பக்கங்கள்

திருக்குறள்

செவ்வாய், டிசம்பர் 13, 2011

சரத்பவார்!!!

பளார் பவார்!

அண்மையில் ஆத்திரக்கார இளைஞன் ஒருவன் கையால் கன்னத்தில் பரிசு வாங்கிய மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார், ஒரு சர்க்கரை மனிதர், இனிப்பானவர் என்பதால் அல்ல, இந்திய சர்க்கரைத் தொழிலை ஆட்டுவிக்கும் மராட்டிய மாநிலத்தின் பாராமதியை ஆட்டுவிப்பவர் என்பதால்.

பாராமதியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள கட்டேவாடி என்ற குக்கிராமத்தில் விவசாயிகள் அமைத்திருந்த கூட்டுறவுச் சங்கத்தில் வேலை பார்த்து வந்த கோவிந்தராவ் பவாருக்கு 11 குழந்தைகள். அந்தப் பதினோரு பேரில் ஒருவர் சரத்சந்திர பவார். அவ்வளவு எளிய குடும்பத்தில் பிறந்த அவரை இன்று அந்தப் பகுதி மக்கள் முதலாளி (சாகேப்) என்றுதான் அழைக்கிறார்கள். அந்த அளவு செல்வம் கொழிக்கிறது.

1940ல் பிறந்த பவார் (டிசம்பர் 12), புனேயில் உள்ள கல்லூரியில் படித்தார். படிப்பில் சுமார்தான். ஆனால், அரசியலில் ஆர்வம் அதிகம். அவர் முதலில் களம் இறங்கியது 16 வயதில், கோவாவின் விடுதலைக்கு ஆதரவாக மராட்டியத்தில் நடந்த போராட்டங்களில்.

தமிழ்நாட்டில் காமராஜரைப்போல் மராட்டியத்தில் மூத்த தலைவராக விளங்கிய ஒய்.பி.சவான்தான் இவரது அரசியல் குரு. அவரது அரவணைப்பில் 27 வயதில் மகராஷ்டிராவின் சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எமர்ஜென்சி காரணமாக இந்திரா காந்தி செல்வாக்கிழந்தபோது  காங்கிரசை உடைத்துக்கொண்டு வெளியேறி, பாஜகவின் முன்னோடியான ஜனசங்கத்துடன் சேர்ந்து கூட்டணி அமைத்து 1978ல் ஆட்சியைக் கைப்பற்றி, தனது 38வது வயதில் இந்தியாவின் பணக்கார மாநிலத்தின் முதல்வரானார். 1980ல் இந்திரா மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் செய்த காரியங்களில் ஒன்று, இவரது அரசை டிஸ்மிஸ் செய்தது.

அதையடுத்து நடந்த தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றியுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்திரா ஏ.ஆர்.அந்துலேயை முதல்வராக்கி, சவானை ஓரம் கட்டினார். ஆனால் சற்றும் அசராத சவான், மாநிலக் காங்கிரசின் மாநிலத் தலைவராகி நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு வென்றார்.
மராட்டியத்தில் சிவசேனா தலையெடுக்க ஆரம்பித்தபோது அதன் வளர்ச்சியைத் தடுக்க காங்கிரசிற்கு இவர்தான் தேவைப்பட்டார். மத்திய அமைச்சராக இருந்த இவரை ராஜீவ்காந்தி, மராட்டியத்தின் முதல்வராக ஆக்கினார்.

தில்லியிலும் மும்பையிலும் மாறி மாறிப் பதவி வகித்த சரத்பவார், சோனியா காங்கிரசிற்குத் தலைமையேற்றபோது, இந்தியாவில் பிறந்தவர்தான் காங்கிரசிற்குத் தலைமை ஏற்க வேண்டும் என போர்க்கொடி பிடித்து, காங்கிரசிலிருந்து வெளியேறி, அப்போதைய நாடாளுமன்றத் தலைவர் சங்மாவுடன் சேர்ந்து தேசியவாதக் காங்கிரசை ஆரம்பித்தார். ஆனால், விதி வலியது. இப்போது சோனியாவின் தலைமையை ஏற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தேசியவாதக் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது! காரணம், மத்தியிலும் மகாராஷ்டிரத்திலும் அதற்கு ஆட்சியில் கிடைத்திருக்கும் பங்கு.

முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் ஏராளமான ஊழல் புகார்களைச் சந்தித்தவர். ஒன்றும் நிரூபணமாகவில்லை. இன்னும் சிலவற்றில் வழக்கு நடக்கிறது. ஊழல் இவர் ரத்தத்தில் ஊறியது என அன்னா ஹசாரே ஒருமுறை சொல்லியிருக்கிறார்.

பவாரின் இன்னொரு ஆர்வம் கிரிக்கெட். டால்மியாவுடன் போட்டியிட்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரானார். பின், சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைமைப் பதவியும் வாய்த்தது.

சரத்பவாருக்கு ஒரே மகள் சுப்ரியா. நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். சகோதரி மகன் அஜீத் பவார், அரசியல் வாரிசாக உருவாகி வருகிறார். ஒரு சகோதரர் பிரதாப், ‘சகல்’ என்ற செல்வாக்கு மிக்க மராத்திய தினசரியை நடத்துகிறார்.

ஆரம்பத்தில் எளிய குடும்பம், பின் முதலாளி, பெரும் பதவிகள், ஊழல் குற்றசாட்டுக்கள், வாரிசு அரசியல், கைவசம் ஊடகம் என்ற எல்லாமும் இவர் காலத்தில் உருவான அரசியல்வாதிகள் பலரிடமும் காணப்படுபவைதான். ஆனால், இவருக்குக் கிடைத்த பரிசுதான் பலருக்குக் கிடைக்கவில்லை (சுக்ராம் ஒரு விதிவிலக்கு).  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக