பக்கங்கள்

திருக்குறள்

ஞாயிறு, ஜனவரி 08, 2012

தனுஷ்கோடி வரலாறு!!



47 ஆண்டுகளுக்கு முன் தனுஷ்கோடி அழிந்த தினம் 1964 டிசம்பர் 23!

பல நூற்றாண்டுகளாகத் தீர்த்த யாத்திரைத் தலமாகத் திகழ்ந்த தனுஷ்கோடி 1964 டிசம்பர் 23ம் நாள் நள்ளிரவில் வீசிய கடும் புயலில் கடுஞ் சேதம் அடைந்தது. பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது. ஓடிக்கொண்டிருந்த றயில் கடலில் கவிழ்ந்து அதில் பயணித்த 300 பேர் உயிரிழந்தனர்.

2000 வருடம் பழமை வாய்ந்த ரிக் வேதம் தனுஷ்கோடியைக்; கடல் விழுங்க முடியாது என்று கூறியது. ஆனால் புயல் அதை நிர்மூலமாக்கும் என்று கூறவில்லை. மக்கள் வாழ முடியாத இடமாக மாறிவிட்ட தனுஷ்கோடி சுற்றுப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ராமேஸ்வரம் தீவின் தென் கிழக்கு முனையில் 18 கீ.மீ தொலைவில் அமைந்துள்ள தனுஷ்கோடி இராமரின் காலடிபட்ட இடமாகப் பூசிக்கப்படுகிறது. இலங்கை சென்று சீதையை மீட்ட இராமர் தனது அம்பை எய்து தனுஷ்கோடியை அடையாளம் காட்டினார்.

இந்தப் புராணச் செய்தி காரணமாகப் பல நூற்றாண்டு காலமாகச் சிறந்த புண்ணிய தலமாகவும் பிற்காலத்தில் துறைமுக நகராகவும் அது இடம்பெற்றது. 20ம் நூற்றாண்டில் பிரிட்டிஸ் ஆட்சியினர். அதைத் துறைமுக நகரமாக மாற்றினார்கள். அதன் துறைமுக வரலாறு பின்வருமாறு.

கி.பி 17 ம் நூற்றாண்டில் இருந்து 19ம் நூற்றாண்டின் இறுதி வரை பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் இருந்து இலங்கை, வங்காளம், இந்தியாவின் மேற்குக் கடற்கரை வரை கடற் போக்கு வரத்து நடைபெற்றது. 20ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தனுஷ்கோடி – தலை மன்னார் போக்குவரத்து தொடங்கப்பட்டது.


இதற்கு திட்டமிட்ட ஆங்கிலேயர்கள் 01.03.1914ல் கப்பல் போக்கு வரத்தை தனுஷ்கோடி – தலைமன்னார் துறைமுகங்களுக்கு இடையில் ஆரம்பித்தனர். இந்திய றயில் கம்பனிக்குச் சொந்தமான இர்வின், கோஷின் என்ற இரு நீராவிக் கப்பல்கள் இதற்குப் பயன் படுத்தப்பட்டன.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான குறுகிய நேரக் கடல் வழிப் பயணமாக இது அமைந்தபடியால் சென்னை, தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களுக்கு அடுத்த இடத்தில் தனுஷ்கோடி இடம் பெற்றது. இதன் காரணமாகத் தீர்த்த யாத்திரைத் தலமாகவும் தனுஷ்கோடி சிறந்த துறைமுக நகராகவும் மாறியது.

ஆங்கிலேயர்கள் தனுஷ்கோடியைச் சிறந்த வர்த்தக நகராகவும் மாற்றினார்கள். இங்கிருந்து பருத்தித் துணிகள், பித்தளை, அலுமினியம், கருவாடு , முட்டை, காய் கறிகள் இலங்கைக்கு ஏற்றுமதி கப்பல் மூலம் செய்யப் பட்டது.

அனைத்திற்கும் 1964 டிசம்பர் 23ம் திகதி முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. வங்கக் கடலில் உருவான கடும் புயல் இரவு 12.30 அளவில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் தனுஷ்கோடியைத் தாக்கியது. பாம்பனில் இருந்து தனுஷ்கோடிக்குச் சென்ற ரயில் கடலில் கவிழந்தது.

அதில் பயணித்த பெங்களுர் கல்ல}ரி மாணவிகள் கடும் தூக்கத்தில் இருந்தனர். இவர்களும் வேறு பயணிகளுடன் கடல் நீரில் மூழ்கி இறந்தனர். இன்று புயலின் எச்சங்களாக கூரை இல்லாத றயில் நிலையம், தபால் நிலையம், கோவில்கள், தேவாலயங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கட்டிடங்கள் என்பன இடிந்த நிலையில் காணப்படுகின்றன.

மத்திய மாநில அரசுகள் குடியிருப்புக்கு உதவாத இடமாக தனுஷ்கோடியை அறிவித்துள்ளன. அங்கு வாழ்ந்தோர். ராமேஸ்வரம் தீவின் பிற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். அரசு எதுவித வசதியைச் செய்து கொடுக்காவிட்டாலும் சில மீனவ குடும்பங்கள் விடாப்பிடியாகத் தனுஷ்கோடியில் வாழ்கின்றன.

இலட்சக் கணக்கான சுற்றுப் பயணிகள் இடிபாடுகளைப் பார்ப்பதற்காக வந்து செல்கிறார்கள் அவர்களுக்கும் வசதிகள் கிடைப்பதில்லை. தனுஷ்கோடியைப் புனரமைத்துப் புதிய நகரை உருவாக்க வேண்டிய இந்திய மத்திய, மாநில அரசுகள் தமது பொறுப்பைத் தட்டிக் கழிக்கின்றன.

கடல் விழுங்கிய பகுதிகளை மீட்டெடுத்து, நீர் தேங்கும் குழிகளை நிரப்பி குடியிருப்புக்குப் பொருத்தமாக கட்டமைப்புக்களையும் அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். இடம் பெயர்ந்த குடும்பங்களின் பிற்சந்ததியினர் மீளவும் வந்து குடியேற உதவ வேண்டும்.

இன்னொரு கோணத்தில் தனுஷ்கோடியின் முக்கியத்துவம் பற்றிச் சிந்திக்கப்படுகிறது. பாக்கு நீரிணையில் இலங்கை அரசு சீன அரசு ஆகியன தமது இராணுவ கடற்படை நிலைகளைப் பலப்படுத்துகின்றன. தனுஷ்கோடியில் நிரந்தர பாதுகாப்பு ஒழுங்கை செய்வதற்குக் காலம் நெருங்கிவிட்டது. 47 வருடம் பொறுத்திருந்தது போதும்.

மீண்டும் முன்னணி கடற்கரை நகராகவும் றயில் போக்கு வரத்து, நெடுஞ்சாலை வசதி, குடியிருப்புக்கள், கோவில்கள், தேவாலயங்கள், கல்வி நிலையங்கள் நிரம்பிய இடமாகவும் தனுஷ்கோடி உயிர்த்தெழ வாய்ப்பு இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக