பக்கங்கள்

திருக்குறள்

வெள்ளி, பிப்ரவரி 17, 2012

ஆட்டிசம் – விரைவாக அறிந்துகொள்ள சில எளிய வழிகள


இந்தியாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் சரியான புள்ளிவிபரங்கள் இங்கே இல்லை.
பெற்றோர் தொடங்கி மருத்துவர்கள் வரை ஆட்டிசம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. மேலை நாடுகளோடு, ஒப்பிடும் போது இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது. இந்தியாவில் வட இந்தியாவோடு ஒப்பிடும் போது, தென்னிந்தியாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தென்னிந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது.
ஆட்டிசம் என்பது மூளை தகவல்களை பயன்படுத்திப் புரிந்து கொள்ளும் திறனை தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போவதனால் மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப்போவதே ஆட்டிசம்.
சீக்கிரமாக கண்டுபிடிப்பதனாலும், சரியான பயிற்சிகள் தருவதனாலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். சரியான நேரத்தில் கண்டுபிடித்து, சரியான சிகிச்சையளித்தால் முற்றிலுமாக குணப்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம். அத்தோடு இவ்வகை குறைபாடுள்ள குழந்தைகள் அதீத புத்திசாலியாக இருக்கவும் வாய்ப்புண்டு. புத்திசாலித்தனத்திற்கும் இக்குறைபாட்டிற்கும் எவ்வித தொடர்புமில்லை.
ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதானே ஒழிய நோயல்ல.
இதனை அடையாளம் காணமல் விடுவதால் இக்குழந்தைகளின் எதிர் காலத்தை வீணாக்கி விட்டுக்கொண்டு இருக்கிறோம். இங்கே மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பலரும் ஆட்டிசத்தின் பிடியில் இருப்பவர்கள் என்கிறார்கள் இதற்காக பணியாற்றிக்கொண்டிப்பவர்கள். நம்மால் முடிந்த அளவுக்கு ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
அரசு கூட ஆட்டிசம் என்பதை தனித்துறையாக கொள்ளாமல், மூளை வளர்ச்சி குறைபாடு உடையவர்களோடு தான் இவர்களை இணைக்கிறது. ஆட்டிசம் என்பது இப்படித்தான் இருக்கும் என்பதை வரையறுக்க முடியாது. இதன் அறிகுறிகளின் தீவிரம் பல்வேறு பட்ட அளவுகளில் இருக்கும் – மிக மெலிதான கற்கும் திறன் குறைபாட்டில் தொடங்கி, மிகத் தீவிரமான பாதிப்பு வரை அதன் அளவு பரந்துபட்டது.
ஆட்டிசத்தின் அறிகுறிகளை உணர்ந்து விரைவாக கண்டுபிடியுங்கள்..
எவருடனும் சேராமல் ஒதுங்கி இருப்பது
கண்களைப் பார்த்துப் பேசுவதை தவிர்ப்பது
பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பிப் பார்க்காமலிருத்தல், சில வேளைகளில் காது கேளாதது போல் இருத்தல்
காரணமற்ற சிரிப்பு
மற்ற குழந்தைகளுடன் கலந்து பழகுவதிலும், விளையாடுவதிலும் ஆர்வம் காட்ட மாட்டார்கள்
தனது விருப்பத்தை குறிக்க ஆட்காட்டி விரலைப் பயன்படுத்தி சுட்டிக்காட்ட மாட்டார்கள்
சில செயல்களை சரியாகச் செய்ய முடிந்தாலும் சமூகப் புரிதல்கள் இல்லாமலிருப்பது
பயம், ஆபத்து போன்றவற்றை உணராது இருப்பார்கள்
பாவனை விளையாட்டுக்கள் இல்லாமல் இருப்பது அல்லது வித்தியாசமான முறையில் ஒரே மாதிரியாக திரும்பத் திரும்ப செய்வார்கள்
தனது தேவைகளை உணர்த்த பெரியவர்களை கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவார்கள்
அதீதமான பதட்டம், ஹைப்பர் ஆக்டிவிட்டி அல்லது அதீதமான மந்தத் தன்மை-யோடு இருப்பார்கள்
காரணமில்லாமல் மோசமான அழுகை, சோகம் போன்ற உணர்ச்சிகளை அடைவார்கள்
வலி பற்றிய பிரக்ஞை இல்லாதிருத்தல் அல்லது வலியை உணராது இருப்பது
வித்தியாசமான நடவடிக்கைகள் - கைகளை தட்டுவது, குதிப்பது போல எதையாவது செய்து கொண்டிருப்பார்கள்
வழக்கமான கற்பித்தல் முறைகளில் ஈடுபாடு காட்டமாட்டார்கள்
சில வேளைகளில் தொடப்படுவதையோ, அணைக்கப்படுவதையோ விரும்புவதில்லை
தினப்படி செயல்பாடுகளில் மாற்றமில்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, மாற்றங்களை அசௌகரியமாக உணருவது
பொருளற்ற சொற்களை திருப்ப திருப்பச் சொல்லுவது
பொருட்களை சுற்றி விட்டு ரசிப்பது - அதற்குள்ளேயே மூழ்கிப் போவது-யெஸ்.பாலபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக