பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், ஆகஸ்ட் 20, 2012

கலைஞர் பேட்டி





கேள்வி :- உங்கள் இளமைக் காலம் வறுமையானதா?

கலைஞர் :- "எனது இளமைக்காலம் வறுமை சூழ்ந்தது இல்லை. எனது பெற்றோர் வைதீகத்தில் தோய்ந்தவர்கள் என்பதால் எனக்குக் ‘காதணி விழா’வைச் சிறப்பாக நடத்துவதற்கும், ‘வித்யாரம்பம்’ என்ற பெயரில் ஆடம்பரமாக என்னைப் பள்ளிக் கூடத்திற்கு அனுப்புவதற்கும், பள்ளிக் கல்வி மட்டுமின்றி, எனக்கென இசைக் கல்விக்குத் தனியே ஏற்பாடு செய்வதற்கும், தனியாக எனக்கு ஆசிரியர் அமைத்துப் பாடம் போதிப்பதற்கும், தேவையான வசதி வாய்ப்புகளை பெற்றிருந்த குடும்பத்திலே நான் பிறந்தேன்."

"பள்ளிப் பருவத்திலேயே, பனகல் அரசர் குறித்த கட்டுரையைப் பாடம் செய்து சொல்வேன்!"

கேள்வி :- "உங்கள் தந்தை என்ன தொழில் செய்து வந்தார்?"

கலைஞர் :- "என் தந்தையார் சிறந்த நாதசுர வித்வானாகவும் திகழ்ந்தார். நல்ல விவசாயியாகவும் இருந்தார்."

கேள்வி :- "நீங்கள் எப்போதிலிருந்து புத்தகங்களை அதிகம் படிக்க ஆரம்பித்தீர்கள்?"

கலைஞர் :- "நான் ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது ‘பனகல் அரசர்’ என்ற தலைப்புள்ள புத்தகம் துணைப் பாடக் கட்டுரையாக வைக்கப் பட்டிருந்தது. ஏறத்தாழ 50 பக்கங்கள் கொண்ட அந்தச் சிறு நூல் முழுவதையும் வகுப்பிலேயே நான் ஒருவன் தான் அப்படியே மனப்பாடம் செய்து சொல்வேன்."

எனது அரசியல் பாதைக்கு வெள்ளோட்டம்!

கேள்வி :- "நீங்கள் சின்ன வயதிலேயே அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம்?"

கலைஞர் :- "பெரியார் பேச்சில் காணப்பட்ட அழுத்தம் திருத்தமான வாதமும், அழகிரி பேச்சில் காணப்பட்ட வீரம் கொப்பளிக்கும் வரிகளும், அண்ணா பேச்சில் நிறைந்திருந்த அழகு தமிழும் என்னை வெகுவாகக் கவர்ந்தன.

1938ல் நாள்தோறும் மாலை நேரத்தில் மாணவர்கள் பலரை அணிவகுத்திடச் செய்து, திருவாரூர் தெருக்களில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போர்ப் பரணி பாடி ஊர்வலம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இதுவே எனது அரசியல் பாதைக்கு வெள்ளோட்டமாக அமைந்தது."

எதையும் சரியாகத்தான் செய்வேன் எனும் திடநெஞ்சம் கொண்டோர், எனது குடும்பத்தினர்!

கேள்வி :- "உங்கள் தந்தை மறைவின்போது நீங்கள் ஒரு மாநாட்டில் உரையாற்றச் சென்றிருந்தீர்கள். உங்கள் முதல் மனைவி பத்மாவதி அம்மாள் மறைவின்போதும் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தீர்கள். தயாளு அம்மாளை மணந்த தினத்தன்று போராட்டங்களில் கலந்து கொண்டீர்கள். குடும்பத்தினரின் பார்வையில் உங்களின் இந்தப் போக்கு எப்படி எடுத்துக் கொள்ளப்பட்டது?"

கலைஞர் :- "நான் எதைச் செய்தாலும் சரியாகத்தான் செய்வேன் என்ற திட நெஞ்சம் இருந்த காரணத்தினால், என்னுடைய முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளைக் கண்டு அவர்கள் யாரும் அலட்டிக் கொள்ளவில்லை."

கேள்வி :- "நீங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் உங்கள் மூத்த மகன் மு.க. முத்துவை உங்களுடைய கலையுலக வாரிசாக வளர்த்தெடுக்க முடியவில்லை என்கிற வருத்தம் இருக்கிறதா?"

கலைஞர் :- "முத்து பல்வேறு திறமைகள் ஒருங்கே வாய்த்திடப் பெற்றவன். அத்திறமைகள் பட்டை தீட்டப்பட்டு மிளிர்வதற்கேற்ற வகையில், அவனுக்கென கிடைத்த பாதையிலே பயணம் செய்யாமல், திசைமாறிய பறவையாகிவிட்டானே என்ற வருத்தம் எனக்கு உண்டு."

அரசியல் - எனக்குப் பிராணவாயு! இலக்கியம் - தெம்பூட்டும் சரிவிகித உணவு!

கேள்வி :- "ஒரு நல்ல இலக்கியவாதியால், பெரிய அரசியல்வாதியாக இருக்க முடியாது என்பது பொதுவான கருத்து. உங்களால் எப்படி இருக்க முடிந்தது?"

கலைஞர் :- "இது பொதுவான கருத்து எனினும், அதற்கும் விதிவிலக்கான எடுத்துக்காட்டுகள் உண்டு. பண்டித நேரு அவர்கள் அடிப்படையில் இலக்கிய உள்ளமும், படைப்பாளிக்கான பண்பட்ட திறனும் கொண்டிருந்தவர். சிறையில் இருந்து கொண்டே தனது அருமை மகள் இந்திராவுக்கு அவர் எழுதிய கடிதங்கள் அனைத்தும் இலக்கியச் செறிவு கொண்டவை. மூதறிஞர் ராஜாஜி அவர்களின் எழுத்திலும், பேச்சிலும் இலக்கியத்தின் குணாதிசயங்கள் இயங்கிக் கொண்டிருப் பதைக் காணலாம். பேரறிஞர் அண்ணா அவர்கள் பெருமளவுக்கு இலக்கியங்களில் இதயம் பறிகொடுத்தவர். அவரே படைப்பிலக்கியப் பேராசான். அதனால்தான் அவரது எழுத்திலும், பேச்சிலும் புதுத் தேனின் சுவையும், அன்றலர்ந்த மலரின் மணமும் விரவிப் பரவி தனித்தன்மை பெற்று ஒளிர்கின்றன.

அப்படிப்பட்டவர்களோடு என்னை ஒப்பிட்டுக் கொள்வதற்காகச் சொல்லவில்லை. அரசியல் எனக்குப் பிராணவாயு எனில், இலக்கியம் எனக்குத் தெம்பூட்டும் சரிவிகித உணவு."

கேள்வி :- "உங்களது புத்தக வாசிப்புப் பழக்கம் எந்த வகை இலக்கியத்திலிருந்து தொடங்கியது?"

கலைஞர் :- "புராண - இதிகாசக் கதைகளில் இருந்தும், அவற்றிற்கு எதிரான ‘சுயமரியாதை’ நூல்களில் இருந்தும் தொடங்கியது."

தமிழ்மொழியின் நீள அகலத்தை முன்னிலைப்படுத்தும் பக்தி இலக்கியங்கள்!

கேள்வி :- "தொல்காப்பியம், சங்க இலக்கியம் குறித்தெல்லாம் நீங்கள் சிலாகித்துப் பேசுகிறீர்கள். ஆனால், பக்தி இலக்கியம் குறித்து சொல்வதே இல்லை. கடவுள் நம்பிக்கையை முன்னிறுத்துகிறது என்பதாலேயே அந்த இலக்கிய வகையைப் புறக்கணித்துவிட முடியுமா?"

கலைஞர் :- "தொல்காப்பியம், சங்க இலக்கியம் - பெரும்பாலும் சாதி, சமயம், பக்தி இவற்றிற்கு அப்பாற்பட்ட மிக உயர்வான இலக்கண, இலக்கியங்களாகும். அவற்றிற்குப் பிறகு வந்தவையே பக்தி இலக்கியங்கள். அவற்றை நான் புறக்கணித்ததும் இல்லை ; புறந்தள்ளியதும் இல்லை. அவ்வகை இலக்கியங்களில் நான் படித்துத் தோய்ந்திருக்கிறேன். அவை கடவுள் நம்பிக்கையை முன்னிறுத்துகின்றனவோ இல்லையோ, தமிழ்மொழியின் நீள அகலத்தை நிச்சயமாக முன்னிலைப்படுத்துகின்றன."

தலைசிறந்த பத்து புத்தகங்கள்!

கேள்வி :- "தலைசிறந்த 10 புத்தகங்களை வகைப்படுத்துங்களேன்?"

கலைஞர் :- "1. திருக்குறள், 2.தொல்காப்பியம், 3.புறநானூறு, 4.சிலப்பதிகாரம், 5.பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள், 6.அண்ணா எழுதிய ‘பணத்தோட்டம்’, 7.மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’, 8.பண்டித நேரு அவர்கள் எழுதிய ‘உலக வரலாறு’, 9.அண்ணல் காந்தி அடிகளின் ‘சத்திய சோதனை’, 10.ராகுல சாங்கிருத்தியாயாவின் ‘வோல்கா முதல் கங்கை வரை’."

நான் நாத்திகன்! ஏனெனில் மனிதனை நேசிக்கிறேன்!

கேள்வி :- "ஏதோ ஒரு சக்தியால் இந்த உலகத்தில் எல்லாம் நிகழ்கிறது என்று குறளோவியத்தில் எழுதி இருக்கிறீர்கள். அந்த சக்தி கடவுளில்லை என்பதை இப்போதும் அழுத்தமாகச் சொல்வீர்களா? அந்த சக்தியை கடவுள் என்று பெருவாரியானவர்கள் நம்பி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பதை ஒற்றை வரியில் நிராகரித்துவிட முடியுமா?"

கலைஞர் :- "இல்லையென்பார்கள் சிலர்; உண்டென்று சிலர் சொல்வர்; எனக்கில்லை கடவுள் கவலை" என்ற பாவேந்தரின் பாடல் வரிகளையே பதிலாகத் தருகிறேன். "நான் நாத்திகன் ; ஏனெனில், மனிதனை நேசிக்கிறேன்" என்று நெஞ்சுயர்த்திச் சொல்லிக் கொள்ளும் எனக்கு, யாரையும் நிராகரித்திட வேண்டும் என்ற நினைப்பில்லை!"

மனிதநேயமும் மாநிலப் பாசமுமே மதத் தலைவர்களோடு அமர்ந்து பேசக் காரணம்!

கேள்வி :- "முன்பெல்லாம் கடவுள் மறுப்பு என்பதை தீவிரமாக முன்னிறுத்தினீர்கள். இப்போது மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காக மதத் தலைவர்களுடன் அமர்ந்து பேசும் மனநிலைக்கு வந்திருக்கிறீர்கள். இந்த மாற்றம் பகுத்தறிவின் நெகிழ்ச்சியால் ஏற்பட்டதா? வயதின் முதிர்ச்சியால் ஏற்பட்டதா?"

கலைஞர் :- "தமிழ்மொழி வளர்ச்சிக்காக குன்றக்குடி அடிகளாரோடும், பேரூர் சாந்தலிங்க அடிகளாரோடும், திருவாவடுதுறை ஆதீனத்தோடும் ஆர்வத்தோடு அமர்ந்து பேசுவேன்; தெலுங்கு - கங்கைத் திட்டத்தால் சிந்தாமல் சிதறாமல் சென்னைக்குத் தண்ணீர் வரவேண்டும் என்பதற்காக சாய்பாபா அவர்களோடும் அன்போடு அளவளாவுவேன். இவை அனைத்தும் பகுத்தறிவின் நெகிழ்ச்சியாலோ, வயதின் முதிர்ச்சியாலோ ஏற்பட்டவை அல்ல; என்னுள் நிறைந்திருக்கும் இன்பத் தமிழ்ப்பற்று, மனிதநேயம், மாநிலப் பாசம் இவற்றால்தான். "ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!" என்று அறிஞர் அண்ணா அவர்கள் அறிவுறுத்தியதை அனைவர்க்கும் நினைவுறுத்து கிறேன்."

முதிர்ந்த பண்பாடு முரண்பாடாகி விடாது!

கேள்வி :- "தீவிரப் பகுத்தறிவாளர் நீங்கள். ஆனால் ஏதோ ஒருவகையில் கடவுள், கடவுள் நம்பிக்கை குறித்த கேள்விகள் உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன. இந்த முரண்பாட்டை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?"

கலைஞர் :- "நான் பகுத்தறிவாளன் என்ற நிலையில் எள்ளளவும் மாற்றமில்லை. மஞ்சள் துண்டு அணிவது கடவுள் நம்பிக்கையினால் அல்ல என்பதையும்; அதற்கான காரணத்தையும் பலமுறை விளக்கி இருக்கிறேன். ஒரு பகுத்தறிவாளனை அறிவியல் ரீதியான உண்மைகள் மட்டும் ஆட்கொள்ள முடியுமே தவிர, மூடநம்பிக்கைகள் எதுவும் துரத்திக் கொண்டிருக்க முடியாது. என்னைச் சேர்ந்த ஒரு சிலரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் கவலைப்படுவது கிடையாது. அவர்கள் தேவையான தெளிவில்லாத நிலையில் குழப்பத்தில் இருப்பதாகவே கருதிக் கொள்வேன். முதிர்ந்த பண்பாடு முரண்பாடாகிவிடாது!"

கேள்வி :- "ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை?"

கலைஞர் :- "தோன்றாமல் இல்லை. கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தவேண்டி இருந்ததால் நேரம் கிடைக்கவில்லை."

‘எனது சிலை உடைக்கப்பட்ட போது, எனது மனநிலை!’

கேள்வி :- "உங்களுக்கு உயிரோடு இருக்கும்போதே சிலை அமைக்கப்பட்டது. அதை விஷமிகள் உடைத்தபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?"

கலைஞர் :- "உயிரோடு இருக்கும்போது சிலை அமைக்கப்பட்டது எனக்கு மட்டும்தான் என்று சொல்வது தவறு. பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் ஆகியோர் உயிரோடு இருந்தபோது சிலைகள் நிறுவப்பட்டன. எனது சிலையை உடைத்தபோது இருந்த மனநிலையை அப்போதே -

செயல்பட விட்டோர்

சிரித்து மகிழ்ந்து நின்றாலும்

அந்த சின்னத்தம்பி

என் முதுகிலே குத்தவில்லை!

நெஞ்சிலேதான் குத்துகிறான்;

அதனால் நிம்மதி எனக்கு!

வாழ்க! வாழ்க!!

என்று கவிதையாக்கி வெளியிட்டிருந்தேன்."

கட்சியின் முடிவிலிருந்து, மாறுபட்ட எண்ணம் எனக்குத் தோன்றியதில்லை

கேள்வி :- "எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து வெளியே விட்டிருக்கக்கூடாது என்று எப்போதாவது நீங்கள் நினைத்ததுண்டா?"

கலைஞர் :- "எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்பது கழகம், செயற்குழு - பொதுக் குழுக்களின் மூலம் ஒருமனதாக எடுத்த முடிவு. கட்சியின் அந்த முடிவிலிருந்து மாறுபட்ட எண்ணம் தனிப்பட்ட முறையில் எனக்குத் தோன்றியதில்லை."

கேள்வி :- "தற்போது மத்தியில் கூட்டணி ஆட்சி நிலவும் சூழலில், மாநிலக் கட்சிகளின் கைகள் ஓங்கி இருப்பதைக் கண்டு டெல்லிக்காரர்கள் எரிச்சல் அடைகிறார்களே? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

கலைஞர் :- "கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாகவே மத்தியில் கூட்டணி ஆட்சி என்பதும், மாநிலக் கட்சிகள் அதில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன என்பதும் "டெல்லிக்காரர்களுக்கு" மட்டுமல்ல; அனைவருக்கும் பழக்கப்பட்டுவிட்ட - அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்ட அரசியல். இதில் யாரும் எரிச்சல் அடைய இடமில்லை."

அரசியல் கலாச்சாரம் நிகழ எடுக்கப்பட்ட முன்முயற்சிகள்!

கேள்வி :- "காமராஜர், ராஜாஜி, எம்.ஜி.ஆர். இவர்களை எல்லாம் எதிர்த்து அரசியல் செய்த நீங்கள், தமிழகத்தில் நல்ல அரசியல் கலாச்சாரம் நிகழ்வதற்கு ஏதேனும் முன்முயற்சி எடுத்தீர்களா?"

கலைஞர் :- "தமிழகத்தில் மனிதநேயம், பரஸ்பரம் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் நல்ல அரசியல் கலாச்சாரம் தழைத்திட வேண்டும் என்பதிலே தணியாத ஆர்வம் உள்ளவன் நான். தலைநகரம் டெல்லியில் ஆளும் கட்சி - எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி முக்கிய தேசிய நிகழ்ச்சிகள் அனைத்திலும் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிப்பதும், ஒருவருக்கொருவர் அன்பையும், மரியாதையையும் பரிமாறிக் கொள்வதும் நாம் காணும் காட்சிகள். அதைப்போலத் தமிழகத்திலும் சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் உருவாகிட வேண்டும் என்று தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். எனினும், எனது முயற்சிகள் இதுவரை முழுப்பலனைத் தரவில்லை என்பதுதான் உண்மை. அரசியல் கலாச்சாரத்தில் அனைவருக்கும் சமமான ஈடுபாடு வேண்டுமல்லவா? அது ஒரு கை ஓசையாகிவிடக் கூடாது."

கேள்வி :- "விடுதலைப்புலிகள் விவகாரத்தில் ஏற்ற - இறக்கங்களோடு செயல்பட்டிருக் கிறீர்கள்! என்ன காரணம்?"

கலைஞர் :- "நான் பலமுறை விளக்கி உரைத்ததைப் போல; விடுதலைப் புலிகள் விவகாரத்தில் - ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்; படுகொலைக்குப்பின் - என்ற கண்ணோட்டம்தான் முக்கியமே தவிர, இதில் ஏற்றமும் இல்லை; இறக்கமும் இல்லை."

கேள்வி :- "தமிழக தேர்தலில் சாதியின் ஆதிக்கத்தை ஒழிக்கவே முடியாதா?"

கலைஞர் :- "தமிழகத் தேர்தலில் மட்டுமல்ல; இந்தியத் தேர்தலிலேயே - சாதியின் ஆதிக்கத்தை மட்டுமல்ல; மதத்தின் ஆதிக்கத்தையும் சேர்த்தே ஒழித்தாக வேண்டும். இதில் அனைத்து அரசியல் கட்சிகளும், சமுதாய இயக்கங்களும் அப்பழுக்கற்ற ஆர்வமும், செய்தே தீரவேண்டுமென்ற பிடிவாதமும் கொள்ள வேண்டும். அப்போதுதான் நிலைமை சீர்திருந்த வழி உண்டு."

கேள்வி :- "பொதுவாகவே அரசியல் ஊழல் மயப்பட்டு விட்டதாக மக்கள் உறுதியாக நம்புகிறார்களே?"

கலைஞர் :- "அரசியல் என்றாலே ஊழல் என்று மக்கள் நம்புவதாக நான் கருதவில்லை. ஒவ்வொரு அரசியல் கட்சியையும், ஒவ்வொரு அரசியல் கட்சியிலுள்ள ஒவ்வொருவரையும் ஊழல் என்னும் அளவுகோலால் அளந்து, மக்கள் தரம் பிரித்துப் பார்க்கிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன். அரசியலில் இருந்து ஊழலை அறவே ஒழிக்க வேண்டுமென்றால், வாக்காளர்கள் அனைவரும் உயர்ந்த கல்வியைப் பெற்றிருக்க வேண்டும். வாக்குகளை விற்பனைப் பொருளாக்காத மனோபாவம் வேண்டும். நல்லவர்கள், வல்லவர்கள் பெருமளவுக்கு அரசியலில் ஈடுபடவேண்டும்."
( நன்றி: ராணி வார இதழ் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக