பக்கங்கள்

திருக்குறள்

ஞாயிறு, அக்டோபர் 09, 2016

பால் நியூமன்

சிறப்பு நேர்காணல்- பேராசிரியர் பால் நியூமன்
“திராவிடர் அல்லாத தமிழ்க் கட்சிகளின் எழுச்சி நம்பிக்கை ஏற்படுத்துகிறது”
திரு.பால் நியூமன் அவர்கள் பெங்களுர் பல்கலைக்கழத்தின் மனித உரிமைகள் துறைப் பேராசிரியர் ஆவார். 2009 ஈழப்போரில் நடந்த இனப்படுகொலையை ஐ.நா அரங்கிற்கு எடுத்து செல்லும் பணியை மேற்கொண்டவர். 2010 ஜனவரியில் டப்ளின் தீர்ப்பாயம் ஈழ இனப்படுகொலை குறித்த விரிவானதோர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதன்; அடிப்படையில்தான்; மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கேட்டறிய மூன்று பேர் குழுவை ஐ.நா ஈழத்திற்கு அனுப்பியது. என்பது குறிப்பிடத்தக்கது. டப்ளின் தீர்ப்பாயத்தின் நான்கு பிரதிநிதிகளில் தமிழர்கள் சார்பில் இடம் பெற்றவர் பேராசிரியர் பால் நியூமன் அவர்கள். நேர்காணலின்போது அவர் உண்மைத்தமிழனிடம் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:
1.கேள்வி: இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை, போர் என்றால் மனிதர்கள் கொல்லப்படுவது இயல்புதான் என்கிறவர்களின் கருத்தைப் பற்றி உங்களது கருத்து என்ன?
2009ஆம் ஆண்டு ஈழப்போர் உச்சகட்டத்தில் இன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சிறிதும் மனித்தன்மை இல்லாமல் போரில் மக்கள் கொல்லப்படுவது இயல்பு என்று கூறியிருந்தார். இலங்கையில் நடந்தது ஓர் இனப்படுகொலைதான். இது இனப்படுகொலையில்லை என்று சொல்வது ஒரு மிகப்பெரிய குற்றம். ஓர் ஆய்வாளராக நான் 1995ஆம் ஆண்டில் இருந்து 2009ஆம் ஆண்டு வரை பலமுறை தமிழ் ஈழம் சென்று அங்கு நடந்த இனப்படுகொலையை ஆய்வுரீதியில் ஆவணப்படுத்தி உலக அரங்கில் இலங்கை அரசாங்கத்தின் தமிழர் இன அழிப்பு நோக்கத்தை வெளிப்படுத்தி உள்ளேன். தமிழ்நாட்டில் தமிழர்கள் மேற்கொண்ட பல போராட்டங்கள் மற்றும் அவர்கள் கொடுத்த அழுத்தத்தினால் இதே ஜெயலலிதா வாக்கு வங்கி அரசியலுக்காக மூன்று தீர்மானங்களை தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவந்தார். அதில் முக்கியமானது இலங்கையில் நடந்த இனப்படுகொலைதான் என்பது. இலங்கை வரலாற்றில் 1948ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை கட்டமைப்பு ரீதியில் இனப்படுகொலை நடந்துகொண்டுதான் இருக்கிறது. செப்டம்பர் 2008லிருந்து மே 2009 வரை 1,46,679 தமிழர்களை இன்று வரை காணவில்லை 3,00,000க்கும் மேற்பட்ட தமிழர்களை சிறையைவிடக் கொடுமையான மாணிக்ஃபார்ம் முகாம்களில் மூன்று ஆண்டு காலம் உணவு, மருத்துவம், குடிநீர், கழிப்பறை வசதிகள்கூட இல்லாமல், ஹிட்லர் காலத்தில் யூதர்களை நாஜி முகாம்களில் வைத்திருந்தது போல ஈவு இரக்கம் இல்லாமல் வதைத்துக் கொடுமைப் படுத்தினர். 90,000 தமிழ்ப் பெண்கள் போர் விதவைகளாய் மாறியிருக்கிறார்கள். 40,000 சிறு குழந்தைகள் அநாதைகளாக நிற்கின்றனர். ஐ.நா சபையின் எண்ணிக்கைப்படி 1,00,000 தமிழர் குடியிருப்புகள் அழிக்கப்பட்டுடிருக்கின்றன. தமிழர்களுக்குச் சொந்தமான 7,000 சதுர கி.மீ நிலங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. வடக்கு இலங்கை இராணுவமயமாக்கப்பட்டு இந்தப் பிரதேசம் ஒரு இராணுவ முகம் போல் மாற்றப்பட்டிருக்கிறது. சிங்கள குடியேற்ற திட்டம், புத்தமத பிரசாரம், இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2500 தமிழர் வழிபாட்டு மையங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இதை இனப்படு கொலை இல்லை என்று கூறுபவர்கள் தமிழ் இன விரோதிகள் அல்லது மனிதத்தன்மை இழந்தவர்கள்.
2. ஈழப் பிரச்சனை நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
2011ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்சனை மிக முக்கிய பங்கு வகித்து, தமிழர் உணர்வை மதிக்காமல் இன படுகொலையை முன்னின்று நடத்திய காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த தி.மு.க அரசுக்கு மிக பெரிய தோல்வியை ஏற்படுத்தி பாடம் கற்றுக் கொடுத்தது. இந்த 2016 தேர்தலில் திராவிட கட்சிகளாகட்டும், தேசிய கட்சிகளாகட்டும் ஈழப் பிரச்சனையை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் அக்கட்சிகளின் தலைவர்கள் பிறப்பால் தமிழர்கள் இல்லை. இந்நிலையில், ஈழப் பிரச்சனையை வாக்கு வங்கி அரசியலாக கையில் எடுக்காமல் உண்மையான அக்கறையோடு தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்தும் சில அரசியல் அமைப்புகள் இந்தத் தேர்தலில் களம் காணுகின்றன. ஒருவேளை இவர்கள் வெற்றி பெற்று சட்டசபையில் இடம் பெறும் வாய்ப்பு வாய்க்குமானால் ஈழப் பிரச்னை உலக அரங்கை இன்னும் பலமாக தட்டும் என்றே நான் கருதுகிறேன்.
3. தமிழர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட எப்படிப்பட்ட அரசு தமிழகத்தில் அமைய வேண்டும் என நீங்கள் எண்ணுகிறீர்கள்?
கடந்த 5 ஆண்டு காலமாக தமிழகத்தை எந்த ஒரு தமிழ் கட்சியும் ஆளவில்லை. திராவிடம் என்ற பெயிரில் தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள் தமிழ் இனத்தை இலவசங்களுக்கு கையேந்தும் இனமாக மாற்றி அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். தமிழ் மக்கள் கடந்த 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் சிந்திக்கும் திறன் இழந்து அடிமை கோலம் கொண்டு ஆட்டு மந்தைகள்போல் அக்கட்சிகளின் பின் அணிவகுக்கும் நிலையில் உள்ளனர். தமிழன் மண், நீர், காற்று, கனிமவளம், கடல்வளம், மலைவளம் அனைத்தும் இத்திராவிடர் ஆட்சியில் சுரண்டப்பட்டுக் கொண்டு இருக்கிறது. நடுவண் அரசும் இதற்கு விதிவிலக்கல்ல. கூடங்குளம், கல்பாக்கம் அணுஉலைகள், நியூட்ரினோ திட்டம், நெய்வேலி மின்சாரம், மீத்தேன் எரிவாயு திட்டம் என்று தமிழக வளங்களை உறிஞ்சி நம் மக்களின் வாழ்வாதாரங்களையும், அவர்களின் வாழ்க்கையையும் கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர். அண்டை நாடுகளின் மீனவர் கைதுகளை இந்திய மீனவர் என்றும், தமிழக மீனவர் என்றுமே வேறுபடுத்தி மாற்றான் தாய் மனப்போக்கோடுதான் நடந்து வருகின்றன. இந்நிலையில், தமிழர்களின் வாழ்வுரிமை காக்கப்பட வேண்டுமெனில் தமிழகத்தை தமிழர் ஒருவர் ஆழும் நிலை வரவேண்டும். இந்த தேர்தலில் திராவிடர் அல்லாத தமிழக்; கட்சிகளின் எழுச்சி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இந்த கட்சிகளின் வரவு தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து காக்கும் என்று நம்புகின்றேன்.
4. தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் என தமிழக மக்களிடம் பரவலாக தற்போது கருத்து நிலவுகிறது. இக்கருத்து தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா?
தமிழ்நாட்டில் ஒரு கொடுமையான உண்மை என்னவெனில், நான் முன்பே கூறியதுபோல தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக பச்சைத் தமிழன் ஆளவில்லை. இறையாண்மை பேசுகிற இந்த இந்திய தேசத்திலேயே மொழிவாரியாகத்தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு இருக்க, காங்கிரஸ் கட்சி ஆளுகின்ற கர்நாடகாவிலும், கேரளாவிலும் அந்த மாநிலங்களைச் சேர்ந்த அந்த மக்களின் மொழி பேசுகின்றவர்தான் முதலமைச்சராக உள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் கேரளாவிலோ, மலையாளி ஒருவர் கர்நாடகாவிலோ முதலமைச்சராக அமர முடியாது. இந்த அடிப்படையிலேயே தமிழகத்தையும் ஒரு தமிழரே ஆள வேண்டும் என்கிற கருத்து இன்று தமிழக மக்களால் பலமாக சிந்திக்கப்பட்டு வருகின்றது. சித்தாந்த ரீதியிலேயும் இக்கருத்து சரியே. ஆனால் வந்தோரை எல்லாம் வாழ வைத்த நாம் செய்த மிகப்பெரும் தவறு, அவர்களை ஆள வைத்ததும்தான். இந்நிலை மாறும் என்று நம்புகிறேன்.
5. எப்படிப்பட்ட அரசு தமிழகத்தில் அமைந்தால் தமிழீழம் மலர்வதற்கு இலகுவாக இருக்கும்?
தம்முடைய அரசியல் லாபத்திற்கும் தம் குடும்பத்தாரின், சுற்றத்தாரின் பொருளாதார நன்மைக்கும் நாட்டு மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் வியாபார நோக்குடன் வெறும் வாய் வார்த்தை ஜாலங்களால் வாக்கு வங்கி அரசியல் நடத்தும் திராவிட கட்சிகள் அனைத்தும் முற்றிலும் துடைத்து எரியப்பட்டு உடலாலும், உணர்வாலும் உள்ளத்தாலும் உழைக்கின்ற மாற்று அரசியலை முன்னெடுக்கின்ற ஒரு தமிழ் கட்சியாலேயே தமிழ் இனம் அமைவதற்கான சாத்திய கூறுகள் முன்னெடுக்கப்படும் என்று நம்புகிறேன். அப்பொழுதுதான் ஏழரை கோடி தமி;ழர்களின் சார்பாக தமிழ் அறிவுசார் சமூகம் உலக அரங்கில் தமிழீழம் மலர்வதற்கான காரணங்களை வலியுறுத்தி ஒரு வாக்கெடுப்பு கோருவதற்கான அழுத்தத்தை ஏற்படுத்த முடியும். ஈழம் கனவு நனவாகும்.
6. தமிழீழம் மலர்வதற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் எப்படிப்பட்ட நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்?
2009ல் ஈழப்போருக்குப் பின் 7 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் ஈழத்தில் தமிழர்களின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எண்ணற்ற ஈழப் போராளிகளின் ஈகத்திற்கு இன்றுவரை பலனில்லை. அதனால் ஈழத்தின் தாய்த் தமிழ் உறவாகிய தமிழகத்தின் அரசியல் நகர்வுகள் அன்றும் இன்றும் ஈழப்பிரச்சனையை மையப்படுத்தியே உள்ளன. திராவிட கட்சிகள் வேரோடும் வேரடி மண்ணோடும் பிய்த்து எறியப்பட காலம் நமக்கு வழிகாட்டி இருக்கிறது. இதை மனதில் கொண்டு புலம் பெயர்ந்த தமிழர்கள் மூன்று விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.
ஒன்று, உலக அரங்கில் இனவெறி சிங்கள அரசின் போர்க்குற்றங்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தி பாதிக்கப்பட்ட நம் இன மக்களுக்கு நீதியையும், நஷ்ட ஈட்டையும், அரசியல் தீர்வையும் எட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இரண்டு, தாங்கள் வாழ்கின்ற நாடுகளின் செல்வாக்கு மிக்க அரசுகளிடமும், அரசியல்வாதிகளிடமும் தமிழீழத்திற்கான தேவையை புரிய வைத்து உலக அரங்கிலும் ஐ.நா மன்றத்திலும் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை நோக்கிய நகர்வுக்கு அழுத்தங்களை ஏற்படுத்த செயலாற்ற வேண்டும்.
மூன்று, இங்கு தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி போன்ற தமிழ் தேசியத்தை கட்டமைக்க உழைத்துக் கொண்டிருக்கின்ற கட்சிகளுக்கு வேண்டிய ஆதரவையும், உதவியையும் தாராளமாக நல்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக