பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், ஆகஸ்ட் 13, 2012

தமிழனின் எட்டப்பர் !!



 "எட்டப்பர் விருது " - கருணாநிதிக்கு !!!
**************************
**********************

எட்டப்பன் விருதை பெறத் தகுதியானவர் யார் என்று பரிசீலித்ததில், இறுதிச் சுற்றுக்கு, சுப.வீரபாண்டியன், மருத்துவர் ராமதாஸ், தொல்.திருமாவளவன், கனிமொழி, ஸ்டாலின், தயாநிதி மாறன், பேராசிரியர் அன்பழகன், கி.வீரமணி, போன்றோர் இறுதிச்சுற்றுக்கு வந்தனர். ஆனால், இறுதிச் சுற்றில் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றது, கலைஞர் என்ற அழைக்கப்படும், முத்துவேல் கருணாநிதி மட்டுமே.

ஆதலால் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதற்கான பட்டயம்.

முத்துவேல் கருணாநிதி என்று அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி 3 ஜுன் 1942 அன்று தஞ்சை மாவட்டம் திருக்குவளையில், முத்துவேல் மற்றும் அஞ்சுகம் தம்பதியினருக்குப் பிறந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய அண்ணாதுரை 1969ம் ஆண்டு காலமான பிறகு, அக்கழகத்தை கைப்பற்றியவர், இன்று வரை தலைவர் பதவியை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டுள்ளார்.

பத்மாவதி, தயாளு அம்மாள், ராசாத்தி அம்மாள் என்று இவருக்கு மூன்று மனைவிகள். இதில் பத்மாவதி அம்மாள் இறந்து விட்டார். இந்த மூன்று மனைவிகளுக்கும் சேர்த்து, இவருக்கு மு.க.முத்து, மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, மு.க.செல்வி, மு.க.கனிமொழி ஆகிய மகன்கள் மற்றும் மகள்கள் உண்டு.

திராவிடர் கழகத்தில் இணைந்த கருணாநிதி திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதுவதன் மூலம் பிரபலமடைந்தார். தந்தைப் பெரியரின் பகுத்தறிவுக் கொள்கைகளை முன்னெடுப்பதாக அறிவித்துக் கொண்டு, அதன் அடிப்படையில் பல நூல்களை படைத்துள்ளார். வெளியில் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பேசி விட்டு, ரகசியமாக சாமி கும்பிடும் வழக்கம் உள்ளவர் என்று அறியப்படுகிறார். பல நாடகங்களை எழுதியுள்ளார். மணிமகுடம், ஒரே ரத்தம், பழனியப்பன், தூக்கு மேடை, காகிதப்பூ, நானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, உதயசூரியன் சிலப்பதிகாரம் என்று பல்வேறு நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றில் பல திரைப்படங்களாக உருவாகியுள்ளன.

நீதிக்கட்சியின் அழகிரிசாமி என்பவரின் பேச்சால் ஈர்க்கப்பட்டு அரசியலில் தனது 14வது வயதில் அரசியலில் நுழைந்தார். அப்போது மாணவர் நேசன் என்ற கையெழுத்துப் பத்திரிக்கையை தொடங்கினார். பின்னாளில் முரசொலி என்ற நாளிதழை தொடங்கினார். அந்த நாளிதழை பின்னர், திமுகவுக்கு விற்று, அதன் மூலம் ஒரு கணிசமான தொகையைப் பார்த்தார்.

1957ம் ஆண்டு முதன் முதலாக குளித்தலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானார். 1967ல் திமுக ஆட்சியைப் பிடித்ததும், பொதுப்பணித்துறை அமைச்சரானார் கருணாநிதி.

பொதுப்பணித்துறை அமைச்சரானதிலிருந்து, இவர் கொள்ளையடிக்கத் தொடங்கியதாக, இவர் மீது உள்ள ஊழல் புகாருக்காக நியமிக்கப்பட்ட நீதியரசர் சர்க்காரியாவின் அறிக்கை கூறுகிறது.

21.08.1981 அன்று முதன் முதலாக இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக சட்டசபையில் தீர்மானம் இயற்றிப் பேசியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை வைத்து இவர் அரசியல் செய்வதற்கு தொடக்கப்புள்ளியாக அந்தத் தீர்மானம் அமைந்தது. ஈழத் தமிழர் பிரச்சினையை காரணமாக வைத்து, அப்போது தமிழகத்தில் இருந்த எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று முயன்றார். இவர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதும், எம்ஜிஆர் இவரை கைது செய்தார். இவர் கைது செய்தி பரவியதும், பலர் தீக்குளித்தனர். இத்தீக்குளிப்புச் சம்பவங்களினால், எம்ஜிஆர் அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்த, இவர் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இறந்தவர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுகிறேன் என்று அரசியல் செய்தார். ஈழத் தமிழர் விவகாரத்தில் எம்ஜிஆர் தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டது என்று பறைசாற்றினார். ஆனால், எம்ஜிஆர்தான், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை இறுதி வரை ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது போடப்பட்ட வழக்குகளைச் சந்திக்க, தன்னிடம் பணமே இல்லாதது போல, தொண்டர்களிடம் வழக்கு நிதி வசூல் செய்தார். 1981ல் இவரிடம் 34 ஆயிரத்து 540 ரூபாய் நிதியாக வழங்கப்பட்டது.

இவரின் வசூல் வேட்டை அத்தோடு முடியவில்லை. 1982ம் ஆண்டு, மே 15 மற்றும் 16 தேதிகளில் தஞ்சையில் நடந்த திமுக மாநாட்டில், இவர் சட்டமன்றத்தில் நுழைந்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை காரணம் காட்டி, வசூலில் ஈடுபட்டார். இவருக்கு அந்த விழாவில் 60 பவுன் பொன்னாரம் அணிவிக்கப்பட்டது. தனக்கு நகையின் மீதும் பணத்தின் மீதும் ஆசையே இல்லை என்பது போல, அதை ஏற்றுக் கொண்டு கருணாநிதி பேசியது…

“நானே தி.மு.கழகத்திற்கு சொந்தம் என்று ஆகிவிட்ட பிறகு, எனக்கு அணிவிக்கப்பட்ட பொன்னாரம் மட்டும் எனக்கு எப்படிச் சொந்தமாகும் ? அதுவும் கழகத்திற்கே சொந்தமாக வேண்டும். என்னை அன்பில் பேச அழைத்தபோது, தலைவரே ஆணையிடுங்கள் என்றார். ஆணையிடுங்கள் என்று கேட்டுவிட்டு, ஆணையை மீற முடியாது. எனவே ஆணையிடுகிறேன். எனக்கு அணிவிக்கப்பட்ட இந்த முப்பது பதக்கங்களும், மூவாயிரம் வீதம் 90 ஆயிரம் ரூபாய் ஆகிறது. இந்த 30 பதக்கங்களையும் நான் ஒருவனே வீட்டிலோ அல்லது கழகக் கட்டிடத்திலோ வைத்திருந்தால் அதைப்பார்த்து, ஒரு காலத்தில் கருணாநிதிக்கு அணிவிக்கப்பட்ட சீதனம் என்று கூறி மகிழ்ச்சி அடைபவர்கள் இருப்பார்கள். ஆனால் இது பரவிட வேண்டுமென்று விரும்புகிறேன். இந்த 30 பதக்கங்களில் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்பதற்காக நாலைந்து பதக்கங்களை மட்டும் என் வீட்டிற்காக எடுத்துக் கொள்கிறேன். என் பேரன் பேத்திகளுடைய கழுத்துக்களிலே இவைகள் தொங்கட்டும். மீதமுள்ள பதக்கங்கள் பலபேருடைய வீடுகளில் இருக்க வேண்டும். பதக்கத்தின் விலை மூவாயிரம் ரபாய். ஒரு நாலாயிரம் ரூபாய் யார் தருகிறார்களோ அவர்களுக்கு ஒரு பதக்கம்.” இதுபோல 1982ம் ஆண்டு பேசிய பேச்சிலிருந்தே, இவரது வசூல் நோக்கம் பரவலாகத் தெரியத் தொடங்கியது. கொடுத்த பதக்கங்களில் நான்கைந்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டு, மீதம் உள்ளவற்றை 35 சதவிகிதம் லாபம் வைத்து விற்றவர்தான் இந்த கருணாநிதி.

தங்கதுரை குட்டிமணி மற்றும் ஜெகன் ஆகியோரின் கண்கள் நோண்டப்பட்டு கொலை செய்த செய்தியறிந்த தமிழகம் கொந்தளித்தது. இலங்கையில் இந்தியா தலையிடவேண்டும் என்ற கோரிக்கையோடு, டெல்லியில் எல்.கணேசன் மற்றும் வைகோ 8 ஆகஸ்ட் 1983 அன்று காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அந்த உண்ணாவிரதப்போராட்டம் தொடர்ந்தால், எங்கே வைகோவும், எல்.கணேசனும் நற்பெயர் வாங்கிவிடப்போகிறார்களே என்று, அந்தப் போராட்டத்தை அடையாள உண்ணாவிரதமாக மாற்றுமாறு தந்தியனுப்பி அந்தப் போராட்டத்தை முடக்கினார்.

ஈழப்போராட்டத்தில் தமிழகத் தமிழர்களுக்கு உள்ள உணர்ச்சி வேகத்தை நன்கு புரிந்த கருணாநிதி, அந்தப் பிரச்சினையில் தனக்கு அதீத அக்கறை இருப்பது போல காண்பித்துக் கொண்டார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருக்கும் வரை, தன்னால் ஆட்சியைப் பிடிக்கவே முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தும் கூட 25 ஆகஸ்ட் 1983 அன்று கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் இப்படி அறிவித்தார். “இலங்கையில் இந்தியப் படை நுழைந்து ஈழத் தமிழகத்தை உருவாக்கித் தருமானால் தமிழகத்திலே காங்கிரஸ் கட்சியே ஆளட்டும், பத்தாண்டுக்கு காலத்திற்கு ஆட்சிக்கு வர திமுக முயற்சி எடுக்காது”. இது போல உணர்ச்சி வயமான வசனங்களை அள்ளி விடுவதில் கருணாநிதிக்கு நிகரே கிடையாது. திரைப்பட வசனகர்த்தா அல்லவா ?

ஈழத் தமிழர் விவகாரம் தமிழக மக்களிடையே பலத்த ஆதரவை பெற்றுள்ளது என்பதைப் புரிந்து, அவ்விவகாரம் தன்னுடைய அரசியல் முன்னேற்றத்திற்கு நன்கு பயன்படும் என்ற நோக்கில் 13 மே 1985 அன்று “டெசோ” என்ற அமைப்பை உருவாக்கினார் கருணாநிதி.

இந்த அமைப்பை தன்னுடைய நலனுக்காவே பயன்படுத்தினார் கருணாநிதி. ஈழத் தமிழர்களின் நலனுக்காக 2008 மற்றும் 2009ல் நடந்த போராட்டங்களைப் போலவே, 1987ம், மனிதச் சங்கிலி, முழு அடைப்பு, கையெழுத்து இயக்கம், தந்தி அனுப்புவது, மறியல் போராட்டம் என்று பல்வேறு போராட்டங்களைக் கையிலெடுத்தார் கருணாநிதி.

கோடம்பாக்கத்தில் ஈபிஆர்எல்எப் இயக்கத்தைச் சேர்ந்த 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, அதையும், வேறு சில சம்பவங்களையும் வைத்து கருணாநிதி அரசு கலைக்கப்பட்ட பிறகு, நான் மட்டுமா புலிகளை ஆதரித்தேன்… ஜெயலலிதாதான் ஆதரித்தார் என்று அறிக்கை வெளியிட்டவர் இந்தக் கருணாநிதி.

தொடக்ககாலம் முதல், திமுகவில் இருந்து, திமுகவின் பல்வேறு வெற்றிகளுக்கு அடிப்படையாக இருந்த வைகோவை, தன்னை கொல்லப்பார்க்கிறார் என்று பகிரங்கமாக அறிவித்து, அவரைக் கட்சியிலிருந்து நீக்கியவர்தான் இந்தக் கருணாநிதி.

2006ல் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் கருணாநிதி, இந்த முறை முழுப்பெரும்பான்மை இல்லாமல், மைனாரிட்டி அரசாக பதவியேற்கிறார். தன்னுடைய ஆட்சி தப்பிக்க காங்கிரஸின் தயவு தேவை என்ற நிலையிலேயே தன்னுடைய ஆட்சியை நடத்தி வருகிறார். இதற்கு முன் 2004ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், மத்தியில் ஆட்சியமைக்க, திமுகவின் எம்.பிக்களையே நம்பி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், திமுக கேட்டதெல்லாம் கிடைத்தது. திமுக வைத்ததே டெல்லியில் சட்டம் என்ற நிலை உருவானது. பொதுவாக மந்திரி சபை அமைக்கையில் யாருக்கு எந்த இலாகா என்பது போன்ற பேச்சுவார்த்தைகள் ரகசியமாகவே நடைபெறும். அவற்றின் விபரங்கள் வெளியிடப்படமாட்டாது. ஆனால், திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நடந்த ரகசிய பேச்சுவார்த்தை விபரங்களை பகிரங்கமாக வெளியிட்டார் கருணாநிதி. கப்பல் மற்றும் தரைவழிப்போக்குவரத்துத் துறையைத் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு, வழங்க மறுத்து விட்டார்கள் அறிவித்தார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒன்றில், திமுகவும் கருணாநிதியும் வைத்ததுதான் சட்டம். சேது சமுத்திரம் திட்டம் வேண்டுமென்றால் நடக்கும். அத்திட்டத்திற்கு அகழ்வுப் பணி மேற்கொள்வதற்கு, கப்பல் மற்றும் தரைவழிப்போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு சொல்லும் நிறுவனத்துக்கு காண்ட்ராக்ட் என்றால் கிடைக்கும். விருது நாயகர் கருணாநிதியின் செல்லப்பேரன் தயாநிதிக்கு தொலைத் தொடர்புத் துறை வேண்டுமென்றால் கிடைக்கும். அவர், லஞ்சம் பெற்றுக் கொண்டு, அவர் சொல்லும் ஒரு நிறுவனத்துக்கு ஏர்செல்லின் பங்குகளை விற்கவேண்டும் என்று மிரட்ட முடியும். ஏர்செல் நிறுவனத்தின் முதலாளி சிவசங்கரன் பிரதமரிடம் முறையிட்டால் கூட நடக்காது. இந்தியாவின் மிகப்பெரிய பெருமுதலாளி ரத்தன் டாடாவையே மிரட்டி, அவரது டாடா ஸ்கை திட்டத்துக்கு அனுமதி அளிக்காமல் மறுக்க முடியும். இது அத்தனையும் தெரிந்தும், காங்கிரஸ் கட்சி அமைதி காத்தது என்றால், அந்த அரசில் எட்டப்பரின் செல்வாக்கு அப்படி.

அக்டோபர் 2008ல் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகேதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முதன் முறையாக “ஈழத்தில் போரை நிறுத்து” என்ற கோரிக்கையை முன்வைத்து, போராட்டம் நடத்தியது. அது வரை, விடுதலைப்புலிகளை சிங்கள ராணுவத்தால் என்றுமே வெல்ல முடியாது என்று இறுமாந்து இருந்த தமிழினத்திற்கு, இந்திய அரசின் மறைமுக மற்றும் நேரடியான உதவிகளினால், புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்ட விபரம் மெல்ல மெல்ல புரிந்தது.

அதைத் தொடர்ந்து தமிழகமெங்கும், போராட்டங்கள் வெடித்துக் கிளம்பின. இன்றும் ஆறே மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் வரப்போகிறது என்பதை அறிந்த, எட்டப்பர் எண்பதுகளில் நிகழ்ந்தது போல ஈழப்பிரச்சினையில் தனது நாடகத்தை தொடங்கினார்.

தமிழகத்தில் போராட்டங்கள் தொடங்கியதும், முதலில் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறேன் என்று ஆரம்பித்தார். அவர் கடிதம் எழுதியது போதாது, இன்னும் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தவண்ணம் இருந்தது. இனி இந்த எட்டப்பரை நம்பினால் சரிப்பட்டு வராது என்பது புரிந்த மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள், “ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரவை” என்ற அமைப்பை ஏற்படுத்தி, பல்வேறு போராட்டங்களில் இறங்கினர். இந்த அமைப்பில், திருமாவளவன், ராமதாஸ், நெடுமாறன், வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற பல்வேறு அரசியல் கட்சிகள் களமிறங்கின. இவர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கவும், கருணாநிதி தன் பங்குக்கு, பேரணி ஒன்றை அறிவித்தார்.

ஜனவரி பிறந்ததும், ஈழத்தில் போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. புலிகள் அமைப்பு, போதுமான ஆயுதங்கள் இல்லாமல் பின்னடைவை சந்தித்தவண்ணம் இருந்தனர். போரில் காயம்பட்ட வீரர்களுக்கும், பொதுமக்களின் மீது வீசப்பட்ட குண்டுகளால் காயமடைந்தவர்களுக்கும், அவசர உதவி செய்யக்கூட மருந்துகள் இல்லாமல் புலிகள் இயக்கம் அல்லாடினர். இதனால் புலிகள் இயக்கத்தினர், தமிழகத்தில் உள்ள தங்கள் தொடர்புகளைப் பயன்படுத்தி, எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. உயிர்காக்கும் மருந்துகளும், ரத்த உறைகளும் வேண்டும் என்று பணத்தை இறைத்தனர். இங்குள்ள புலிகளின் தொடர்புகள், இந்தியா முழுவதிலிருந்தும் மருந்துகளைத் தருவித்து, ரத்த உறைகளையும், அவை கெட்டுப்போகா வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து, இலங்கைக்கு கடத்த முயன்ற போது, 25க்கும் மேற்பட்ட தடவை, அவர்களை பிடித்து, சாட்டிலைட் போன் வைத்திருந்ததாக வழக்கு போட்டார் எட்டப்பர் கருணாநிதி. மருந்துகளும் ரத்த உறைகளும் பறிமுதல் செய்யப்பட்டால், காறி உமிழ்வார்கள் என்று, அந்த மருந்துகளும், ரத்த உறைகளும் அழிக்கப்பட்டன. ஏப்ரல் 2009ல் மட்டும் 500 ரத்த உறைகள் அழிக்கப்பட்டன.

இந்த மருந்துகளைக் கடத்துவதற்காக, காவல்துறையிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக புலிகள் ஆதரவாளர்கள் பயன்படுத்திய, 900 சேட்டிலைட் போன்கள் எட்டப்பரின் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த ஒவ்வொரு சாட்டிலைட் போனிலும், 25 ஆயிரம் ரூபாய்க்கு பேசுவதற்கான டாக்டைம் இருந்தது. அந்த போன்களில் 50க்கும் குறைவானவை மட்டுமே கணக்கில் காட்டப்பட்டன. இந்த கைது சம்பவங்களின்போது, 50 கோடிக்கும் அதிகமான பணம், எட்டப்பரின் க்யூ பிரிவு காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் ஒற்றை ரூபாய் கூட, கணக்கில் காட்டப்படவில்லை.

பழ.நெடுமாறன், உலகம் முழுவதும் உள்ள அன்பு உள்ளங்களிடமிருந்து, உயிர்காக்கும் மருந்துகளையும், உணவுப் பொருட்களையும் சேகரித்து, குற்றுயிரும், குலையுயுருமாக இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு அவற்றை அனுப்புவதற்கு, முயன்றார். அந்தப் பொருட்களை நேரடியாக ஐக்கிய நாடுகள் படையிடம் ஒப்படைப்பேன் என்று கூறினார். அதை அனுப்ப மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்தது. அதை எதிர்த்து நெடுமாறன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். ஆனால், கருணாநிதி மத்திய அரசுக்கு ஆதரவாக, அந்த மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் இலங்கைக்குச் சென்று சேராமல் தடுப்பதில் வெற்றி கண்டார். அந்த உணவுப் பொருட்களும், மருந்துப் பொருட்களும் வீணாகிப் போயின.

தமிழகத்தில் போராட்டம் தீவிரமானவுடன், பிரதமருக்கு திமுகவினரை தந்தி அடிக்கும் போராட்டம் நடத்தச் சொன்னார். இதை ஏற்று எட்டப்பர் கட்சியினர், தமிழகமெங்கும் இருந்து தந்தி அடித்தனர். எட்டப்பர் மத்திய அரசிலிருந்து பதவி விலகவேண்டும் என்ற குரல் வலுத்த ஒலிக்கவும், விரக்தி அதிகமாகி, “ஒரு அடிமை இன்னொரு அடிமையிடம் இறைஞ்சுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் ?” என்று புலம்பினார். அழுத்தம் அதிகமானதும், மத்திய அரசிடம் இவர் கெஞ்ச ஆரம்பித்தார். உடனே, மத்தியிலிருந்து பிரணாப் முகர்ஜி இவரை வந்து பார்ப்பார். பார்த்ததும், போரில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என்று இலங்கை அரசு உறுதியளித்திருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாக அறிவித்து, அதை வைத்து ஒரு வாரத்தை ஓட்டுவார்.

பிரணாப் முகர்ஜி வந்து போனதும், அப்போது மத்திய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணன் இலங்கை சென்று விட்டு, வரும் வழியில் எட்டப்பரைச் சந்திப்பார். தமிழக மக்களின் கவலை மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது. அது இலங்கை அரசுக்கு சொல்லப்பட்டு விட்டது என்று அறிவிப்பார். இவர் ஒரு பக்கம் நாடகம் நடத்துகிறார் என்றால், இவரது மகள் கனிமொழியும், போலிப்பாதிரி ஜெகத் கஸ்பரும் மற்றொரு பக்கம் ஈழ மக்களுக்காக கண்ணீர் விடுவது போல நாடகத்தை அரங்கேற்றி வருவார்கள். பாருங்கள் என் மகளும் ஈழத் தமிழருக்காக போராடுகிறாள் என்று அதையும் ஒரு அறிவிப்பாகச் செய்து, போராட்டத்தை திசைத் திருப்புவார் இந்த எட்டப்பர். ஒரு நாள் திடீரென்று மனிதச் சங்கிலி போராட்டத்தை அறிவித்தார். அன்று பெய்த அடர்மழையிலும், இந்த எட்டப்பரை நம்பி ஆயிரக்கணக்கானோர் மழையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் வாங்கினால் ஒரே நாளில் போர் நின்று விடும் என்பது தெரிந்தும், மத்திய அரசுக்கு வலிக்காதவண்ணம், இது போன்ற போராட்டங்களை நடத்தியதில் எட்டப்பருக்கு நிகரேதும் கிடையாது.

மாணவர்கள் தமிழகமெங்கும் போராட்டக் களத்தில் குதித்தனர். அனைத்துக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கியதைப் பார்த்த எட்டப்பர், கல்லூரி மாணவர்களின் போராட்டம் பரவும் அபாயத்தைக் கண்டு, அனைத்துக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்தார். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களை காவல்துறையை விட்டு ஒடுக்கினார். அனைத்துத் தரப்பினரையும் ஒடுக்கிய எட்டப்பரால், வழக்கறிஞர்களை மட்டும் ஒடுக்க முடியவில்லை. ஏறக்குறைய ஒரு மாதமாக நீதிமன்றப் புறக்கணிப்பு, கருணாநிதி சோனியா படம் எரிப்பு, வாக்காளர் அடையாள அட்டை எரிப்பு, என்று பல்வேறு போராட்டங்களை நடத்திய வழக்கறிஞர்கள் மீது, காவல்துறையை விட்டு காட்டுமிராண்டித்தனமான தடியடி நடத்த உத்தரவிட்டார் கருணாநிதி.



ஜனவரி 29 அன்று முத்துக்குமார் என்ற இளைஞர் கருணாநிதியின் துரோகத்தை அம்பலப்படுத்திவிட்டு, தீக்குளித்து உயிரிழந்தார். முத்துக்குமாரின் மரணம் தமிழகத்தை புரட்டிப் போட்டது. போராட்டங்கள் முழு வீச்சை அடைந்தன. அந்த நேரம் பார்த்து, இல்லாத முதுகெலும்பில் அறுவை சிகிச்சை என்று ராமச்சந்திரா மருத்துவமனையில் சென்று படுத்துக் கொண்டு, போராட்டத்தின் வீச்சை முனை மழுங்கச் செய்தார். மருத்துவமனையில் படுத்துக்கொண்டே, தொலைபேசி ஒட்டுக் கேட்பில் சிக்கி பதவியை ராஜினாமா செய்த பூங்கோதையை மீண்டும் அமைச்சராக்கினார்.

மத்திய அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை வாபஸ் பெறவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து, அனைத்து எம்.பிக்களும் ராஜினாமா செய்யப்போகிறார்கள் என்று அறிவித்து, அனைவரிடமும் இருந்து ராஜினாமா கடிதத்தைப் பெற்றார். எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டுமென்றால் சபாநாயகரிடம் கடிதம் அனுப்பவேண்டும் என்பது உலகுக்கே தெரிந்திருந்தும், கடிதங்களை சபாநாயகருக்கு அனுப்பாமல், தானே வாங்கி வைத்துக் கொண்டார். பிறகு அந்தக் கடிதங்களை என்ன செய்தார் என்பதற்கான விளக்கத்தை எட்டப்பர் வழங்கவில்லை.

அவர் செய்த நாடகங்கள் எடுபடாமல், போராட்டங்கள் தீவிரமானதைப் பார்த்து, திடீரென்று ஒரு நாள் காலை 10 மணிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் உண்ணாவிரதம் என்று உட்கார்ந்தார். இதை எட்டப்பரின் நாடகத்தின் உச்சம் என்று சொல்லலாம். மதியம் 12 மணிக்கு, மத்திய அரசிடமிருந்து, இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல் வந்ததால், உண்ணாவிரதத்தை கைவிடுவதாக அறிவித்தார்.

உண்ணாவிரத நாடகம் முடிந்த மறுநாளே, இலங்கையில் பொதுமக்கள் மீது கொத்துக் குண்டுகள் வீசப்படுவதாக புகார்கள் வந்தது. இதைப்பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, குண்டுகளில் மக்கள் இறப்பதை “மழை நின்றாலும் தூவானம் விடாது” என்று இரக்கமேயின்றி வர்ணித்தார்.

பாராளுமன்றத் தேர்தலில், திமுக தோற்க வேண்டுமென்று, தமிழகமே விரும்பினாலும், இந்த எட்டப்பரின் கூட்டணி 23 இடங்களில் வெற்றிபெற்றதும், எட்டப்பரின் இறுமாப்பு பல மடங்கு ஏறியது. மே 17 அன்று முள்ளிவாய்க்காலில், லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட சோகத்தில் தமிழகம் ஆழ்ந்திருந்த நிலையில் ஜுன் 3 அன்று தனது பிறந்தநாளை எட்டப்பர் எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி சிறப்பாக கொண்டாடினார். பத்திரிக்கையாளர்களை சந்தித்த எட்டப்பர், என் பிறந்தநாளை திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியோடு தமிழகம் முழுக்க கொண்டாடி வருகின்றனர் என்றார்.

அடுத்த சில மாதங்களிலேயே செம்மொழி மாநாடு என்று அறிவிப்பு வெளியிட்டார். தமிழனை கொன்று விட்டு, தமிழுக்கு மாநாடா என்று உலகெங்கும் எழுந்த கண்டனக் குரல்களை ஒதுக்கிப் புறந்தள்ளி மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டை தனது குடும்ப மாநாடாகவும், தனது துதிபாடும் மாநாடாகவும் நடத்தினார். அந்த மாநாட்டுக்கு எட்டப்பருக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழமைப்புகள் களத்தில் இறங்க உள்ளன என்ற செய்தி அறிந்து, விழுப்புரத்தில் வெடிகுண்டு வெடித்ததாக தனது காவல்துறையை வைத்து ஒரு ஏற்பாட்டைச் செய்து, அதைக் காரணமாக வைத்து, தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து மாநாடு முடியும் வரை காவலில் வைத்தார்.

ஈழத்தில் உள்ள தமிழர்களுக்குத்தான் ஆதரவு தரவில்லையென்றால், தமிழகத்தை ஆதரவாக நினைத்து வந்த ஈழத் தமிழர்களை, செங்கல்பட்டு, பூந்தமல்லி என்ற வதை முகாம்களில் அடைத்து அவர்கள் தங்கள் உறவினர்களோடு சேர்ந்து வாழ விடாமல் கொடுமை செய்தார் இந்த எட்டப்பர். அந்த அகதிகள் மீதான வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தால் எங்கே அவர்கள் விடுதலை ஆகி விடுவார்களோ என்று, வருடக்கணக்கில் அவர்கள் மீதான வழக்குகளை தாமதம் செய்தார் எட்டப்பர்.

எங்கள் மீதான வழக்குகளை விரைவில் முடியுங்கள், அல்லது எங்கள் உறவினர்களோடு எங்களை சேர்ந்து வாழ அனுமதியுங்கள் என்று கோரி, உண்ணாவிரதம் மேற்கொண்ட செங்கல்பட்டு முகாம் அகதிகளை, இரவோடு இரவாக காவல்துறையை விட்டு, கடுமையாக தாக்கினார் இந்த எட்டப்பர். தாக்குதலுக்கு உள்ளான அகதிகள் மீது, போலீசைத் தாக்க முயற்சித்தார்கள் என்ற வழக்கு போட்டார் கருணாநிதி.

தஞ்சை மாவட்டத்தில் ஒரு தனியார் இடத்தில், அவருக்கு சொந்தமான பட்டா உள்ள இடத்தில், ஈழத்தமிழருக்காக உயிர் நீத்த தியாகி முத்துக்குமாரின் சிலையை வைப்பதற்கு தனது காவல்துறையை விட்டு அனுமதி மறுத்தார் எட்டப்பர் கருணாநிதி. தன் சொந்த இடத்தில் சிலை வைப்பதற்கு அனுமதி மறுப்பா என்று உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து அனுமதி வழங்கியது.

தேசியத்தலைவர் பிரபாகரனின் தாயார், சிகிச்சைக்காக இந்தியா வந்தபோது, அவரை சென்னை விமானநிலையத்தில் இறங்கவிடாமல் செய்ய மத்திய அரசு எடுத்த முயற்சிக்கு துணை நின்றார் கருணாநிதி.

1983 முதல் இதுவரை ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். எட்டப்பர் ஆட்சிக்காலத்தில் மீனவர்கள் கொல்லப்பட்டபோதெல்லாம் பிரதமருக்கு கடிதம் எழுதுவார் எட்டப்பர். அப்படி தொடர்ந்து கடிதம் எழுதுகிறீர்களே… அந்தக் கடிதத்தை எந்த தபால் பெட்டியில் போடுகிறீர்கள் நான் அதைப் பார்க்க வேண்டும் என்று ஒரு கூட்டத்தில் சீமான் பேசிய காரணத்துக்காக, அவரை தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தார் கருணாநிதி. மீனவர்கள் தொடர்ச்சியாக கொல்லப்பட்டபோது, கருணாநிதி தெரிவித்த பொன்மொழி “தமிழக மீனவர்கள் பேராசைக்காரர்கள். இலங்கைப் பகுதிக்குச் சென்று மீன் பிடிக்கின்றனர்” என்பதே.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 21 ஆண்டுகளாக சிறையில் வாடும் நளினியின் முன்விடுதலை குறித்த வழக்கு, கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராயப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளரை வைத்து, நளினி விடுதலை செய்யப்பட்டால், அந்தப் பகுதியில் குடியிருக்கும் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அமேரிக்கத் தூதரகத்திற்கு ஆபத்து என்று அறிக்கை கொடுக்க வைத்து, நளினியின் விடுதலையைத் தடுத்தார்.

அதுமட்டுமல்லாமல், நளினி தன் அறையில் செல்போன் வைத்திருந்ததாக ஒரு பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி, நளினியை சிறைமாற்றம் செய்து, அலைக்கழித்து கொடுமைக்கு ஆளாக்கினார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் எனது நண்பர் என்று அடிக்கடி கூறிவிட்டு, புலிகள் இயக்கம் அழிந்துவிட்டது என்று இலங்கை அரசே அறிவித்த பின்னும், 2009ம் ஆண்டு, புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்பட பெரும் காரணமாக இருந்தார்.

ஈழத்தில் மக்கள் கொத்துக் குண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருந்தபோது, இவர் ஏன் அமைதி காத்தார் என்ற விபரங்கள் 2010ம் ஆண்டில் வெளிவந்தன. 2008 மற்றும் 2009ம் ஆண்டில், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பெருமானமுள்ள ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பதுக்கி வைத்து, அதை முதலீடு செய்வதற்காக, லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிப்பதற்கு துணையாக இருந்தார் என்ற விபரம் தெரிய வந்தது.

"இதை நான் பிறந்தநாள் செய்தியாக சொல்கிறேன். விரைவில் விழுப்புரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளோடு சேர்ந்து டெசோ மாநாடு நடத்தப்பட உள்ளது.

விரைவில் இலங்கையில் தனி ஈழம் உருவாகவேண்டும் என்பதுதான் எனது பிறந்தநாள் செய்தியாகும்." என்று ஜுன் 3 2012 அன்று அறிவித்தார் கருணாநிதி. ஈழத்தில் மக்கள் செத்து முடிந்தபிறகு எதற்காக மாநாடு என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆனாலும் தனி ஈழக் கோரிக்கையை வற்புறுத்துகிறாரே என்று சிலர் ஆறுதல் அடைந்தனர். ஆனால் மத்திய அரசின் நெருக்கடி வந்ததும், ஈழம் என்ற வார்த்தையையே கைவிட்டார் கருணாநிதி.

இந்த அயோக்கியத்தனத்தின் உச்சமாக, இந்த டெசோ மாநாட்டுக்கு மத்திய அரசின் அனுமதியை கேட்டு 6 ஆகஸ்ட் 2012 அன்று திமுக கடிதம் எழுதியிருக்கிறது. தாம் என்ன பேச வேண்டும் என்பதை மத்திய அரசிடம் அனுமதி பெற்று பேசும் அளவுக்கு தரம்தாழ்ந்த காரணத்தாலேயே இவ்விருதுக்கு தகுதியுடைய ஒரே நபராகிறார் கருணாநிதி. தன் சுதந்திரத்தையும், பேச்சுரிமையையும், சோனியா மற்றும் மத்திய அரசின் காலடியில் அடகு வைத்திருக்கிறார் கருணாநிதி. சுதந்திரத்தையும், சுயமரியாதையையும் சுயநலத்துக்காக விட்டுக் கொடுக்கும் ஒரு மனிதன்.

இதுபோல “தமிழினத்தின் எட்டப்பன்” என்ற விருதைப் பெறுவதற்கு இவரின் தகுதிகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். ஆனால், இட நெருக்கடி கருதி, இவரது எட்டப்பர் தகுதிகள் இத்தோடு முடித்துக் கொள்ளப்படுகின்றன.

கருணாநிதி டெசோ மாநாடு நடத்தும் இந்த வேளையில், அவருக்கு சவுக்கு மற்றும் அதன் வாசகர்கள் சார்பாக, “தமிழினத்தின் எட்டப்பன்” என்ற விருதை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

வாழ்க தமிழினத்தின் எட்டப்பர்….. வளர்க அவர் குடி… ஓங்குக அவரது புகழ்.

-- சவுக்கு இணையதளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக