பாலும் இந்துவிய அரட்டல் குழுக்களாகவே அமைந்தமையால், இசுலாமியர் அவற்றில் சேரவில்லை.
அனுசீலன் சமிதியின் உறுப்பினர்களில் பெரும்பாலோர் 'மேல்சாதி'யராக -- வங்கத்துப் பிராமணர்களாகவும் பத்ரலோகுகளாகவும் -- இருந்தனர். அவர்கள் பகவற்கீதையை உச்சிமேல் வைத்துப் போற்றினர். அத்துடன், அவர்கள் சத்தி (சக்தி) வழிபாட்டினராயிருந்தனர். காளியை ‘ஆதி சத்தி’யாக அவர்கள் வணங்கினர். இதனால், சுதேசி இயக்கத்தை “வணிகர்களின் இயக்கம்” என்று கூறி அவர்கள் நகையாடினர்.
அனுசீலன் சமிதி என்னும் இந்து அரட்டல் கரவுக் கழகத்தின் எண்ணவோட்டங்களை ஆற்றுப்படுத்தியவர் 'நிவேதிதா' எனும் பெயர் பூண்ட 'மார்கரெட் எலிசபெத் நோபில்' (1867-1911) எனும் அயர்லாந்து நாட்டவராவார். இவர் விவேகானந்தரின் மாணவியுமாவார்.
1911ஆம் ஆண்டில் அனுசீலன் சமிதியும் யுகாந்தர் குழுவும் கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு முதலான செயல்களில் ஈடுபட்டுவந்ததால், டேராடூனில் இந்தியக் காட்டுவளக் கழகத்தின் அதிகாரியாயிருந்த சர் ராசு பிகாரி போசுதான் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்த ‘புரட்சிக்காரர்களிலேயே மிகவும் ஆபத்தானவர்்’ என்று ஆங்கிலேயரின் அரசு கருதியது.
1905க்கும் 1910க்கும் இடையில் இந்திய மாணவர்கள் தங்குவதற்கான ஒரு விடுதியாக வடஇலண்டனில் 'சியாம்ச்சி கிருட்டின வர்மா' (Shyamji Krishna Varma 1857- 1930) என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட 'இந்தியா இல்லம்' (India House), இந்து-இந்தி(ய)ப் புரட்சியாளர்களின் புகலிடமானது. வினாயக் தாமோதர் சாவர்க்கர், 'மேடம் பிக்காய்ச்சிக் காமா' (Madam Bhikaiji Cama 1861-1936) வீரேந்திரநாத் சட்டோபாத்தியா (Virendranath Chattopadhya 1880-1937), 'லாலா அர்தயால்' (Lala Hardayal 1884-1939), வரகனேரி வெங்கடேச சுப்பிரமணியம் ஐயர் (1881-1925), மண்டயம் பார்த்தசாரதி திருமால் ஆச்சாரியா (1887-1951), பாண்டுரங் மகாதேவ் பப்பட் (Pandurang Mahadev Bapat 1880- 1967) முதலானோர் இந்தியா இல்லத்திலிருந்து பணியாற்றினர்.
இந்திய அரட்டலர்களோடு கொண்டிருந்த மிக நெருக்கமான உறவால் சாவர்க்கர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்து விரட்டுவதற்குக் கரந்தடி (கெரில்லா) போர் முறையில் ஈடுபட வேண்டுமெனச் சாவர்க்கர் கருதினார். வெடிகுண்டு செய்வதைப் பற்றியும் கரந்தடிப் போர்முறையைப் பற்றியும் எழுதிச் சாவர்க்கர் அவற்றைக் கமுக்கமாக அச்சிட்டு வெளியிட்டார்.
சாவர்க்கரின் நெருங்கிய கூட்டாளியான 'மதன்லால் திங்கிரா' (Madan Lal Dhingra 1883-1909), 'சர் வில்லியம் அட் கர்சன் வைல்லி' (Sir William Hutt Curzon Wyllie) எனும் ஆங்கிலேயரை 1909ஆம் ஆண்டில் கொலை செய்தார். திங்கிராவை மிகப் பெரிய ஈகியாகவும் புரட்சியாளருமாகச் சாவர்க்கர் உருவகப்படுத்தினார்.
ஐரோப்பியர் பெற்றெடுத்த ‘ஆரியம்’ என்னும் அரசியல் அரிதாரத்தைப் பூசிக்கொண்ட நாடுதான் செருமனி நாடு. 'நாசிசம்' எனும் இனவெறிக் கொள்கை, அதனால் பிராமணியம் ஈன்ற இந்து தேசியத்துடன் மணவுறவு பூண்டது. எங்கு பார்த்தாலும் அரட்டல் வன்முறையில் ஈடுபட்டுவந்த இந்துக் கரவுக் குழுக்கள் ஒரு தனிப்படையே கட்டும் அளவுக்கு அடுத்த நகர்வுக்குச் சென்றன.
ஆரிய சமாசத்தின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பஞ்சாபியரான அர் தயாள், சியாம் கிருட்டின வர்மா, சாவர்க்கர், பிக்காய்ச்சிக் காமா முதலானோரின் தொடர்பிலிருந்தார். இந்தியாவிலேயே “மிகப் பெரிய வன்முறைப் புரட்சிக்காரன்” என்றறியப்பட்ட ராசு பிகாரி போசுடனும் அவர் நெருங்கிய தொடர்பிலிருந்தார்.
பின்பு அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த அர் தயாள் சிங், கலிஃபோர்னியாவிலிருந்த பஞ்சாபியரைத் திரட்டிக் ‘கத்தர்’ கட்சியின் பெருந்தலைகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.
1912ஆம் ஆண்டில் செருமானியின் பட்டத்து இளவரசர் கொல்கொத்தாவுக்கு வந்தபோது, நரேந்திர பட்டாச்சாரியாவும் பாகா சடினும் அவரைக் கண்டு பேசினர்; தங்களுக்கு வேண்டிய போர்க்கருவிகளையும் வெடிப்பொருள்களையும் பெறுவதற்குப் பேச்சுவார்த்தை நடத்தினர். 1914ஆம் ஆண்டில் ராசு பிகாரி போசுவும் மகாராட்டிரரான விஃழ்ணு கணேசு பிங்லேயும் (1888-1915) சீக்கியத் தீவிரர் சிலருடன் சேர்ந்து 1915ஆம் ஆண்டில் ஒரு படைக்கலகத்தைச் செய்விப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில்,அனுசீலன் சமிதியும் யுகாந்தர் குழுவும் வங்கத்தில் அரட்டல் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டன. வெள்ளையர் அரசும் கடிகாவல் படையும் ஏறத்தாழ நிலைகுலைந்தன. அப்படியிருந்தும், இந்து அரட்டலரின்1915ஆம் ஆண்டுப் படைக்கலகத் திட்டம் பொய்த்துப் போனது. இந்து அரட்டலர் பலர் கொல்லப்பட்டனர்; பலர் தளைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில்தான், 1915 'இந்தியப் பாதுகாப்புச் சட்டம்' வந்தது. கொல்கொத்தாவிலிருந்து இயங்கிவந்த அனுசீலன் சமிதி ஆங்கிலேயர் அரசால் நசுக்கப்பட்டது. இதையடுத்து 'ரௌலட் சட்டங்கள்' வந்தன. இதனால், இந்து அரட்டல் வன்முறையாளர் பலர் பர்மா முதலான நாடுகளுக்குத் தப்பிச்சென்றனர். ரௌலட் சட்டங்களை எதிர்த்து 1919க்கும் 1922க்கும் இடையில் காந்தி அறப்போராட்டங்களை நடத்தினார்.
அனுசீலன் சமிதி எனும் இந்து அரட்டல் வன்முறை அமைப்பு 1920களில் வன்முறை வழியிலிருந்து விலகிப் பேராயக் கட்சியின் அறவழிப் போராட்டங்களில் பங்குபெற்றது. ஆயினும், அந்த அமைப்பைச் சேர்ந்த 'சச்சிந்திரநாத் சன்யால்' (1893-1942) மட்டும் அறவழியில் செல்லாது 1929ஆம் ஆண்டில் 'இந்திய இத்துத்தான் குடியரசுக் கழகம்' எனும் அமைப்பைத் தொடங்கினார். சுபாசு சந்திர போசு போன்றோர் அந்த இயக்கத்துடன் தொடர்புகொண்டிருந்ததாக ஆங்கிலேயர் அரசு கருதியது.
இந் நிலையில், பேராயக் கட்சியின் தலைவராருந்த தேசபந்து சித்தரஞ்சன் தாசிடம் வன்முறை வழியைக் கைவிடுவதாகப் உறுதியளித்த அனுசீலன் சமிதியும் யுகாந்தர் குழுவும், 1920ஆம் ஆண்டிலும் 1922ஆம் ஆண்டிலும் மீண்டும் அதே அரட்டல் வன்முறைக்குத் திரும்பின. 'சூரியா சென்' (1894 -1934) என்பவரின் தலைமையில் இயங்கிய யுகாந்தர் குழு, அசாம்-வங்கத் தொடர் வண்டித் துறையின் சிட்டகாங் அலுவலகத்தைத் தாக்கிக் கொள்ளையிட்டது.
வங்கத்திலும் பஞ்சாபிலும் தோன்றிய அரட்டல் வன்முறையே இந்துத்துவத்தின் செயல்வடிவம்; அதுவே இந்துத்துவத்தின் பிறவிக்குணம் என்பதைத்தான் மேற்போந்த வரலாற்றுப் பாடங்கள் காட்டுகின்றன.
இந்துத்துவ அரட்டல்-7
‘இடதுசொறி’ இந்துத்துவம்
1920களில் வங்கத்தில் தோன்றிய 'இந்து அரட்டல் வன்முறை' அரசியலிலிருந்து முளைத்த கள்ளிகளே இந்தி(ய) ஒப்புரவு(சோசியலிச)க் கட்சிகளும்
இந்தி(ய)ப் பொதுவுடைமைக் கட்சிகளும் ஆகும். இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் பல்வேறு தேசிய இனங்களை ‘இந்தியா’ எனும் பலபட்டறை அரசு அடக்கி ஒடுக்கி அழிக்க உதவும் ‘ஓர் இந்தியா’ எனும் இந்துத்துவக் கொள்கைக்கு இடங்கை கட்சிகளெல்லாம் கொடி பிடிப்பது அதை மெய்ப்பிக்கிறது.
1923ஆம் ஆண்டில் 'இந்துத்தான் குடியரசுக் கழகம்' (Hindustan Republican Association) வாரணாசியில் தோற்றுவிக்கப்பட்டது. இந்தக் கழகம் கொலை கொள்ளைகளை நிகழ்த்திப் பணம் திரட்டியது. இவ் வமைப்பு 1928ஆம் ஆண்டில் 'இந்துத்தான் ஒப்புரவுக் குடியரசுக் கழகம்' (Hindustan Socialist Republican Association) எனப் பெயரை மாற்றிக்கொண்டது. பகத்சிங் இந்த அமைப்பில் உறுப்பினராயிருந்தார்.
1927ஆம் ஆண்டில் பிரிட்டனிலிருந்து பிரிந்து இந்தியா தனிநாடாக வேண்டுமென இந்தியத் தேசியப் பேராயம் (காங்கிரசு) முழங்கத் தொடங்கியது.
1930களில் சிட்டகாங் படைக்கிடங்கின்மேல் இந்து அரட்டலர் தொடுத்த தாக்குதலுக்குப்பின், இந்து அரட்டல் வன்முறை மேலோங்கியது. ஆயினும், 1934ஆம் ஆண்டளவில் வன்முறைத் தாக்குதல்கள் மெல்ல ஓய்ந்தன.
1930களில் புத்துயிர் பெற்ற அனுசீலன் சமிதி, 'காக்கோரி சதி திட்டம்', 'சிட்டகாங் படைகலக் கொட்டில் தாக்குதல்' முதலான அரட்டல் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டது. முதலாம் உலகப்போரின் போது அனுசீலன் சமிதி மேற்கொண்ட அரட்டல் வன்முறை தாக்குதல்களும், பஞ்சாபில் எழுந்த 'கத்தர்' (Ghadar)) படைக்கலகமும் 1915ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புச் சட்டம் வருவதற்கான காரணங்களாயின. ஆங்கிலேய அரசு கட்டவிழ்த்துவிட்ட ஒடுக்குமுறையால் அனுசீலன் சமிதியின் ஒரு பகுதியினர், காந்தியின் தலைமையிலமைந்த பேராயக் கட்சியிலும் அப் பேராயக் கட்சிக்குள்ளிருந்த சுபாசு சந்திர போசின் அணியிலும் சேரலாயினர். வேறு சிலர், பொதுவுடைமை இயக்கத்தில் சேர்ந்தனர்.
மற்றொரு கரவுக் கழகமும் அரட்டல் வன்முறை அமைப்புமான யுகாந்தர் குழு, 1938ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டது. அதன் உறுப்பினர்கள் மேற்கு வங்கத்தில் புரட்சிகர ஒப்புரவுக் கட்சியாகவும் (Revolutionarys Socialist Party) கிழக்கு வங்காளத்தில் 'தொழிலாளர் உழவர் ஒப்புரவுக் கட்சி'யாகவும் திரண்டனர்.
முந்தைய அனுசீலன் இயக்கத்தவர் பலர் 1930களில் இடதுசாரி அரசியலால் ஈர்க்கப்பட்டனர். அவர்களில் சிலர் பேராயக் கட்சிக்குள்ளேயே 'பேராய ஒப்புரவுக் கட்சி' (Congress Socialist Party)) எனும் பிரிவாகத் தனித்து இயங்கலாயினர். அவர்களில் சிலர் மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டுப் 'புரட்சிகர ஒப்புரவுக் கட்சி' (RSP) என்னும் கட்சியைத் தோற்றுவித்தனர்.
அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனுசீலன் சமிதியைச் சேர்ந்த 39 பேர்களால் 'பொதுவுடைமை ஒக்கல்' (Communist Consolidation) என்னும் அமைப்பு 1935ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இதுவே பின்னர் இந்தியப் பொதுவுடைமை கட்சியானது. அனுசீலன் சமிதி என்னும் இந்து அரட்டல் இயக்கத்திலிருந்து வந்து மார்க்சிய-இலெனினியத்தை ஏற்றுக்கொண்டவர்களில் பலர் பொதுவுடைமை உலகமைப்பு (Communist International) எனும் அமைப்பை ஐயத்தோடுதான் பார்த்தனர். பொதுவுடைமைக் கட்சியையும் உருசியாவை ஆண்ட இயோசிஃப் தாலினையும் (Joseph Stalin) குறைகூறிடினும், தாலின் எதிர்த்து நின்ற லியோன் டிராட்சுக்கியின் பக்கம் அவர்கள் சாயவே இல்லை.
ஆர். எசு. எசு இயக்கத்தைத் தோற்றுவித்த கேசவ பலிராம் எக்டேவர், கொல்கொத்தாவில் மருத்துவம் படிக்கையில் வங்கத்தில் இயங்கி வந்த அனுசீலன் சமிதியின் உறுப்பினராயிருந்தார்.
சுபாசு சந்திர போசும்கூட அனுசீலன் சமிதியில் உறுப்பினராயிருந்ததாகச் சொல்லப்படுகிறது. வங்கத்தில் மேலோங்கியிருந்த இந்து அரட்டல் வன்முறையாளர்களின் செயல்பாடுகளைக் காந்தி கடுமையாக எதிர்த்துவந்தார். 1931ஆம் ஆண்டு நடந்த வட்டமேசை மாநாட்டில் பங்கெடுத்த காந்தி, அரட்டல் வன்முறைக்கு எதிராகப் பேசினார். தம்மொடு இணைந்து செயல்பட மறுத்தால், பிரிட்டிசு அரசு அரட்டல் வன்முறையாளரோடுதான் பேச வேண்டி வருமென மிரட்டிய காந்தி, பேராயக் கட்சியுடன் சேர்ந்து பணியாற்றுவது ஒன்றே அரட்டல் வன்முறையை ஒழிக்க உதவுமென வெளிப்படையாகவே சொன்னார்.
ஆங்கிலேய அரசின் முன்னால் நிற்கையில் காந்திக்கு வாய்த்த தனி வலிமை எது தெரியுமா? அரட்டல் வன்முறையாளர்களை அவர் விட்டுக்கொடுக்காமல் எதிர்த்து நின்ற போக்கே அதுவாகும். இந்து அரட்டல் வன்முறைக்கும் இந்து மிதவியத்திற்கும் இடையிலான பங்காளிச் சண்டையின் வெளிப்பாடு அது.
பேராயக் கட்சியில் இருக்கும்போதே அனுசீலன் சமிதியின் கொள்கைகளைப் பரப்புவதில் அரவிந்தர் பெரும் முனைப்பு காட்டினார். (பிற்காலத்தில் யாதவ்பூர் பல்கலைக்கழகமாக வளர்ந்த) வங்க தேசியக் கல்லூரியின் முதல்வராக அரவிந்தர் பணியாற்றி வந்தபோது, அந்தக் கல்லூரியில் பயின்றவர்தாம் நரேந்திரநாத் பட்டாச்சாரியா என்னும் இயற்பெயர் கொண்ட எம். என். ராய் (1887 -1954) ஆவார். யுகாந்தர் குழு எனும் இந்து அரட்டல் குழுவிலிருந்த இவர்தாம் பொதுவுடைமை உலகமைப்பின் ( (Communist International)) உறுப்பினரானார்; பின்பு இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தோற்றுநர்களில் ஒருவரானார்.
இந்து அரட்டலியக் குழுவாயிருந்த அனுசீலன் சமிதியின் உறுப்பினராயிருந்த வேறு சிலர் ‘புரட்சிகர ஒப்புரவுக் கட்சி’ (RSP) எனும் கட்சியைத் தோற்றுவித்ததைப்பற்றி ஏற்கெனவே கண்டோம்.
'இல்லுமினாட்டிகள்'
இவர்களில் சிலர் உலகாளும் 'ஃபீரீ மேசன்' (Free Mason) எனும் தீயக் கரவுக்கழகத்தின் (Secret Society) உறுப்பினர்களாயிருந்தனர்.
பிரம சமாசத்தின் உறுப்பினராகவும் இரவீந்திரநாம் தாகூரின் உறவினராகவும் இருந்த ககனேந்திர தாகூர் (1867-1938) 'ஃபிரீ மேசன்' கழகத்தின் உறுப்பினராயிருந்தார்.
நரேந்திரநாத் தத்தா என்னும் இயற்பெயரில் 1884ஆம் ஆண்டில் விவேகானந்தர் (1863 -1902) 'ஃபிரீ மேசன்' அமைப்பின் உறுப்பினராகத் தீக்கைப் பெற்றார்.
1912ஆம் ஆண்டில் இந்தியப் பகராளுநராயிருந்த ஆர்டிஞ்சு கோமகனைக் (Viceroy Lord Hardinge) கொல்ல முயன்ற சர் ராசு பீகாரி போசும்கூட (Rash Bihari Bose 1886-1945) 'ஃபிரீ மேசன்' உறுப்பினராயிருந்தார்.
சுபாசு சந்திரபோசு தமது ஆசானாகக் கொண்டிருந்த தேசபந்து சித்தரஞ்சன் தாசும் (1869-1925) 'ஃபிரீ மேசன்' இயக்கதின் உறுப்பினராயிருந்தார்.
1885ஆம் ஆண்டில் இந்தியத் தேசியப் பேராயத்தின் (காங்கிரசின்) முதலாவது மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய 'உமேசு சந்திர பானர்ச்சி' (Womesh Chunder Bonnerjee 1844-1906) 'ஃபிரீ மேசன்' உறுப்பினராயிருந்தார்.
பேராயக் கட்சித் தலைவரும், 1919-22 ஒத்துழையாமை இயக்கத்தில் பெரும் பங்கு வகித்தவரும், சுயராச்சியக் கட்சியைத் தோற்றுவித்தவருமான 'தேசபந்து சித்தரஞ்சன் தாசு'வும் (1869 –1925) கூடப் ஃபிரீ மேசன் உறுப்பினராவார்.
பிரம சமாசத்தின் உறுப்பினராயிருந்த கேசப் சந்திர சென்னும் (1838-84), 1899ஆம் ஆண்டில் பேராயக் கட்சிக்குத் தலைவராகவும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகவுமிருந்த இரமேசு சந்திர தத்தும் (1848-1909) கூட 'ஃபிரீ மேசன்' உறுப்பினர்களாயிருந்தனர்.
1942ஆம் ஆண்டில் இந்தியத் தேசியப் படையையும் (Indian National Army),1913ஆம் ஆண்டில் 'கத்தர்' (Ghadar) புரட்சி இயக்கத்தையும் கட்டியமைத்தவர்களில் ஒருவரான சர் ராசு பிகாரி கோசும் (1845– 1921) 'ஃபிரீ மேசன்' உறுப்பினராவார்.
ஆர். எசு. எசு. எனும் அரட்டல் வன்முறை இயக்கம் நடத்திவரும் இன்றைய மறைமுகக் காவியாட்சி, உலகளாவிய கொற்றுப்புரை(கார்ப்பொரேட்)களுடன் நகமும் சதையும்போலமைந்து இந்தியத் துணைக் கண்டத்தின் இயற்கை வளங்கள் அத்தனையையும் விற்றுக் காசாக்கி அதில் ஒரு பங்கை இந்தி(ய)க் கொற்றுப்புரைகளுக்குக் கொடுத்துவருவது கண்கூடான உண்மை. உலகச் சந்தையையும் பொருளியலையும் தம் கைக்குள் வைத்திருக்கும் யூத இல்லுமினாட்டிகளுக்கும் இந்துத்துவப் பரிவாரங்களுக்கும் இடையில் பிரிக்கவொண்ணாக் கொப்பூழ் உறவு உள்ளதை நாட்டு நடப்புகள் தெளிவுறக் காட்டுகின்றன.
தரங்கெட்ட சூழ்ச்சிகளேயன்றி தலையில் சரக்கேதும் இல்லாத ஆர். எசு. எசு.வுக்கும் பார‘தீய’ சனதா கட்சிக்கும் சொந்தமான பொருளியல் கொள்கை ஏதேனும் உண்டா? இல்லையே! பேராயக் கட்சி கொணர்ந்த தரகு முதலாளியப் பொருளியல் கொள்கைகளின் ஈயடிச்சான் படியாகத்தான் அவற்றின் இன்றைய பொருளியல் கொள்கைகள் உள்ளன. ‘பேராயக் கட்சி + மாடு’ என்று எங்கள் கொள்கையெனக் காவிக்கட்சியின் நடுவண் பொருளமைச்சரே திருவாய்மலர்ந்தார்!
மேற்போந்தவைதான் இந்துத்துவத்தின் கதைச் சுருக்கம்!-ஐயா குணா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக