பக்கங்கள்

திருக்குறள்

செவ்வாய், ஜனவரி 23, 2018

இந்துத்துவ அரட்டல்-5

இந்துத்துவ அரட்டல்-5
ஆர். எசு. எசு.
சாவர்க்கர் முன்வைத்த இந்துத்துவக் கொள்கையால் ஈர்க்கப் பட்ட மராத்திய தேசாந்த பிராமணரும் மருத்துவருமான 'கேசவ் பலி ராம் எக்டேவர்' (1889-1940) சாவர்க்கரைச் சந்தித்தப் பின்னர் 1925ஆம் ஆண்டில் 'தேசியத் தன்தொண்டு சங்கம்' (Rashtriya Swayamsevak Sangh/RSS)) எனும் ‘அரசியல் சாரா’ இந்துவெறி இயக்கத்தை உருவாக்கினார். இந்து தேசத்தையும் இந்துக் குமுகத்தையும் கட்டியெழுப்புவதே அதன் கொள்கையாகும்.
கேசவ் பலிராம் எக்டேவர் ஆர். எசு. எசு. இயக்கத்தைத் தோற்று வித்தப்பின், இந்து மகாசபை வலுவிழந்தது
ஆர். எசு. எசு.வும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெறவில்லை. 1930ஆம் ஆண்டில் காந்தியின் தலைமையில் நடந்த 'காடு காப்பு' அறப்போராட்டத்தில் டாக்டர் எக்டேவர் கலந்துகொண்டது மட்டும் ஒரு விதிவிலக்கு.
இந்து மகாசபை ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்க்கத் துணியாமல், அதற்குச் சார்பான நிலைப்பாட்டை எடுத்துப் பேராயக் கட்சியின் தலைமையிலான இந்தி(ய)த் தனியுரிமைப் போராட்டதை எதிர்த்து வந்ததைப் போன்றே அதன் வழிவந்த ஆர். எசு. எசு. இயக்கமும் இந்தி(ய)த் தனியுரிமைப் போராட்டத்தை முழு மூச்சுடன் எதிர்த்தது; ஆங்கிலேயரின் வந்தேறி ஆட்சிக்கு அது தொடர்ந்து முட்டுக்கொடுத்தது.
1940ஆம் ஆண்டில் எம். எசு. கோல்வால்கர் ஆர். எசு. எசு. அமைப்பின் தலைவரானபின், அந்த அமைப்பு பிரிட்டிசாருக்கு எதிராக எந்தவொரு செயலிலும் ஈடுபடவில்லை. பிரிட்டிசுப் பேரரசி இந்தியாவுக்கு வருகை தந்தபோது, ஆர். எசு. எசு. அவருக்கு மிகச் சிறப்பான படையணிவகுப்பு நடத்திப் பெருமைப்படுத்தியது.
தனிப் பாக்கித்தான் வேண்டுமென்று முசுலிம் லீக் தீர்மானத்தை இயற்றியப் பிறகும், ‘இந்து தேசம்’ வேண்டுமென ஆர். எசு. எசு. கேட்டதே யன்றி, இந்திய விடுதலை இயக்கத்தில் அது பங்கெடுக்கவேயில்லை. பிரிட்டிசுப் பேரரசப் படைகளும் அதன் காவல்படைகளும் தவிர பிற யாரும் படை கட்டிச் சீருடை உடுத்திப் படையணிவகுப்புகளையும் படைப்பயிற்சிகளையும் செய்வதைப் பிரிட்டிசு அரசு தடைசெய்தபோது, ஆர். எசு. எசு. தன் படைத்துறையைக் கலைத்துவிட்டது.
ஆர். எசு. எசு., இந்திய விடுதலைப்போரில் பங்கெடுக்காதபோதும், அதன் உறுப்பினர்களில் ஓரிருவர் அதில் பங்கெடுக்கவே செய்தனர்.
தாய்க்கும் சேய்க்கும் ஒரு பிணக்கு இருந்தது. 1939ஆம் ஆண்டில் இந்து மகாசபை நடத்திய தேர்தலில் பொதுசெயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட கோல்வால்கர், அத் தேர்தலில் தோற்றார். அதுமுதல் இந்து மகாசபை நடத்திய எல்லாக் கூட்டங்களையும் கோல்வால்கர் புறக்கணித்தார்.
ஆர். எசு. எசு. இயக்கத்தைத் தோற்றுவித்த எக்டேவர், பிரிட்டிசு ஆட்சியை எதிர்த்து எந்தவொரு போராட்டத்திலும் பங்கெடுக்காது, இந்தியத் தனியுரிமைப் போராட்டத்திலிருந்து வேண்டுமென்றே விலகி நின்றார்.
26.01.1930ஆம் நாளை இந்தியத் தனியுரிமை நாளாக அறிவித்தபோது அந் நிகழ்ச்சியை மட்டுமே கொண்டாடிய ஆர். எசு. எசு., அதன் பின் அது போன்ற கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவேயில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான இந்தி(ய)த் தேசியத்தைக் கோல்வால்கர் “பிற்போக்கான பார்வை” என்று வெளிப்படையாகவே சொன்னார். ஆர். எசு. எசு. இயக்கத்தின்மேல் ஆங்கிலேயர் தடை விதிக்கக் கூடாது என்பதில் கோல்வால்கர் கண்ணும் கருத்துமாயிருந்தார்.
ஒத்துழையாமை இயக்கத்தை எந்தவொரு வடிவிலும் ஆர். எசு. எசு. ஆதரிக்கவில்லையெனப் பிரிட்டிசு அரசு நற்சான்று வழங்கியது. ஆர். எசு. எசு. இயக்கம் ஆங்கிலேயர் ஆட்சியின் சட்டம் ஒழுங்குக்கு எந்தவொரு கேடும் விளைவிக்கவில்லையென ஆங்கிலேய அரசின் உள்துறை அமைச்சகம் கருதியது.
1942 ‘வெள்ளையனே வெளியேறு!’ இயக்கத்திலும் ஆர். எசு. எசு. பங்கெடுக்கவில்லை. ஆங்கிலேய அரசுக்கு ஒவ்வாத யாதொரு நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாமெனத் திசம்பர் 1940இல் ஆர். எசு. எசு.க்குப் பிரிட்டிசு அரசு கட்டளையிட்டபோது,
“அரசின் எந்தவோர் ஆணையையும் கெடுக்க நினைக்கும் எண்ணம் ஆர். எசு. எசு.வுக்கு இல்லை”
என்று ஆர். எசு. எசு. தலைமை உறுதியளித்தது. அதேபோன்று, திசம்பர் 1946ஆம் ஆண்டு கப்பற்படைக் கலகத்தை ஆர். எசு. எசு. ஆதரிக்கவும் இல்லை; அதில் சேரவும் இல்லை.
இந்தி(ய) அரசமைப்பு மன்றம் 22.07.1047 அன்று மூவண்ணக் கொடிதான் இந்தியாவின் தேசியக் கொடியாயிருக்குமென்று முடிவெடுத்தபோது, ஆர். எசு. எசு. அதை மிகக் கடுமையாக எதிர்த்தது. “காவிக்கொடிக்குப் பின்னாலிருக்கும் புதிர்” எனும் தலைப்பில் அதை மிகக் கடுமையாகத் தாக்கி எழுதியது; காவிக்கொடியே இந்தியாவின் கொடியாயிருக்க வேண்டுமென்றும் வழக்குரைத்தது.
“விதியின் வினைவலியால் ஆட்சிக்கு வந்தவர்கள், மூவண்ணக்கொடியை நம் கையில் கொடுத்ததால், இந்துக்கள் அதை மதிக்கவும் ஏற்கவும் செய்யார்.
"மூன்று என்பதே ஒரு தீமை; மூன்று வண்ணங்கள் கொண்ட கொடி நாட்டின்மீது மிகவும் கெட்ட உளத்தியல் தாக்கமாகவும் தீங்கு பயப்பதாகவும் இருக்கும் என்பது உறுதி”
என்று பக்வா துவாச் (Bhagwa Dhwaj)) எனும் ஆர். எசு. எசு. ஏடு எழுதியது.
"எண்ணங்களின் கொத்து" (Bunch of Thought) எனும் நூலில் மூவண்ணக் கொடியைத் தேசியக்கொடியாக வைத்ததை எதிர்த்து கோல்வால்கர் புலம்பித் தள்ளினார்.
மனுநூலைப்பற்றி இந்திய அரசுச்சட்டத்தில் குறிப்பிடப்படவேயில்லையெனக் கூறிய ஆர். எசு. எசு., இந்திய அரசுச்சட்டத்தை ஏற்க மறுத்தது.
“பண்டைய பாரதத்தில் தோன்றிய நனி சிறந்த அரசமைப்பின் வளர்ச்சியைப்பற்றி இந்திய அரசுச்சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை..... மனுநூலில் கூறப்பட்டிருக்கும் மனுவின் சட்டங்கள் உலகின் பாராட்டுதலைப் பெற்றுள்ளன; அதற்குக் கீழ்ப்படிவதும் அதன்மீது கொண்ட உறுதிப்பாடும் இந்நாள்வரை தானாக அமைந்துள்ளன. ஆனால், நம்முடைய அரசுச்சட்ட வல்லுநர்களுக்கு அவையெல்லாம் ஒரு பொருட்டல்ல”
என்று சொல்லி ஆர். எசு. எசு. அமைப்பின் 'ஆர்கனைசர்' (Organiser) அதன் 30.11.1949ஆம் நாளைய ஆசிரிய உரையில் புலம்பித் தீர்த்தது.
எல்லாச் சாதிகளும் சமமானவை எனும் இந்திய அரசுச்சட்டத்தின் நிலைப்பாட்டை ஆர். எசு. எசு. ஏற்றுக்கொள்ள மறுத்தது. அதையே,
“இந்துக்களுக்கு அறுதிநிலைச் சட்ட அதிகாரமாயிருந்தது மனுநூலேயன்றி, இந்திய அரசுச்சட்டம் அன்று”
என்று “மனுநூலே நம் நெஞ்சை ஆள்கிறது” (Manu Rules our Hearts) எனும் தலைப்பில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நடுவரான சங்கரசுப்பு ஐயர் 06.02.1950 அன்று ஆர். எசு. எசு. இயக்கத்தின் ‘ஆர்கனைசர்’ ஏட்டில் எழுதினார்.
ஆர். எசு. எசு.வின் அரசியல் முகப்பான பார’தீய’ சனதா கட்சியின் ஆட்சி தில்லியில் கொலுவேறியபின், பன்னாட்டினக் கொற்றுப்புரை (கார்ப்பொரேட்)களுக்கு ‘இந்தி’யாவையே ஏலம்கூறி விற்க துணிந்துவிட்டது. அதற்காக இந்தி(ய)த் தலைமையமைச்சர் நரேந்திர மோடி போகாத நாடில்லை; பேரம் பேசாத இடமில்லை.
1947ஆம் ஆண்டில் ‘இந்தியா’ என்னும் பலபட்டறை அரசு உருவானபோது, காவிக்கொடியைத் தவிர்த்து மூவண்ணக் கொடி ‘தேசியக்’ கொடியாக இருக்கலாகாதென வம்படியாக வழக்காடிய ஆர். எசு. எசு., இன்று அதே மூவண்ணக் கொடியைத் தாங்கள் போற்றிக் கும்பிடும் மாட்டுக்கு இணையாக வைத்துப் புனிதநீர் தெளித்து, அதனைக் கும்பிடாதோரை அடித்துத் துவைக்கிறது!
மனுநூலைத் தழுவிதான் இந்தி(ய) அரசுச்சட்டம் இயற்ற வேண்டுமென்று ஒருகால் அடம்பிடித்த ஆர். எசு. எசு., இந்துத்துவத்திற்குத் துணைபோன பீ. ஆர். அம்பேட்கர் தலைமையில் எழுதப்பட்ட 1950 இந்தி(ய) அரசுச்சட்டதிற்குக் குழிபறித்து, மெல்ல ஒழித்து, இந்துத்துவ அரசுச்சட்டத்தைக் கொணர மெல்லக் காய் நகர்த்தி வருகிறது; இந்தி(ய) அரசமைப்பையே புரட்டிப்போட தன்னாலான சூழ்ச்சிகளில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது. ஆரியக் கூத்தாடிப்படி செருமனியில் முற்றாளுமை புரிந்த ஃபூரர் இட்லரின் கொடுங்கோன்மையை ஒத்த தூய ஆரியப் பிராமணராட்சிக்கு அஃது அடிகோலி வருகிறது.
சனாதனமே இந்தியத் தேசியம்
சாமி விவேகானந்தர், பக்கிம் சந்திர சட்டோபாத்தியாயா ஆகியோரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட முன்னாள் இந்திய ஆட்சிப்பணி (ICS) அதிகாரியும் பின்னாள் இந்து அரட்டல் தீவிரருமான 'அரவிந்தர்' எனப்பட்ட 'அரவிந்த கோசு' (1872 -1950), இந்தியாவுக்கு முழு அரசியல் விடுதலை வேண்டுமெனும் முழக்கத்தை முதன்முதலில் எழுப்பியவர்களில் ஒருவராவார்.
ஆங்கிலேயர் பண்பாட்டில் ஊறி வளர்ந்த அரவிந்தர், பின்னர் ஓர் இந்துவெறியரானானர். இந்தியத் தேசிய இயக்கத்தின் குறிக்கோள் இவ்வாறுதான் இருக்க வேண்டுமென வரையறுத்து 30.05.1909 அன்று மேற்கு வங்கத்தின் உத்தரப்பாறாவில் அரவிந்த கோசு ஆற்றிய உரையில்,
“[இந்தியத்] தேசியம் என்பது ஒரு திருமுறைக் கோட்பாடாகவோ மதமாகவோ நம்பிக்கையாகவோ இனியும் இல்லையெனச் சொல்வேன். என்னைப் பொறுத்த வரையில், சனாதனம்தான் [இந்தியத்] தேசியம் என்பேன். சனாதன தருமத்துடன் பிறந்த இந்து தேசம், அதனோடு ஒன்றி வளர்கிறது. சனாதன தருமம் வீழ்ச்சியுறும்போது, [இந்தியத்] தேசியமும் வீழ்ச்சியுறுகிறது. சனாதனம் அழிய நேர்ந்தால், அச் சனாதனத்தோடுதான் அஃது அழியும். சனாதன தருமமே [இந்தியத்] தேசியம் ஆகும்”
என்று ஐயம் திரிபறக் கூறினார்.
அரவிந்தர் கூறும் ‘சனாதன தருமம்’ எனபது நால்வரண நெறியே யன்றி வேறில்லை என்பதை இருக்குவேதம் பின்வருமாறு கூறுகிறது:
வைஸ்வாநராய ப்ருதுபாஜசே விப்போ ரத்னா விதந்த தருணேஷு காத்தவே
அக்னிர்ஹி தேவான்ருத்தோ துவஸ்யத்யத்தா தர்மாணி சனதான தூதுஷத்*
* vaisvanaraya prthupajase vipo ratna vidhanta dharunesu ghatave |
aghnirhi devanamrto duvasyatyatha dharmani sanata na dudusat || (Rig Veda 3.3.1-2.)
“சாகா வரம் பெற்ற அக்கினி தேவர்களுக்குப் பயன்படுவதால், சனாதன தருமம் என்றுமே மீறப்படுவதில்லை” என்பதே அவ்வரிகளுக்கான உண்மையான பொருள்.
ஆனால், மேற்போந்த இருக்குவேத வரிகளில் வருகிற ‘சனாதன தருமம்’ என்பதற்கு ‘நிலைமாறாத’ அல்லது ‘நிற்றியமான’ என்று இக்கால இந்துத்துவர்கள் திரித்துப் புரட்டிப் பொருள் கூறிவருகின்றனர்.
‘குணத்துக்கும் செயலுக்கும் இசைய [பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் எனும்] நால்வரணங்கள் என்னால் உருவாக்கப்பட்டன. அந் நால்வரணங்களை வகுத்தவன் நானேயாயினும், அழிவற்றோனான நான் அவற்றை ஆக்கவில்லை என்றுணர்’ எனும் பொருள் பட,
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஸ
தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்த்யகர்த்தாரமவ்யயம்$
$ caturvarnyam maya srstam gunakarmavibhagasa?
tasya kartaram api mam viddhy akartaram avyayam (Bhagavad Gita 4.13.)
meaning “The fourfold caste was created by Me, by the differentiation of Guna and Karma. Though I am the author thereof, know Me to be the non-doer, and changeless.” (The Bhagavad Gita 4.13.) (Srimad-Bhagavad-Gita, 4.13; English translation and com-mentary by Swami Swarupananda, [1909], at sacred-texts.com)
என்று கண்ணனே கூறுவதாக கூறுவதாக பகவற்கீதையில் உள்ளது. நால்வரணங்களை வகுத்தவன் கண்ணனே என்பதே அதன் பொருளாகும். இந்தக் கூற்றை மகாபாரதம் இவ்வாறு உறுதிப்படுத்துகிறது:
யே ச வேதவிதோ விப்ரா யே சாத்யாத்மவிதோ ஜனா:
தே வதந்தி மஹாத்மானம் க்ருஷ்ணம் தர்மம் சனாதனம்@
@ ye ca vedavido vipra ye cadhyatmavido janah
te vadanti mahatmana? krsnam dharmam sanatanam (Mahabharata Book 3, Chapter 86, Verse 22)
எனும் மகாபாரத வரிகள் ‘கண்ணனின் தருமம் சனாதனம்’ என்றுதான் குறிப்பிடுகின்றன. ‘கண்ணன் வகுத்த நெறி நால்வரண பாகுபாடே’ என்பதே அதன் பொருள்.
ஆனால், ‘சனாதனம்’ என்பதற்குத் ‘தொன்மையானது, நிற்றியமானது, தொன்று தொட்டு வந்த வாழ்க்கைநெறி’ என்றெல்லாம் இந்துத்துவக் கொள்கையினர் திரித்துப் புரட்டிப் பொருள் கூறிவருகின்றனர்; முழுப் பூசுனைக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கின்றனர்.
முன்னே சொன்ன அரவிந்தரின் 'உத்தரப்பாறா உரை'யின்படி, இந்தி(ய) அல்லது ‘இந்து’ தேசியம் என்பது நால்வரண பாகுபாட்டையே குறிக்கும் என்பது தெளிவாகிறது. இந்து மதம் வேறு, சனாதனம் வேறு என்று எவ்வளவுதான் திரித்தும் புரட்டியும் பொருள் கூறினாலும், இந்து மதம் என்பது சனாதனமாகிய நால்வரண பாகுபாடே என்பது உறுதி.
“அலெக்சாண்டரின் படையெடுப்புக்குப்பின் வேறு சமய நம்பிக்கை கொண்ட அயலார்கள் இந்தியாவின்மேல் அலையலையாகப் படையெடுத்தனர். வரணநெறி என்னும் உள்ளார்ந்த வலிமை இருந்தமையால்தான் பன்னூறு ஆண்டுக்காலத்தினூடே படையெடுப்புகள் பல நிகழ்ந்தபோதும், சனாதன தருமத்தைக் கட்டிக் காப்பாற்ற முடிந்தது”#
என்றும்,
“அது போன்ற நிலைத்த பெருமையைப் பெறுவதற்கு வேண்டிய தனித்தன்மை சனாதன தருமத்திற்கு வாய்த்தமைக்கு வரணநெறியே காரணமாயிருக்கலாம்”*
என்று 'இந்துபீடியா' கூறுவதும் அதை உறுதிப்படுத்துகிறது. இந்து தேசியமே இந்தியத் தேசியம் என்னும் கூற்றை அது மெய்ப்பிக்கிறது.
பார‘தீய’ சனதா கட்சி எனும் நொண்டியைத் தோள்மேல் சுமந்து நிற்கும் ஆர். எசு. எசு. எனும் குருடன், இந்தி(ய)த் தேசியம் என்பது சனாதன தருமமே என்னும் கூற்றை நெஞ்சில் புதைத்து வைத்துக்கொண்டுதான் ஆரியப் பிராமணியத்தை அரியணையில் ஏற்றுகின்ற உத்திகளில் ஈடுபட்டுள்ளது.-ஐயா குணா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக