பக்கங்கள்

திருக்குறள்

செவ்வாய், ஜனவரி 23, 2018

இந்துத்துவ அரட்டல்-3,4

இந்துத்துவ அரட்டல்-3
பிரம சமாசம்
பிரம சமாசம் 'பண்டிட் நபீன் சந்திர ராய்' என்பவரால் 1861ஆம் ஆண்டில் லாகூரில் முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்டது. 'பிரமவியம்' (Brahmoism) இந்துவியத்திலிருந்து வேறுபட்டதென 'ஏமேந்திரநாத் தாகூர்' (1844-84) என்னும் வங்காளி சொன்னார். அவருடைய கருத்தை அடியொற்றி வங்க மலர்ச்சிக் காலத்தில் கொல்கொத்தாவில் தோன்றிய ஒரு சீர்திருத்த இயக்கமே 'பிரம சமாசம்'. பிராமணியம் சீர்த்திருத்தப்பட வேண்டுமெனக் கருதிய 'ராசா ராம் மோகன் ராயும்' (1772-1833) 'தேபேந்திரநாத் தாகூரும்' (1817-1905) இணைந்து1828ஆம் ஆண்டில் பிரம சமாசத்தைத் தோற்றுவித்தனர்.
இவைதாம் அந்தப் பிரம சமாசத்தின் கொள்கைகள்:
1. எந்த வேதத்தையும் திருமறையென நம்பாமை;
2. விண்டுவின் புதிய தோற்றங்(அவதாரங்)களைப் பற்றிய கதைகளை நம்பாமை;
3. பல்தெய்வ வழிபாட்டையும் உருவ வழிபாட்டையும் மறுத்தல்;
4. சாதிப் பாகுபாடுகளை எதிர்த்தல்;
5. கருமக் கோட்பாட்டையும் மறுபிறப்புக் கோட்பாட்டையும் நம்பாமை.
பிரமன் மட்டுமே தனிப்பெரும் மெய்ம்மை என்று சொல்லிய பிரம சமாசத்தினர், பிரமனை மட்டுமே வழிபட்டனர். ((https://en.wikipedia.org/wiki/Brahmo_Samaj))
1860ஆம் ஆண்டில் 'பிரம சமாசத்தின் நெறிமுறைகள்' (Brahmo Anusthan) எனும் நூலை வெளியிட்ட ஏமேந்திரநாத் தாகூர், ‘பிரமியம்’ வேறு, ‘இந்துவியம்’ வேறு என்று அந்த நூலில் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
(காரல் மார்க்சு உள்ளிட்ட) ஐரோப்பியர்கள் இந்தியத் துணைகண்டத்திலுள்ள தேசிய இனங்களையெல்லாம் புறக்கணித்துவிட்டு அதில் வாழும் மக்களை ஒட்டுக்காக ‘இந்து’ எனும் பெயரால் அழைத்தனர்; இல்லாத ‘இந்து’ எனும் மதத்தைத் தோற்றுவித்தனர். அப்படியிருந்தும், இந்துவியத்தைப்பற்றிக் கவலைபடாது, பிராமணியத்தை மட்டுமே சீர்திருத்த முயன்ற வங்க மறுமலர்ச்சி இயக்கமே பிரம சமாசம்.
பிரம சமாசம் காலப்போக்கில் இரண்டுபட்டது. ‘நெறிவழிப்பட்ட பிரமோக்கள்’ (Anusthanic Brahmos) என்போரில் பெரும்பாலோர் சாதியத்தை ஏற்க மறுத்த 'குலின்' (Kulin) பிராமணர்களாயிருந்தனர். பிரமனை வழிபடுவதன்றி வேறு எந்த சமயத்தையும் அவர்கள் ஏற்கவில்லை.
ஆனால், பிராமணரல்லாக் காயசுத்தர், பைதியர் முதலானவர்கள் ‘நெறிவழிப்படா பிரமோக்கள்’ (Ananusthanic Brahmos) எனப்பட்டனர். கரும கோட்பாட்டிலும் நால்வரண நெறியிலும் மறுபிறப்புக் கோட்பாட்டிலும் அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
1833ஆம் ஆண்டில் ராம் மோகன் ராய் இறந்த பிறகு, வங்கப் பிராமணர்களிடமிருந்து பிரம சமாசத்தைத் தெலுங்குப் பிராமணர்கள் கைப்பற்றினர். இவர்கள், பிரம சமாசத்தில் உருவ வழிபாட்டைப் புகுத்தினர்.
இளவரசர் துவாரகநாத் தாகூரின் மகனான 'தேபேந்திரநாத் தாகூர்', 1839ஆம் ஆண்டில் 'தத்துவரஞ்சினி சபை' என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார். வங்க மறுமலர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த 'அக்சைய் குமார் தத்தா'வும் (1820 -86) 'ஈசுவர சந்திர வித்யாசாகரும்' (1820 -91) அவ்வமைப்பில் முதன்முதலில் உறுப்பினரானவர்களாவர்.
1843ஆம் ஆண்டில் தேபேந்திரநாத் தாகூர் இருபது பேருடன் இணைந்து ராம் மோகன் ராயின் கொள்கைகளை ஏற்றுப் பிரம சமாசத்தில் சேர்ந்தார்.
'மறைதிரு சார்லசு தாள்' (Rev. Charles Dall 1816-86) எனும் அமெரிக்கக் கிறித்துவ பாதிரியார், பிரம சமாசத்திற்குள் புகுந்து கிறித்துவத்தைப் பரப்ப முனைந்தபோது, தேபேந்திரநாத் தாகூர் 1857ஆம் ஆண்டில் அவரைப் பிரம சமாசத்திலிருந்து வெளியேற்றினார். சார்லசு தாள் அதனால் தம் கையாளான 'கேசப் சந்திர சென்' (1838-84) எனும் பிராமணரல்லாதவரைப் பிரம சமாசத்திற்குள் ஊடுருவச் செய்தார்.
கேசப் சந்திர சென்னின் கொள்கையில் கிறித்துவத்தின் தாக்கங்கள் இருந்தன. அத்துடன் அவர் ஆங்கிலேயர் ஆட்சிக்குச் சார்பாயிருந்தார். இதனால், பிரம சமாசத்திற்குள் குழப்பமும் பூசலும் மூண்டன; 'தத்துவபோதினி சபை'யின் முன்னாள் உறுப்பினர்கள் பிரம சமாசத்திலிருந்து விலகினர்.
வங்கத்தில் தோன்றிய பிரம சமாசம், ஐரோப்பியப் பண்பாட்டுக் கூறுகளைத் தம்வயமாக்கிக்கொண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்கு முட்டுக்கொடுத்தது. மேற்கத்தியச் சார்பினதாகவும் ஆங்கிலேயர்க்கு உகந்ததாகவுமே இருந்தது.
ஏமச்சந்திரநாத் தாகூர் தொடர்வண்டித்துறையில் அதிகாரியாயிருந்த பண்டிட் நபீன் சந்திர ராயுடன் சேர்ந்து 1861ஆம் ஆண்டில் பிரமவியத்தைப் பரப்பலானார். அதுமுதல், ராம் மோகன் ராயின் மூலக்கோட்பாடு 'ஆதிதருமம்' எனப்பட்டது.
தாங்கள்தாம் உண்மையான பிரம சமாசத்தவர் என்று அறிவிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் ஏமேந்திரநாத் தாகூர் வழக்கு தொடுத்தார். அவ் வழக்கில் அவர் தோற்றதால், பிரம சமாசத்தின் பெயரை ‘இந்திய பிரம சமாசம்’ என்று கேசப் சந்திர சென் பெயர் மாற்றினார்.
இந் நிலையில்தான், ‘நெறிவழிப்பட்ட பிரமோக்கள்’ என்றும் ‘நெறிவழிப்படாத பிரமோக்கள்’ என்றும் பிரம சமாசத்தவர் இருவழியாயினர்.
'ஆதி தருமத்தவர்' என்றழைக்கப்பட்ட ‘நெறிவழிப்பட்ட பிரமோக்கள்’ இந்துக்கள் அல்லர் என்றும், ‘நெறிவழிப்படாப் பிரமோக்கள்’ மட்டுமே இந்துக்கள் என்றும் 1897ஆம் ஆண்டில் பஞ்சாபின் முதன்மை வழக்குமன்றம் கொடுத்த தீர்ப்பைப் 'பிரித்தானியாவின் அரசுமன்றம்' (Privy Council) 1901ஆம் ஆண்டில் உறுதிப்படுத்தியது.
காட்டியத் திருச்சவைக் கல்லூரியில் (Scottish Church College) படித்துவந்தபோது சாமி விவேகானந்தர் (1863-1902) பிரம சமாசத்தின் உறுப்பினராயிருந்தார். 1881ஆம் ஆண்டில் அவர் சாமி இராமக்கிருட்டினருடன் தொடர்புகொண்டு அவரது மாணாக்கரானார்.
1866ஆம் ஆண்டில் தம் மகளுக்குக் கேசப் சந்திர சென் குழந்தை மணம் செய்வித்ததார். இதனால், பிரம சமாசம் பிளவுற்றது.
இதனையடுத்து, 14 அகவை ஆன பிறகே பெண்களுக்கு மணம் முடிக்க வேண்டுமெனும் 1872ஆம் ஆண்டு 'தனித் திருமணச் சட்டம்' (Special Marriages Act) இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்கீழ் “நான் ஓர் இந்துவும் அல்லன், முசுலிமும் அல்லன், கிறித்துவனும் அல்லன்” என்னும் உறுதிமொழியைத் தந்த பின்னரே திருமணங்கள் செய்விக்கப்பட்டன.
1954 'இந்து திருமணச் சட்ட'மும் 1955 'இந்து திருமணச் சட்ட'மும் வரும்வரையில் 1872 திருமணச் சட்டமே வழக்காற்றில் இருந்தது.
ஆரிய சமாசம்
வேதங்கள் பொய்ப்பதில்லை எனும் கூற்றின் அடிப்படையில் 1875ஆம் ஆண்டில் 'தயானந்த சரசுவதி' (1824-83) என்னும் குசராத்தியர் 'ஆரிய சமாசம்' என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார்.
வேதியரான தயானந்தர் 1869க்கும் 1873க்கும் இடையில் வேதிய சமயத்தில் சீர்திருத்தங்களைச் செய்ய முயன்றார். வங்கத்தில் தோன்றிய பிரம சமாசத்துடன் தொடர்பிலிருந்த தயானந்தர், அவ்வமைப்பினரிடமிருந்து மாறுபடவும் செய்தார்.
ஆரிய சமாசத்தின் கொள்கைகள் பின்வருவன:
1. 'ஆஉஇம்' (AUM) எனும் திருப்பெயர்கொண்ட எல்லாம் வல்ல ஆண்டவன் மட்டுமே ஒரேயோர் தெய்வமாவான்;
2. வேதங்கள் பொய்க்கா;
3. இராமாயணம், மகாபாரதம் முதலான நூல்களும் பிற இந்து சமயநூல்களும் வேதிய அறிவை வலுப்படுத்த உதவுகிற நூல்களேயன்றி வேறில்லை;
4. விவிலியம், குரான் முதலான சமயநூல்களைப் புறந்தள்ளல்;
5. உருவ வழிபாட்டை எதிர்த்தல்;
6. மாந்தர் எல்லாரும் சமமானவரே;
7. வேதங்கள் காட்டுவதைப்போல் பெண்களுக்கும் உரிய உரிமையைத் தருதல். (https://en.wikipedia.org/wiki/Arya_Samaj)
இந்துத்துவ அரட்டல்-4
இந்து மகாசபை
ஆரிய சமாசத்தவராயிருந்த 'லாலா லசபதி ராய்' (1865 -1928), லால் சந்து, சாதிலால் (Shadi Lal) ஆகியோரால் 1907ஆம் ஆண்டில் பஞ்சாபில் தோற்றுவிக்கப்பட்ட இந்து மகாசபையின் முதல் கூட்டம் அதே ஆண்டில் லாகூரில் நடந்தது. மதன்மோகன் மாளவியா (1861-1946) அந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.
1913ஆம் ஆண்டில் அனைந்திந்திய இந்து மகாசபையைத் தோற்றுவிக்க வேண்டுமெனப் பஞ்சாப் இந்து மகாசபை தீர்மானம் இயற்றியது. அதையடுத்து, 1915ஆம் ஆண்டில் அரிதுவாரம், லக்னோ, தில்லி ஆகிய இடங்களில் அதன் மாநாடுகள் நடத்தப்பட்டன.
இந்துக்களை ஒன்றிணைக்கவும் குமுகச் சீர்திருத்தங்களைக் கொணரவும் விரும்பிய இந்து மகாசபை, ஆங்கிலேயருக்கு நம்பிக்கையுரியவராகக் காட்டிக்கொள்ள எண்ணியது. மேற்கு வங்க மாநிலத்திலிருக்கும் காசிம்நகர் மகாராசவான 'மணிந்திர சந்திர நந்தி' (1860-1929) தலைமை தாங்கிய இந்து மகாசபையின் 'அரிதுவார் மாநாடு', ஆங்கிலேயர் ஆட்சிக்கு நம்பிக்கையுரியவராயிருப்பதெனும் தீர்மானத்தை இயற்றியது.
ஆங்கிலேயரின் நம்பிக்கைக்குரியதாயிருக்க வேண்டுமெனும் இந்து மகாசபையின் நிலைப்பாட்டைச் சாமி சிரதானந்தர் (1856-1926) கடுமையாக எதிர்த்தார். இதனால், அதே மகாராசா மணிந்திர சந்திர நந்தியின் தலைமையில் 1921ஆம் ஆண்டில் கூடிய மாநாட்டில் “ஆங்கிலேயர்க்கு நம்பிக்கையுள்ளதாயிருக்க வேண்டும்” என்னும் இந்து மகாசபையின் பழைய நிலைப்பாடு திருத்தப்பட்டு, ‘தன்னாட்சியுடன் கூடிய ஒன்றிய இந்து தேசத்தைக் உருவாக்க வேண்டும்’ என்று முடிவு செய்யப்பட்டது. முசுலிம்களை மீண்டும் இந்துக்களாக்குவது அதன் குறிக்கோள்களில் ஒன்றாயிருந்தது.
‘இந்துத்துவம்’ எனும் சொல்லையும் கொள்கையையும் உருவாக்கியவர் 'வினாயக் தாமோதர் சாவர்க்கர்' (1883-1966) ஆவார்.
1920களில் அச் சாவர்க்கர் இரத்தினகிரி சிறையில் இருந்தபோது எழுதிய 'இந்துத்துவத்தின் உள்ளீடு' என்னும் நூல், பின்னர் 'இந்துத்துவம்: யார் இந்து?' என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்துப் பெற்றோர்களுக்குப் பிறந்து, ‘இந்தியா’ தன் தாய்நாடு என்று ஏற்றுக்கொண்டவர்தாம் ‘இந்து’ எனப்படுவார் என்று அந் நூலில் வரையறுக்கப்பட்டது. இந்து தேசம், வரணமுறை, சமற்கிருதம் ஆகியவையே இந்துத்துவத்தின் மூன்று உள்ளீடுகள் என்று அந் நூலில் சாவர்க்கர் விளக்கினார்.
இந்துத்துவம்தான் இந்து தேசத்தின் அடிப்படையெனச் சார்க்கர் வரையறுத்தார். புத்தம், அருகம் (சைனம்), சீக்கியம் ஆகிய மதங்கள் இந்துத்துவத்திற்குள் அடங்குவன வென்பதும், இசுலாம், கிறித்துவம், யூதம், சோராசுத்தனியம் ஆகியன இந்து மதத்திற்குள் அடங்கா வென்பதும் சாவர்க்கரின் கூற்றாயிருந்தது.
1920களின் பிற்பகுதியில் வினாயக் தாமோதர் சாவர்க்கர் இந்து மகாசபையின் தலைவரானபின், முசுலிம்களின் துணைக்காக ஏங்கி நின்ற பேராயக் கட்சியின் போக்கை இந்து மகாசபை மிகக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கியது.
ஆங்கிலேயர் ஆட்சியின் நம்பிக்கைக்குரியதாயிருக்க வேண்டும் எனும் முந்தைய கொள்கையை இந்து மகாசபை மாற்றிக்கொண்டாலும், ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிரான இந்திய விடுதலை இயக்கத்தை அவ்வியக்கம் ஆதரிக்கவில்லை. 1930ஆம் ஆண்டில் மோகனதாசு கரம் சந்து காந்தி (1869 -1948) தொடங்கிய அறவழி ஒத்துழையாமை இயக்கத்தில் இந்து மகாசபை கலந்துகொள்ளவில்லை.
தனிப் பாக்கித்தான் நாட்டை உருவாக்க வேண்டுமெனச் சிந்து மாநிலச் சட்டமன்றம் 1943ஆம் ஆண்டில் தீர்மானம் இயற்றியது. அந்த மாநில ஆட்சியில் பங்கு பெற்றிருந்த இந்து மகாசபை அமைச்சர்கள் அந்த அரசின் பிரிவினைக் கோரிக்கையை மட்டுமே எதிர்த்தனரே யன்றி, அத் தீர்மானத்தை எதிர்த்துத் தத்தம் பதவியைத் துறக்கவில்லை.
அதேபோல், 1943ஆம் ஆண்டில் முசுலிம் லீக் கட்சியைச் சேர்ந்த சர்தார் 'ஔரங்கசீப் கானின்' (1899-1965) தலைமையில் வடமேற்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் இந்து மகாசபையும் பங்குபெற்றது. இந்து மகாசபையைச் சேர்ந்த 'மெஃகர் சந்து கண்ணா' (1897-1970) என்பவர் அந்த அமைச்சரவையில் பொருளமைச்சராயிருந்தார்.
காந்தியின் தலைமையில் பேராயக் கட்சி நடத்திய ‘வெள்ளையனே வெளியேறு!’ இயக்கத்தின்போது இந்து மகாசபையின் தலைவரான சாவர்க்கர், “பதவியை விடாது பற்றி நில்லுங்கள்!” (Stick to your post!) எனச் சொல்லித் தம் அமைப்பினர்க்கு மடல் விடுத்தார். “வெள்ளையனே வெளியேறு!’ இயக்கத்தில் சேராமல் ஒதுங்கி நின்று, நகராட்சிகள், உள்ளாட்சிகள், சட்டமன்றங்கள், பிரிட்டிசு படை முதலானவற்றில் பணிபுரிகிற இந்து மகாசபையினர் 'தத்தம் பதவிகளை விடாமல் அவற்றை உறுதியாகப் பற்றி நில்லுங்கள்!' என்று அம் மடலின் வழியாக அறைகூவல் விடுத்தார்.
அன்று பசுலுல் அக் (A.K. Fazlul Haq 1873-1962)) தலைமையிலிருந்த கூட்டணி அரசு ‘வெள்ளையனே வெளியேறு!’ இயக்கத்தை எவ்வாறெல்லாம் முறியடிக்க வேண்டும் என்று கூறி, வங்காளத்தில் இந்து மகாசபையின் தலைவராயிருந்த சியாம பிரசாத் முக்கர்ச்சி (1901 - 53) பிரிட்டிசு ஆளுநருக்கு பின்வருமாறு எழுதினார்:
“...... பிரிட்டிசாருக்கு என்றில்லாமல்-பிரிட்டிசார் பயன் பெறுவர் என்று எண்ணாமல்-(வங்காள) மாகாணத்தின் தன்னுரிமையையும் பாதுகாப்பையும் நிலைநிறுத்த வேண்டுமெனின், இந்தியர்கள் பிரிட்டிசாரை நம்பித்தான் ஆக வேண்டும்.”
“அந்த [வெள்ளையனே வெளியேறு!] இயக்கம் பரந்துபட்ட மக்களின் உணர்ச்சிகளை உசுப்பிவிட்டுப் போர்க்காலத்தில் உள்நாட்டுக் குழப்பத்தைத் தோற்றுவிக்கவும், உள்நாட்டுப் பாதுகாப்பை அச்சுறுத்தவும் செய்கிறது”
என்றும்,
“அது போன்ற போராட்டத்தை எந்த அரசும் வன்முறையில் ஒடுக்கத்தான் செய்யும்”
என்றும் கூறுவதாகவே சியாம பிரசாத் முக்கர்ச்சியின் கூற்று இருந்ததென வரலாற்றாசிரியர் ஆர். சி. மசும்தார் கூறினார்.
1947க்கு முன்பும் பின்பும் இந்து மகாசபை ஒரு பெரிய அமைப்பாயிருக்கவில்லை.
இந்தியா-பாக்கித்தான் பிரிவினைக்கு 1947ஆம் ஆண்டில் ஒப்புக்கொண்டதற்காகக் காந்தியைச் சுட்டுக்கொன்ற நாத்துராம் கோட்சே, அவரது கூட்டுச்சதியாளர்களான திகம்பர் கட்கே, கோபால் கோட்சே, நாராயண் ஆப்தே, விஃழ்ணு கார்காரே, மதன்லால் பஃவா ஆகிய எல்லாருமே இந்து மகாசபையில் முனைப்புடன் செயற்பட்டு வந்தவர்கள்தாம்.
சீக்கியர்களும் அருகர்களும் (சைனரும்) புத்தர்களும்கூட இந்துக்களே என்பது இந்துத்துவாவின் நிலைப்பாடு. சமற்கிருதத்தை உயிர்ப்பிக்க வேண்டும் என்பதும், இந்திக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதுமே அதன் நோக்கங்கள்.
காந்தியைப் போன்றே தீண்டாமை எதிர்த்த இந்து மகாசபை, நால்வரண (சனாதன) முறை இருக்கத்தான் வேண்டும் என்றது.
கீழ்ச் சாதியருக்குச் சலுகைகளையும் இடவொதுக்கீட்டையும் வழங்க கூடாது என்பதும் மனுநூலைக் கடைப்பிடித்தேயாக வேண்டும் என்பதும் இந்து மகாசபையின் கொள்கைகளாகும்.
பொதுவாகப் பிராமணர்களே அதன் உறுப்பினர்களாயிருந்தனர்.-ஐயா குணா 
https://www.facebook.com/gunaseelan.samuel.7/posts/1495292857254820
https://www.facebook.com/gunaseelan.samuel.7/posts/1495327303918042

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக